சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதே நாளில்தான் கடந்த 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார்.
டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடும் கருத்து மோதல்கள் நிலவி, கட்சியினர் பெரும் கவலையுடன் இருக்கும் நிலையில் இந்த 37வது பிறந்த நாள் வந்து சேர்ந்துள்ளது. இருப்பினும் பாமகவினர் கட்சி நிறுவன நாளை ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர்.
டாக்டர் ராமதாஸ், வன்னியர் சமுதாய மக்களின் உரிமைகளுக்காக 1980 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் தொடர் போராட்டங்கள் மற்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடந்த பெரும் கிளர்ச்சிகளின் விளைவாக, 1989 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்தில், சுமார் 10 லட்சம் மக்களைத் திரட்டி பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார். இக்கட்சி இன்று தனது 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு: பாட்டாளி மக்கள் கட்சி, குறிப்பாக வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து போராடி வருகிறது. குறிப்பாக இட ஒதுக்கீடு என்றாலே பாமகதான் என்று கூறும் அளவுக்கு பல முக்கியமான இட ஒதுக்கீடுகளைப் பெற்ற கட்சி பாமக.
20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என பல்வேறு இட ஒதுக்கீடுகளைப் பெறுவதில் பாமக முக்கியப் பங்காற்றியுள்ளது. தேசிய அளவில் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியல் இனத்தவருக்கு 15% மற்றும் பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு ஆகியவற்றை வென்றெடுத்ததில் பாமகவின் பங்கு குறிப்பிடத்தக்கது.
கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, பாமக மக்களின் நலனுக்கான பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பெற்றுத் தருவதில் பாமகவின் பங்களிப்பை ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைகள் போன்ற மக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் பாமக ஆதரிக்கிறது. பாமக மத்திய அமைச்சரவையில் இருந்தபோதுதான் 108 ஆம்புலன்ஸ் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது. அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
மத்திய அமைச்சரவைகளில் பாமகவைச் சேர்ந்த ஏ.கே.மூர்த்தி, வேலு, தலித் எழில்மலை உள்ளிட்டோர் இருந்தபோது தமிழ்நாட்டுக்குப் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக ரயில்வே திட்டங்கள் பல அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு நிறைய வந்தன என்பது முக்கியமானது.
பாமக தமிழக சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசில் பலமுறை கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்துள்ளது. தலித் எழில்மலை, ஏ.கே.மூர்த்தி, வேலு, என்.டி. சண்முகம், அன்புமணி ராமதாஸ் போன்றோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
தமிழை வளர்ப்பதற்காக 'பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை'யை நிறுவியதுடன், 'பசுமைத் தாயகம்' என்ற தன்னார்வ அமைப்பு மூலம் சமூக நலச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த 36 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக 51 ஆவணங்களை வெளியிட்ட ஒரே கட்சி பாமக என்று ராமதாஸ் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் சக்திகளில் ஒன்றாக திகழும் பாமக சமீப காலமாக தடம்புரண்டு பல்வேறு தடுமாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பல முக்கிய தோல்விகளை தேர்தல்களில் சந்தித்துள்ளது. அதற்கு மேலாக டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் பிளவும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. பாமகவின் எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் நான் தான் என ராமதாஸ் அண்மையில் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 37வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்குச்சாவடி முகவர் குழு அமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடும் சோதனைக் காலத்தில் இருக்கும் பாமக இதையெல்லாம் தாண்டி மீண்டும், வருகிற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவாகும் கனவில் பாமகவினர் இருந்து வருகின்றனர்.
தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!
நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்
நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி
பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது
விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
{{comments.comment}}