முரசொலி செல்வம் காலமானார்.. மாரடைப்பால் உயிர் பிரிந்தது.. முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Oct 10, 2024,12:48 PM IST

சென்னை:   முரசொலி பத்திரிகை ஆசிரியரும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் பெங்களூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. மாரடைப்பு காரணமாக முரசொலி செல்வம் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மறைந்த முதல்வர் கருணாநிதியின் 2வது அக்கா சணமுகசுந்தரியின் இளைய மகன்தான் முரசொலி செல்வம். இவரது அண்ணன்தான் மறைந்த முரசொலி மாறன். கருணாநிதியின் மகள் செல்வியைத்தான் முரசொலி செல்வம் மணந்துள்ளார். குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார் முரசொலி செல்வம்.


முரசொலியின் ஆசிரியராகவும் இருந்தவர் செல்வம். திரைப்படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, மூத்த பத்திரிகையாளராக, திமுகவின் முக்கியத் தலைவராக பல்வேறு தளங்களில் செயல்பட்டு வந்தவர் செல்வம்.  முரசொலி செல்வம் - செல்வி தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி விட்டது.


முரசொலி பத்திரிகையில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர். அதன் ஆசிரியராக இருந்தபோது சிலந்தி என்ற பெயரில் தொடர் நய்யாண்டிக் கட்டுரைகளை எழுதியவர். அந்தக் கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை. இன்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது முரசொலி செல்வத்தின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. அங்கு திமுகவினர் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி




முரசொலி செல்வம் மறைவு குறித்து அவரது மைத்துனரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:


முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.


தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் - செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம்.


கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.


அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். "முரசொலி சில நினைவுகள்" என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.


அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்து வைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.


சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.


என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்!


செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்