புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

Sep 18, 2026,04:51 PM IST

- பசுங்கிளி இளங்கோவன்


ஓம் நமோ நாராயணா


புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விசேஷமான மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் வீடு சுத்தம் செய்து குளித்து விரதம் இருந்து பெருமாளை பக்தியுடன் பூஜை செய்வது வழக்கம். 


பெருமாளுக்கு நைவேத்தியமாக பொங்கல், புளியோதரை, சுண்டல், அப்பம், அவல் வைத்து வணங்கலாம். பெருமாளுக்கு பிடித்த துளசி மாலை, தாமரை, மல்லிகை, செவ்வந்தி போன்ற மாலைகள் சாத்தலாம். வீட்டில் வழிபடுபவர்கள் வழிபடலாம். 


கோவிலுக்கு செல்பவர்கள் கோவிலுக்கு தேவையான அபிஷேக பொருட்கள், துளசி, மலர்மாலைகள், பிரசாதங்கள் கொண்டு சென்று வணங்கலாம்.


புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது மூலம் குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி, வளம் பெருகும்.


பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணன் உலகைக் காக்கும் கடவுள். அவருடைய துணைவி தாயார் மகாலட்சுமி செல்வமும் வளமும் கருணையும் அவரின் அடையாளம். புராணப்படி பாற்கடல் கடையும் போது மகாலட்சுமி தோன்றினார். அவர் ஸ்ரீமன் நாராயணனை தன் துணையாக மணந்து கொண்டார். மகாலட்சுமி கருணையின் வடிவமானவள். வெள்ளிக்கிழமைகளில் கனக தாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட்டால் அனைத்து நலன்களும் பெறலாம்.


பெருமாளின் பத்து அவதாரங்கள்




1. மச்ச அவதாரம்: சோமுகா சூரனை அழிக்க மீனாக அவதாரம் எடுத்தார்.

2. கூர்ம அவதாரம்: மந்திரமலையை கடலில் மூழ்காமல் தாங்கி பிடிக்க ஆமையாக அவதாரம் எடுத்தார்.

3. வராஹ அவதாரம்: இரணியாட்சன் என்ற அரக்கனை அழிக்க வராஹ அவதாரம் எடுத்தார்.

4. நரசிம்ம அவதாரம்: தன் பக்தனான பிரகலாதனை இரணியனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார்.

5. வாமன அவதாரம்: மகாபலி மன்னனின் ஆணவத்தை அழிக்க வாமன அவதாரம் எடுத்தார்.

6. பரசுராம அவதாரம்: ஜமதக்னி என்ற முனியின் மகனாய் பிறந்து தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்த பரசுராம அவதாரம் எடுத்தார்.

7. ராமாவதாரம்: ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும் அநியாயத்தை வேரறுக்கவும் ராம அவதாரம் எடுத்தார்.

8. பலராம அவதாரம்: திருமால் தனது சுயவடிவான ஆதிசேஷன் தனது அண்ணனாக உருவெடுக்க செய்ததாக வரலாறு.

9. கிருஷ்ண அவதாரம்: குருக்ஷேத்திர யுத்தத்தில் அநீதியை அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார்.

10. கல்கி அவதாரம்: கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீமைகளையும் அழிப்பார் என்பது கூற்று.


இந்த புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுடைய அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.


"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல கோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!

உன் சேவடி செவ்வி திருக்காப்பு"


என்று பாடி அனைவரும் பெருமாளை வழிபடுவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்