ரோட்டோரமா முந்திரிப் பழம் வித்தா விட்ராதீங்க மக்கா.. என்னா டேஸ்ட்.. எவ்வளவு சத்து தெரியுமா?

May 09, 2024,05:36 PM IST

- பொன்லட்சுமி


"கையில என்னடே அது"


"முந்திரிப் பழம்"


"அய்யே எனக்குப் பிடிக்காது.. நீயே தின்னு"


"கழுதைக்குத் தெரியுமா கற்பூரத்தோட வாசனை.. எம்புட்டு டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா இது.. "




உண்மைதாங்க.. முந்திரிப் பழம் எவ்வளவு சுவையோ அதேபோல முந்திரிப் பழமும் அருமையாக இருக்கும். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க.. அதாவது சிலர் எப்பவும்  எல்லா விஷயத்திலும்  மடக் மடக்கென்று முந்திக் கொண்டு பேசுவார்கள்.. அவர்களைப் பார்த்து, "அவன் கிடக்கான் முந்திரிக்கொட்டை" அப்படின்னு.. அது எதுக்கு தெரியுமா..  பொதுவா எல்லா பழத்திலும்  கொட்டை உள்ளே  தான் இருக்கும் ஆனால் இந்த முந்திரி பழத்தில் மட்டும் தான்  வெளியில் இருக்கும்.. அதனால்தான் முந்திரிக்கொட்ட மாதிரி அப்படின்னு சொல்றாங்க.


முந்திரிப் பருப்பில் மட்டும் இல்லைங்க முந்திரி பழத்தில் கூட நிறைய விதமான சத்துக்கள் அடங்கியிருக்கிறது.. வாங்க அதுல என்னென்ன சத்துக்கள் அடங்கி இருக்குன்னு பாக்கலாம்.


பொதுவா  ஏப்ரல், மே மாத  கோடையில் தான்  இந்த பழத்தோட சீசன்  அதிகமாக இருக்கும்.. இந்தப் பழத்துல  கால்சியம், சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம் , விட்டமின் பி, இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற வகையான சத்துக்கள் அடங்கி இருக்கிறது... நார்ச்சத்து அதிகமாக நிறைந்த இந்த பழத்தில் நீரின் அளவும் அதிகமாக இருக்கும் இதனால் கோடையில் இந்த பழங்களை சாப்பிடும் போது உடம்பிற்கு குளிர்ச்சியை அளிக்கும்... ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது தொண்டையில் கரகரப்பு போன்ற உணர்வு ஏற்படும்.. அதனால் பலரும் இந்த பழத்தை விரும்ப மாட்டார்கள் ஆனால் இதன் ருசியை உணர்ந்தவர்கள் இந்த பழத்தை எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுவார்கள்.


இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. ஆரஞ்சு பழத்தை விட இந்தப் பழத்தில் ஐந்து மடங்கு  விட்டமின் சி சத்து அதிக அளவில் இருக்கிறது.. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அளவை கட்டுப்படுத்தி மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்கிறது.. செரிமான பிரச்சனை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்  இதிலிருந்து விடுபடலாம்.. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் எலும்பு வளர்ச்சிக்கும்  உடலில் தேவையில்லாமல் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றவும் இந்த பழம் மிகவும்  துணை புரிகிறது.




சின்ன வயசா இருக்கும் போது மே மாசம் ஸ்கூல் விடுமுறை விட்டதும் அப்பா அம்மா கூட சேர்ந்து முந்திரி பழம் (எங்க ஊர்ல இதுக்கு பேரு  கொல்லாம் பழம்) பறிக்கறதுக்கு தோட்டத்திற்கு போவோம்... தோட்டத்துக்கு உள்ள போனதுமே அந்த கொல்லாம் பழத்தோட வாசம் அப்படியே மூக்கை துளைக்கும் ... அந்த மரம் பெருசா வளர்ந்து அப்படியே மண்ணோடு சாஞ்சி  இருக்கும் வெயில் நேரத்துல அந்த மரம் நிழல்ல உட்கார்ந்து இருக்கும்போது  ஹப்பா என்ன ஒரு சந்தோசம்.. அந்தப் பழத்திலேயே மூன்று கலர் இருக்கும்.. ஒன்னு சிகப்பு கலர், அப்புறம் ஆரஞ்சு கலர் இன்னொன்னு  மஞ்சள் கலர்.


அதுல மஞ்சள் கலர் பழம் செம டேஸ்டா இருக்கும் அப்படியே மரத்துல இருந்து பறிச்சி பிரஷா அத கடிச்சு  சாப்பிடும்போது அந்த ருசியே வேற லெவலா இருக்கும். அந்தச் சாறு கையில எல்லாம்  வடியும் ஆனாலும் சாப்பிட்டுட்டு தான் இருப்போம்.. அதிகமா சாப்பிட்டா தொண்டை கரகரன்னு வரும். அதுக்காக வரும்போதே உப்பு மிளகாய்த்தூள் எல்லாம் கொண்டு வந்திருப்போம். அந்தப் பழத்தை அப்படியே துண்டு துண்டா வெட்டி அது கூட கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு சாப்பிட்டா அந்த ருசி அப்படி இருக்கும்.. இப்பவும் அதை நினைச்சு பார்த்தா நாக்கில் எச்சில் ஊறுது.. அப்படியே அந்த பழத்துல இருக்குற கொட்டையை திருகி  பக்கத்துல இருக்கிற விறகு எடுத்து வச்சி  நெருப்பு பத்த வச்சு அதுல அந்த கொட்டையை போட்டு சுட்டு சாப்பிடுவோம்... பழம் ஒரு டேஸ்ட்னா அந்த கொட்டை ஒரு டேஸ்டா இருக்கும்.


