உயிரின் உயிரே.. உனக்கோர் மடல்!

Oct 09, 2026,01:17 PM IST

- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


அன்பின் நிறையே!

உயிரின் உயிரே


உனக்காக நான் எழுதும் மடல் . இன்று உலக அஞ்சல் நாளாம். 


மடல்..... இதை நினைத்தாலே 1989 இல் நீ எனக்கு எழுதிய முதல்மடல் என் நினைவில் நிழலாடுகிறது...


அழகிய குடும்ப உறவில் அன்னை, தந்தை, அண்ணன்மார் அனுப்பிய மடல்களை விட உனது மடல் வாசம் வீசியதே.... உறவுகளின் பாசப்பிணைப்பில் அன்பின் பரிணமிப்பு தெரிந்தாலும் உன் மடல் அன்பின் உச்சம் உணர்த்தியதே...


பகட்டாய் வாழவில்லை என்றாலும் அன்பு மனங்களோடு.... ஆசையோடு.... வளர்க்கப்பட்ட என் வாழ்க்கையில் வசந்தமென வந்தாய் நீ... வளர்ந்த குழந்தையாய் இருந்த என்னை நீ அரவணைத்து ஆக்கமும் தந்தாய் ஊக்கமும் தந்தாய் ... தவறுகள் செய்யும்போது தந்தையாய் கண்டித்தும் உண்ணாநோன்பிருந்தால் அன்னையாய் அள்ளியணைத்தும் மனச் சங்கடங்களின் போது நல் தோழனாய் தோள்சாய்த்தும் துணையாய் இருந்தாய்....




மாலை நேர நடையும் இறகுப் பந்தாட்டமும் நம் இருவரின் விருப்பமன்றோ? சதுரங்கத்தில் என்றுமே வெற்றியாளன் நீயே... நான்தோற்கக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுப்பாயே.... 


மதுரை வீதிகளை நடந்தே நாம் கடந்த நாட்கள் அலைபாய்கிறது ... எனக்கு பிடித்ததெல்லாம் உனக்கும் பிடிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே. இருப்பினும், எனக்காக நீ வாங்கி வரும் கொடிக்காயும் நாவலும் பலாப்பழமும் இன்னும் நினைவில் இனிக்கிறதே.... மல்லியும் பிச்சிப்பூவும் கண்டால் உன் நினைவால் அவை மணக்கிறதே....


உனக்குள் தான் எத்தனை திறமை .உன் அறிவில் ஒரு சிறு பகுதிதான் நான் . இலக்கியமோ இசையோ உன் ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டதே உனது தாக்கம் என்னுள்ளும் உண்டு.


கால ஓட்டத்தில்.... என் உயிரே.... நீயின்றி நான்... இன்று தனியே பயணிக்கின்றேன். நீ இருந்திருந்தால் மாற்றங்கள் வேறாயிருக்குமோ? துவளாது மீண்டிருப்பேனோ? அன்பு மகனுக்கும் ஆறுதலாய் இருந்திருக்குமோ?


இருப்பினும் நீ கொடுத்த உறுதியும் உன் வாழ்த்தும் என்னோடு என்றும் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன். 


குறிப்பு: (ஏ....மேகமே! விண்ணுலகில் என்னவரைக் கண்டால் கூறிவிடு. அவரின் அவள் கவித்தாயின் மகளாக நடைபயில ஆரம்பத்திருக்கிறாள் என்று)


இப்படிக்கு,

 உனைச் சேரக்

காத்திருக்கும் ,

 அன்பு மனைவி,

 செ.சாந்தி சின்னத்தம்பி


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்