ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு.. 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்குக.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

Feb 12, 2025,02:20 PM IST

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது. செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள்  மூன்று மாத காலகட்டத்தில் பணி மாற்றம் செய்துவரும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டு உறுதி செய்யப்பட்ட பனிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:




தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத்  துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 38 இ.ஆ.ப. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது  அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த  ஜனவரி 31-ஆம் தேதி 31 அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில்,  அடுத்த 10 நாட்களில் 38 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது  தேவையற்றது.


அரசு நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான அனைத்து அதிகாரங்களும்,  உரிமைகளும்  அரசுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள்  அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாறாக நிர்வாகத்தின் செயல்பாட்டை முடக்குவதாக இருக்கக் கூடாது.  இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த எந்த வகையிலும் உதவாது.


எடுத்துக்காட்டாக, கடந்த ஜூலை மாதத்தில் தான் சுற்றுச்சூழல் துறை  செயலாளராக இருந்த  சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராகவும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை மருத்துவத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார்  சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் மாற்றப்பட்டனர்.  அடுத்த 6 மாதங்களில் இருவரும் தங்களின் பழைய துறைகளுக்கே மாற்றப்பட்டுள்ளனர். அப்படியானால், என்ன காரணத்திற்காக அவர்கள்  ஏற்கனவே இடமாற்றம்  செய்யப்பட்டனர்? இப்போது என்ன காரணத்திற்காக அவர்கள் மீண்டும் பழைய துறைகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்?  என்ற வினா மக்கள் மனங்களில் எழுகிறது. அவற்றுக்கு விடையளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.


கடந்த அக்டோபர் மாதத்தின் மின்வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட நந்தகுமார்,  உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட கோபால்,  கடந்த ஜூலை மாதத்தில் பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட மங்கத்ராம் சர்மா, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட குமார் ஜெயந்த்,  கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட  இராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 3 முதல் 6 மாதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வளவு குறுகிய இடைவெளியில் ஓர் அதிகாரியின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிட முடியும்?


பள்ளிக்கல்வித்துறை  செயலாளராக இருந்தவர்கள் கடந்த சில மாதங்களில் 4 முறை மாற்றப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கோபால் கடந்த சில மாதங்களில் 4 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்துக்கும் என்ன அடிப்படை?  வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த இராஜேஷ் லகானி அடுத்த சில வாரங்களில் மத்திய அரசுப் பணிக்கு  சென்று விட்டார். மேலும் பல இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் மத்தியப் பணிக்கு செல்ல விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தமிழ்நாட்டில் பணியாற்ற விரும்பவில்லை என்று தெரிகிறது. இவை நல்ல அறிகுறிகள் அல்ல.


ஒரு துறையில் செயலாளராக நியமிக்கப்படுபவர் அத்துறை குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு குறைந்தது இரு மாதங்கள் தேவை. அதன் பிறகு தான் அவர்கள் முழு வீச்சில் செயல்படத்  தொடங்குவார்கள். அதற்குள்ளாகவே அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய பணியில் அமர்த்தும் போது அரசு நிர்வாகத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். இத்தகைய அணுகுமுறையை  தமிழக அரசு கைவிட வேண்டும்.


காவல்துறை தலைமை இயக்குனர் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அந்தப் பதவியில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு  உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவோருக்கு 2 ஆண்டுகள் உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அரசுத் துறை செயலாளர் பதவிகளும்  காவல்துறை தலைமை இயக்குனர் பணிக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை தான் என்பதால் அவற்றுக்கும் 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

BREAKING: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன்.. சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த முடிவு!

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பிரதமர் மோடியின் ரஷ்யா சுற்றுப்பயணம் ரத்து!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

news

தவெகவில் self discipline.. 100% முக்கியம்.. ஸ்ட்ரிக்டா பாலோ செய்யனும் ஃபிரண்ட்ஸ்..விஜய்!

news

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு!

news

இந்து சமய அறநிலையத் துறை சார்பில்.. 70 வயது பூர்த்தி அடைந்த 100 தம்பதிகளை கௌரவிக்க திட்டம்!

news

சந்தானம் நடிப்பில்..ஹாரர், காமெடி கலந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ‌..!

news

அவல் பாயாசம் பண்ணுங்க.. தமிழ்நாட்டு ஸ்டைலில் ஆக்ஷயா திருதியையைக் கொண்டாடுங்கள்!

news

அட்சய திருதியை வந்தாலே தங்கம்தானே.. நகை வாங்க சென்னைதான் டாப்பாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்