அந்தக் கொட்டையை சுடும் போது  அதுல இருந்து பால் மாதிரி ஒரு பிசின் வடியும். அது  நம்ம மேல பட்டுச்சுன்னா அப்படியே அந்த இடம் புண்ணாகிடும்.  அதனால பக்குவமா அதை சுடனும்.. ஆனாலும் அதுல இருந்து வரக்கூடிய அந்த பிசின் போல இருக்கும் பாலை காலில்  ஏதாவது முள்குத்தி வராமல் இருந்தால் அந்த இடத்தில் வைக்கும் போது வலி குறைந்து அந்த முள் வெளியே வந்து விடும்.. எங்க கிராமத்துல இன்னைக்கும் வயசான பாட்டிங்க இந்த வைத்தியத்தை கடைப்பிடிக்கிறாங்க.. அந்தக் கொட்டையை சுடும் போது அந்த இடமே ஒரு வாசமா இருக்கும்... கிராமத்துல,  இந்த முந்திரி கொட்டைக்கு ஒரு கதை சொல்லுவாங்க. அதாவது வெள்ளைக்காரங்க  நம்ம ஊருக்கு ஒரு தடவை வந்தாங்களாம். அப்போ ஒரு பாட்டி இந்த முந்திரிக்கொட்டையை சுட்டுட்டு இருந்தாங்களாம். அப்போ அந்த பாட்டி கிட்ட இருந்து அந்த வெள்ளைக்காரன் அதை வாங்கி சாப்பிட்டாங்களாம்.


அதோட டேஸ்ட் புடிச்சு போயி அவங்க கொண்டு வந்த கப்பலையே பாட்டிகிட்ட கொடுத்துகிட்டு இந்த பருப்பு வாங்கி சாப்பிட்டாங்களாம். அப்படின்னு சொல்லுவாங்க. அது உண்மையா என்னன்னு தெரியாது ஆனாலும் அந்த பருப்போட டேஸ்ட்டுக்கு கப்பல் என்ன அதுக்கு மேலேயே கொடுக்கலாம்னுதான் தோணும்.. முந்திரி மரத்தை பயிரிட்டு வளர்த்து அறுவடை செய்து அந்தப் முந்திரிப் பருப்பை  விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன் விவசாயிகளுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.. விளைச்சல் அமோகமாக இருந்தாலும் இதில் வேலைபாடு அதிகம் உள்ளது.. 




முதலில் அந்த கொட்டையை வெயிலில் உலர்த்தி காய வைத்து அதற்கு பின் அதை வறுத்து அந்த  பருப்பை வெளியில் எடுப்பது என்று வேலைப்பாடு அதிகம். ஆனால் அதற்கு கிடைக்கும் வருமானம் குறைவுதான்.. இதற்குக் காரணம் நம்மில் பலர் ஆன்லைன் மோகம்  கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் பொருட்களை வாங்குவது தான் கௌரவம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்... இயற்கை முறையில் ஆரோக்கியமாகவும், தரமாகவும் , விலை குறைவாகவும்  கிடைக்கக்கூடிய சிறு வியாபாரிகளிடமிருந்து  இது போன்ற பொருட்களை வாங்கும் போது இந்த வியாபாரிகளும் சரி இவர்களை நம்பி வேலை செய்யும் தொழிலாளர்களும் சரி பயனடைவார்கள்.. வெளிநாட்டு முதலாளிகள் மீதான ஆர்வத்தை விட்டு இவர்களைப் போன்ற விவசாயிகளையும் வியாபாரிகளையும் ஆதரியுங்கள்.


இப்பவும் கிராமப்புறத்திலும்  சரி ரோட்டோரத்திலையும் சரி இந்த பழத்தை கூறு வச்சு விக்கிறாங்க.. முடிஞ்ச அளவுக்கு இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்க. இயற்கையாக அதுவும் மலிவு விலையில் தான் இந்த பழம் கிடைக்கிறது.. அந்தந்த சீசனில் கிடைக்கும் இயற்கையான பழங்களை நாம் சாப்பிட்டு வந்தாலே நமது உடம்பில் நோய் என்பதே இருக்காது.. இப்போ இந்த முந்திரி பழத்தோட சீசன் ஆரம்பிச்சுருச்சு  இன்னும் என்ன யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க அடிக்கிற வெயிலுக்கு இந்த பழத்தை எங்க பார்த்தாலும் வாங்கி சாப்பிடுங்க... கூலா இருங்க!

சமீபத்திய செய்திகள்

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்.. மதுரை விநியோகஸ்தர்கள் அதிரடி தீர்மானம்

news

அகமதாபாத் விமான நிலையத்தில் பரபரப்பு... 4 இலங்கை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது!

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

அண்ணாமலையார் அருளால் மீண்டும் எம்எல்ஏ ஆகனும்.. திருவண்ணாமலைக்கு வந்த ரோஜா!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

வாரத்தின் முதல் நாளிலேயே அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. ரூ. 55,000ஐ கடந்தது தங்கம்!

news

சித்த வைத்தியம் முதல் பாட்டி வைத்தியம் வரை.. தவிர்க்க முடியாத கிராம்பு.. எவ்வளவு நல்லது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்