ஓடி விளையாடு பெண்ணே

Jun 10, 2025,12:15 PM IST

- முனைவர் ராணி சக்கரவர்த்தி


பெண்கள் மிகவும் மென்மையானவர்கள் என உறுதியாக நம்பும் இந்தியாவில் இருந்து வந்திருந்த ஒரு பெண், சிட்னி நகரில் 2000ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியப் பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் வலிமையானவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தினார். அவர் தான் கர்ணம் மல்லேஸ்வரி.


இவரின் இந்த வெற்றி, இந்திய விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கமும், உற்சாகம் அளித்தது.  இவரின் தொடர்ச்சியான மேரி கோம், சானியா மிர்சா, சாய்னா நெவால், சிந்து, ஷாக்சி மாலிக், மனு பாக்கர், ஷீத்தல் தேவி, அவனி லெகரா ஆகியோர் தங்களுடைய முயற்சி மற்றும் வெற்றியால் இந்தியப் பெண்களின் வீரத்தை உலகிற்கு நிரூபித்துள்ளனர். இத்தனை கோடி பெண்கள் வாழும் நாட்டில் சில பெண்களால் மட்டுமே தடைகளை உடைத்து வெற்றி பெற முடிந்தது. அதற்குக் காரணம் பெண்கள் மீதான நம் சமுதாயத்தின் கண்ணோட்டம்.


பெண் உடல் அளவில் மென்மையானவள், மைதானத்தில் விளையாடுவதால் கருத்து போய்விடுவார்கள், உடல் மென்மை போய்விடும், முடியை வெட்டி விடுவார்கள், பல இடங்களுக்குப் பயணிக்க வேண்டிய வரும், நல்ல மாப்பிள்ளை கிடைக்காது எனப் பல நீர்த்துப்போன காரணங்கள் சொல்லி அவளின் விளையாட்டு ஆர்வத்தைக் குழி தோண்டி புதைத்து விடுகிறோம். மகளைப் பரதநாட்டிய வகுப்பிற்கும், மகனை விளையாட்டு பயிற்சிக்கு அழைத்துப் போகும் பெற்றோரைத் தான் இன்னும் அதிகம் பார்க்க முடிகிறது. உரிய வயதில், திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமே, பெண்ணின் தலையாய பணி, அதைத் திறம்படச் செய்யும் பெண் மட்டுமே சிறந்த பெண், எத்தனை சாதனைகள் செய்தாலும், கடைசியில் அவள் வர வேண்டிய இடம் சமையல் அறைதான் போன்ற போக்கற்ற எண்ணமே, பெண்ணேப் பிணைத்திருக்கும் சங்கிலிகள். இவைகள் உடைத்தெறியப்பட வேண்டும். பெண்ணின் விளையாட்டுக் கனவைச் சிதைப்பது, அவளை கருவிலேயே சிதைப்பதைப் போன்றது.


விளையாட்டு, பெண்களை உடல் அளவிலும் மன அளவிலும் உறுதிப்படுத்தும். எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தைரியத்தைத் தரும். விளையாட்டு ஒழுக்கத்தைக் கொடுக்கும். இலக்கு நோக்கியப் பயணத்தைப் பயிற்றுவிக்கும். தனித்தன்மையுடன் விளங்குவார்கள். கூடுதலாக, விளையாட்டு வீராங்கனைகளுக்கு அரசு பணி, எளிதில் கிடைக்கும். விளையாட்டு ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். உதவித்தொகையும் கிடைக்கும். காவல்துறை, ரயில்வே துறை மற்றும் பல அரசு துறைகளில் வேலை கிடைக்கும்.




பாராலிம்பிக் வில் வித்தைப் போட்டியில், இரு கைகளும் இல்லாத, கிராமத்துப் பெண்ணான ஷீத்தல் தேவியின் அபார வெற்றி, பல மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்திருக்கிறது. பாராலிம்பிக் 2024ல் நம் இந்திய நாடு வென்ற 29 பதக்கங்களில், 10 பதக்கங்கள், நம் வீராங்கனைகள் வென்று, நாங்கள் வீட்டினுள் அடங்கிக் கிடக்க பிறந்தவர்கள் இல்லை, சாதனைப் பெண்கள் என இந்த சமுதாயத்திற்கு நிரூபித்து விட்டார்கள். பல இடர்களையும், இன்னல்களையும் தாண்டி, தன் கடின உழைப்பால், மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை சென்று, பதக்கத்தை இழந்த, நமது இந்தியத் தாயின் தவப்புதல்வி, வினேஷ் போகத்,  இந்திய பெண்களின் மனவலிமையையும், போராடும் குணத்தையும் நிரூபித்துள்ளார்.


