இராதாவும் விஜியும்.. ஒரு நிமிடக் கதை (18)

Sep 18, 2026,04:01 PM IST

- பூரணவள்ளி சேகர்


விஜியும் ராதாவும் முதல் வகுப்பிலிருந்தே ஒன்றாகவும் நன்றாகவும் படித்து வந்தனர். மதுரை மேலூரை அடுத்த ஒரு குக்கிராமத்தில் இருவரும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.


அவர்கள் இருவரின் பெற்றோருமே விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தனர். மிகவும் ஏழ்மையான நிலையிலும் தம் பிள்ளைகளை செம்மையாக வளர்த்தனர். பள்ளிப் படிப்பு அதே ஊரில் உள்ள பள்ளியில் படித்தனர். மேநிலைக்  கல்வியைப்   பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்றே  படித்தனர்.


மேல்நிலைப் படிப்பைப் படித்து முடித்ததும் மேலூரில் உள்ள கல்லூரியில் இருவரும் சேர்ந்து அறிவியல் பட்டப் படிப்பு படித்தனர். அப்போதுதான் படிப்பிற்காக முதலில் பேருந்தில் பயணம் செய்து படித்தனர்.


இருவரும் தாம் உண்டு தம் படிப்பு உண்டு என்றே இருந்தனர். அவர்களின் ஏழ்மை அவர்களைப் படிக்க மட்டுமே உந்தியது.




ஆன்ட்ராய்டு மொபைலோ டீவியோ அவர்களிடம் இல்லை.  எனவே படிப்பில் சிறந்திருந்தனர். விஜியும் ராதாவும் படிப்பில் முழு கவனம் செலுத்தியதால் கல்லூரியில் முதலிடம் பிடித்துத் தேர்ச்சி பெற்றனர்.


வேலைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இருவருக்கும் பெங்களூரிலுள்ள ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. விஜியின் வீட்டிலும் ராதாவின் வீட்டிலும் பெற்றோர் மிகவும் பயந்தனர்.

தொலைவில் உள்ள கம்பெனிக்கு எப்படித் தனியாக அனுப்புவது என்று குழம்பினர். பெற்றோர்களுக்கு  சமாதானம் கூறிய இருவரும் பெங்களூருக்குப் பயணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.


பயணம் செய்யும்  நாளில்  ரிசர்வேஷன் கம்பார்ட்மென்டில் ஒட்டியிருந்த பெயர்களைத் தேடிக் கொண்டே வரும் போது  S6 16 இராதாகிருஷ்ணன் S6 27 விஜயகுமார் எனத் தங்கள் பெயரைப் பார்த்ததும் நிம்மதியடைந்து தங்களின் இருக்கையைத்  தேடி அமர்ந்து பெருமூச்சு விட்டபடி பயணத்தைத் தொடங்கினர் இராதாகிருஷ்ணனும் விஜயகுமாரும்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்