சென்னை: தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக பற்றியும், கூட்டணி விவகாரங்கள் பற்றியும் வெளியாகி வரும் பல்வேறு விவகாரங்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி சென்று, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தார். அவர் சென்னை திரும்பியதுமே நயினார் நாகேந்திரன் சென்று இபிஎஸ்.,ஐ சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்த பேசியதாக அவர் கூறி இருந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. விரைவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். ஆனால் அமித்ஷா மற்றும் நயினார் உடனான சந்திப்பின் போது, பாஜக.,விற்கு 50 முதல் 60 சீட்கள் ஒதுக்க வேண்டும். மூன்று அமைச்சர் பதவிகள் தர வேண்டும் என அதிமுக தரப்பிற்கு அழுத்தம் தரப்பட்டதாகவும் மீடியாக்களில் செய்தி பரவியது.

அதே போல் தேமுதிக.,விடமும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது தேமுதிக தரப்பில் தங்களுக்கு 30 சீட், ஒரு ராஜ்யசபா எம்.பி., மற்றும் தேர்தல் செலவுக்காக ரூ.300 கோடி தர வேண்டும் என கேட்கப்பட்டதாகவும், அதற்கு பாஜக கூட்டணி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், 10 சீட்கள் மட்டும் தருவதாக கூறிதாகவும், முடியாது என்றால் திமுக கூட்டணிக்கு தேமுதிக போவது என்றால் போகட்டும் என்று நினைப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின.
இது குறித்து இன்று நயினார் நாகேந்திரனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் இதுவரைக்கும் அந்த மாதிரி எந்த அழுத்தமும் யாருக்கும் கொடுக்கவில்லை"எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிமுகவுடன் அமைச்சரவை பங்கு தொடர்பாக எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்பதையும், வெளிவரும் தகவல்கள் வெறும் யூகங்களே என்பதையும் அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அதிமுக கூட்டணியில் எத்தனை சீட் தந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம். சீட் முக்கியமல்ல, யார் முதல்வராக வரக் கூடாது என்பதே முக்கியம் என நயினார் நாகேந்திரன் நேற்றும் கூறி இருந்தார்.
அடுத்ததாக, தேமுதிக (DMDK) கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது வரை தேமுதிகவுடன் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறினார். இருப்பினும், பாஜகவின் கூட்டணியை நோக்கிப் பல்வேறு கட்சிகள் வந்து கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கூட்டணிக்கு முதல் கட்டமாக அன்புமணி ராமதாஸ் (பாமக) வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். பிற கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதை அவர் உறுதிப்படுத்தினார்.
கூட்டணி முடிவுகள் எப்போது இறுதியாகும் என்ற எதிர்பார்ப்பிற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், தமிழர்களின் பாரம்பர்ய நம்பிக்கையான "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியை மேற்கோள் காட்டினார். ஜனவரி மாதப் பிற்பகுதியில் (தை மாதம்) கூட்டணி குறித்த ஒரு தெளிவான மற்றும் முழுமையான சித்திரம் கிடைக்கும் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், பாஜக தனது பலத்தை அதிகரிப்பதிலும், ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அமைச்சரவை பங்கீடு போன்ற விவகாரங்கள் இரண்டாம் கட்டம் தான் என்பதையும், தற்போதைக்குத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே களம் அமைப்பதாகவும் பாஜக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
{{comments.comment}}