- ந. தீபலட்சுமி
மாணவர்களின் படைப்பாற்றல் என்பது அவர்களின் சிந்தனை திறன், கற்பனை சக்தி மற்றும் புதிய யோசனைகளை உருவாக்கும் திறனை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும்.
படைப்பாற்றல் கொண்ட மாணவர்கள் சாதாரண விஷயங்களையும் புதுமையாக அணுகி, தனித்துவமான தீர்வுகளை கண்டுபிடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
கல்வியில் படைப்பாற்றலை ஊக்குவிப்பது, மாணவர்களின் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
கலை, இலக்கியம், அறிவியல் போன்ற பல துறைகளில் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை இது வழங்குகிறது.
தேர்வுக்கூடங்களும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் இடமாக இருக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு?
ஓர் ஆசிரியராக, பல நேரங்களில் மாணவர்களின் சில செயல்களை நான் ரசிப்பது உண்டு.
முக்கியமாக தேர்வு அறைகளில்!

நன்கு படித்து நூறு மதிப்பெண்கள் எடுக்கும் நோக்கத்துடன் இருக்கும் மாணவர்கள் தேர்வு அறைகளில் கருமமே கண்ணாக இருப்பர். நேரம் போதவில்லையே என மனத்தில் ஒருவித பயத்துடன் பதில்களை எழுதிக் கொண்டிருப்பர்.
ஆனால் நம்" சூப்பர் ஸ்டார்ஸ்?"
எப்படியாவது பாஸ் செய்தால் போதும் என்ற எண்ணத்தில் தெரிந்ததை எழுதிவிட்டு தெரியாததை எழுத சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டும், யாரிடமாவது எப்படியாவது பதில்களை கேட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கும் இங்கும் கண்களை அலைபாய விட்டுக் கொண்டும், தன் விடை தாள்களை காண்பிக்காமல் ஆசிரியருக்கு பயந்து குனிந்த தலை நிமிராமல் இருக்கும் தன் நண்பனை மனதிற்குள் திட்டிக் கொண்டும் அமர்ந்திருப்பர்.
ஆகா! ஆகா!
அவர்கள் வளைந்தும், நெளிந்தும், பார்த்தும்,பார்க்காமலும், தெரிந்தது போலவும், தெரியாமலும் அமர்ந்திருக்கும் அழகைப் பார்க்கும் பொழுது பொங்கி வரும் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்படுவேன்.
அவர்கள் நேரம் போகவில்லையே என நொந்து கொள்வர். அந்த நொடிகளில் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாற்றல் வெளிப்படுமே!
அப்பப்பா.... கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அவனுடைய கேள்வித்தாள் ஓவியங்களால் நிரம்பி இருக்கும்..
அவனுடைய டெஸ்க் முழுவதும் கவிதைகளால் நிரம்பி இருக்கும்..
வட்டம் போடு, வட்டம் போடு என கணித ஆசிரியர் சொல்லும் பொழுதெல்லாம் வராத வட்டம், காம்பஸ் உதவியால் பேப்பர் முழுவதும் நிரம்பி இருக்கும்.
ஆங்கில ஆசிரியர் சொல்லும் பொழுது எழுத வராத ஆங்கில எழுத்துக்கள் அவனுடைய கைகளில் அழகாக, அருமையாக பச்சைக் குத்தப்பட்டு இருக்கும்.
வீட்டில் இருக்கும் பொழுது அம்மாவின் சொல் பேச்சை கேட்காதவன் கைகளில்,"I LOVE AMMA" என எவ்வித பிழையும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும்.
பென்ச்சில் அமர்ந்திருந்தாலும், எங்கிருந்து எப்படி எடுத்திருப்பான் என்றே தெரியாது.. சிறு கற்கள்... முன் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் மீது தூக்கிப் போட்டு விட்டு, அப்பாவி போன்ற முகத்துடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்க்க வேண்டுமே....
விடைத் தாள்களைக் கட்டுவதற்காக நூலினை கொடுத்தால், அதில் அந்த கற்களை கட்டி, அறிவியல் ஆராய்ச்சி செய்வான்... பெண்டுலம் செயல்படும் விதம்....
தன்னுடைய எழுது பொருட்களைக் கொண்டு கட்டுவான் பாருங்கள்... உலகின் THE TOP MOST BUILDINGS அங்கு தான் உருவாகி இருக்கும்.
அதுமட்டுமல்ல, மிகச் சிறந்த MESSENGER ஆகச் செயல்படுவதில் வல்லவர்கள். இப்பொழுது சொல்லுங்கள்,மிகச் சிறந்த படைப்பாளிகள் தேர்வுக் கூடங்களில் தானே உருவாக்கப்படுகிறார்கள்?
(ந. தீபலட்சுமி, ஆங்கில ஆசிரியர் ஆசிரியர், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
விளையும் பயிர்!
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
படைப்பாற்றல்!
சிந்தனைச் சிதறல்.. இருக்கும் வரை தாங்கிப் பிடிப்போம்!
Srirpiya Short Story: நிழலும் நிலவுமாய்..!
உங்க வாழ்க்கையை முழுமையாக வாழுங்க.. Let your life be the proof
விருந்தோம்பல்.. தமிழர்களின் தனித்துவம்!
{{comments.comment}}