என் மகள் கவி ரக்ஷனா, ஒரு துப்பாக்கி சூடும் வீராங்கனை. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிக்காக,  என் மகளுடன் நான் செய்த பயணங்கள், நான் சந்தித்த மனிதர்கள், நாங்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள், எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமைந்தது. பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. இந்திப் பயணங்கள், எனக்கும் என் மகளுக்குமான நட்பை, புரிதலை ஆழமாக்கியது. அவளின் பேரார்வமும், விடாமுயற்சியும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வருடத்திற்கு, ஆறு அல்லது ஏழு முறை டெல்லி, போபால், பூனே, திருவனந்தபுரம் எனத் தாயும் மகளும் பறந்து கொண்டே இருப்போம். மொழி தெரியாத ஊரில் கையில் சிறு கத்தியுடன் நடுநிசிப் பயணம், தமிழ்நாடு இல்லத்தில் இடம் கேட்டு காத்துக் கிடப்பது, எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் ஆட்டோக்காரனிடம் பேரம் பேசி அவனை குழப்புவது, கைப்பேசியைத் திருடு கொடுத்துவிட்டுத் தேடி அலைவது என ஒவ்வொரு அனுபவமும், எங்களைச் செதுக்கி, தைரியலட்சுமிகளாக மாற்றியது.


அத்தனை இடர்களின் வலிகளும், என் மகளை வெற்றி மேடையில் பார்க்கும் போது, கண்ணீராய்க் கரைந்து ஓடிவிடும். அவள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்று, எனக்கு ஆனந்த மகுடம் சூட்டி இருக்கிறாள். படிப்பிலும் கெட்டிக்காரியான என் மகள், அரசு கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்று மருத்துவராகியுள்ளார்.


எங்கள் நண்பர் ஒருவர், அரசு கல்லூரிப் பேராசிரியர். அவர் என்னிடம் கேட்டார், இவ்வளவு பணம், நேரம், ஆற்றலை இந்த விளையாட்டில் உங்கள் பெண் செலவழிக்கிறாளே? அதனால் என்ன பயன்? விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவில்லை, அரசு வேலைக்கும் போகவில்லை, அரசு ஊக்கத்தொகையோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை? பின் எதற்காக விளையாட விடுகிறீர்கள்? பெருமைக்காகவா? என்று கேட்டார். நான் சொன்னேன், ஆம் பெருமைக்காகத் தான், என் மகளின் பெருமைக்காக, என் பெருமைக்காக, என் நாட்டின் பெருமைக்காகத்தான். என் மகள் விரும்பி விளையாட்டைக் கேட்டாள் கொடுக்கிறேன். அவள் விளையாட்டிற்குப் பதில் வைர, தங்க நகைகளைக் கேட்டிருந்தால், நான் அதைக் கொடுத்திருப்பேன். என் மகள் இன்று தனித்துவமாக திகழ்வது இந்த விளையாட்டால் தான். எத்தனை தடைகள் வந்தாலும், என் மகளின் கனவுக்கு, ஆசைக்குத் துணையாக நிற்பேன், இதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றேன். இது அவருக்கான பதில் மட்டுமல்ல. பெண்ணின் விளையாட்டுக் கனவை கலைத்து, வீட்டுக்குள் அடைக்க நினைக்கும் அனைவருக்கும்மானது.


என் மகளின் கனவு ஒலிம்பிக் மைதானத்தில் தன் வெற்றியால், நமது தேசியக்கொடி உயர்த்தப்பட்டு, நம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதே. நிச்சயம் முயற்சி திருவினையாகும். நீங்களும், உங்கள் மகளை மைதானத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அவளின் கனவு, ஆசை அதுதான் என்றால், ஊக்கப்படுத்துங்கள். ஒருநாள், அவள் நம் நாட்டையும், உங்களையும் பெருமைப்படுத்துவாள்.


பெண்மையை போற்றுவோம்!


கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முருகனுக்குக் கிடைக்காமல் போன ஞானப்பழத்தின் கதை தெரியுமா?

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 31, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்