சென்னை: ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமெனவும், அவர்களது பணி நாட்களை மாத முழுமைக்கும் உயர்த்தி காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் ஊர்க்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது முதல் பாதுகாப்புப் பணி வரை அனைத்துவகைக் காவல் பணிகளிலும் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். புயல், வெள்ளம் போன்ற நெருக்கடி சூழ்ந்த இயற்கைப் பேரிடர் காலங்களிலும், தேர்தல் மற்றும் பெருந்திருவிழாக் காலங்களிலும் இரவு பகல் பாராத அவர்களின் அர்ப்பணிப்புமிக்கப் பணியென்பது மிகுந்த போற்றுதற்குரியது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலும், தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதிலும் ஊர்க்காவல் படையினரின் ஓய்வறியாத உழைப்பு என்பது ஈடு இணையற்றதாகும். ஆனால் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றுவரை வழங்கப்படவில்லை பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் வாடும் ஊர்க்காவல் படையினர், குடும்ப வறுமை தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், நாளொன்றுக்கு 150 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, 560 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டது.
ஆனால், அதுவரை 25 நாட்களாக இருந்த பணிநாட்களை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து முந்தைய அதிமுக அரசு வஞ்சித்தது. பின்னர், பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்தபோதும் அது போதுமானதாக இல்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஊர்க்காவல் படையினரின் பணி நாட்கள் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது பச்சை துரோகம் செய்ததால், ஊதியம் உயர்ந்த பிறகும், அதன் முழுப்பயனை பெறமுடியாமல் ஊர்க்காவல் படையினர் இன்றுவரை தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதுதான் கொடுமையின் உச்சம். அதுமட்டுமின்றி, வெறும் 10 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் ஊர்க்காவல் படையினர் ஊதியமின்றி மாதம் முழுவதும் வேலை செய்ய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது.
கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு 18000 ரூபாய் அளவுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உரிய ஊதியம் வழங்கப்படாததோடு, அவர்களுக்கென எவ்வித ஊக்கத்தொகையோ, ஓய்வூதியமோ இல்லாமல் பணிபுரிய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊர்க்காவல் படையினருக்கான பணியை வரன்முறைப்படுத்த உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும், உரிய மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கத் தவறியதே தற்போது ஊர்க்காவல் படையினர் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் முதன்மைக் காரணமாகும்.
ஆகவே, ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமெனவும், அவர்களது பணி நாட்களை மாத முழுமைக்கும் உயர்த்தி காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், காவலர்களுக்கு வழங்கப்படுவதுபோல் பயணப்படி, ஊக்கத்தொகை, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஊர்க்காவல் படையினருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!
யுபிஐ-யில் யாருக்காவது பணம் அனுப்பப் போறீங்களா.. முதல்ல இதைப் படிச்சுட்டுப் proceed பண்ணுங்க!
எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?
ஒலிம்பிக்ஸ் 2028 கிரிக்கெட்: இந்தியா, அமெரிக்கா IN.. பாகிஸ்தான் OUT.. வெஸ்ட் இண்டீஸ் DOUBT!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்கம் விலை குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
மூன்றாம் ஆடி வெள்ளி.. வளர்பிறை அஷ்டமி.. ஆகஸ்ட் முதல் நாளே சிறப்பு .. மிக சிறப்பு!
டிரம்ப் போட்ட புது வரி.. பல நாடுகளுக்கு பாதிப்பு .. இந்தியாவுக்கு என்ன வரி விகிதம் தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 01, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும்
நலம் காக்கும் ஸ்டாலின்.. உங்கள் குடும்பத்தின் நலன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
{{comments.comment}}