சென்னை : தமிழ் சினிமாவில் பல பாடல்கள், அது ரிலீசான காலத்தில் பிரபலமானதை விட இன்று தான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. சமீப காலமாக வரும் படங்களில் பல பழைய படங்களின் பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டும், படத்தில் ஏதாவது ஒரு காட்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி பயன்படுத்தப்படும் பழைய பாடல்களை தேடிபிடித்து செம ஹிட் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
அதை விடவும் முக்கியமாக ஒரிஜினலாக பாடிய பாடல்களை விட அதை பாடிய மற்றவர்களின் பாடல்கள் சில நேரம் சூப்பர் டூப் ஹிட்டாகி விடும். அப்படித்தான் தக்லைப் படத்தில் இடம் பெற்ற பாடகி தீயின் முத்த மழை பாடலை விட, அதை மேடையில் பாடிய சின்மயி வெர்ஷன் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து அதிர வைத்தது. அப்படித்தான் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பாடல்களை மட்டுமல்ல, வெளி உலகிற்கு தெரியாத பல பாடகர்களையும் தேடிப் பிடித்து, அவர்களை பிரபலமாக்குவதையும் சமீப காலமாக டிரெண்டாக்கி வருகிறார்கள் சோஷியல் மீடியா ரசிகர்கள். அப்படி கடந்த சில நாட்களாக வைரலாகி, பிரபலமானவர் தான் சத்தியன் மகாலிங்கம். இந்த பெயரை இந்தப் பாட்டு வைரலாவதற்கு முன்பு வரை பலரும் கேள்விப்பட்டிருக்க கூட மாட்டார்கள். ஆனால் 90 ஸ் கிட்ஸ் மட்டுமின்றி பலரின் காதல் உணர்வுகளை மெல்லியதாக வருடி, இதயத்தில் காதல் நினைவுகளை அலைபாய செய்ய வைத்த பாடகர்களில் சத்தியனும் ஒருவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்ப மறுத்தாலும் அது தான் உண்மை.
கடந்த சில நாட்களாக 1999ம் ஆண்டு, மேடை கச்சேரி ஒன்றில் Dusky தோன்றம் கொண்ட இளைஞர் ஒருவர், காதலர் தினம் படத்தில் வரும் "ரோஜா ரோஜா" என்ற பாடலை, அனைவரையும் மெய் மறக்க வைக்கும் வகையில் பாடிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் செம வைரலானது. யார்டா இந்தப் பையன் என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தார் இந்தப் பாடகர். காரணம், மிகவும் கடினமான இந்தப் பாட்டை அலாதியாக, அசால்ட்டாக இவர் உணர்வுப்பூர்வமாக பாடியதுதான் காரணம். விடுவார்களாக நம்மவர்கள்.. யார் இவர் என்று தேடிப் பிடித்துக் கண்டுபிடித்து விட்டனர்.
இந்த பாடலை பாடியவர் சத்தியன் மகாலிங்கம் என்ற இளைஞர் தான். இவர் இப்போது ஒரு பின்னணிப் பாடகராக இருக்கிறார். இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல முகங்கள் கொண்ட மனிதராக இருக்கிறார். பல முக்கியமான சூப்பர் ஹிட் பாடல்களையும் கூட பாடியுள்ளார் சத்தியன்.
கலக்கப்போவது யாரு என்ற வசூல் ராஜா MBBS பாடலை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்தப் பாடலைப் பாடியவர் சத்தியன்தான். அதேபோல கழுகு படத்தில் இடம் பெற்ற ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், அட பாஸு பாஸு என்ற சூப்பர் ஹிட் பாஸ் என்கிற பாஸ்கரன் பாடல், விஜய்யின் துப்பாக்கி படத்தில் இடம் பெற்ற குட்டி புலி கூட்டம், சரோஜா படத்தில் இடம் பிடித்த தோஸ்த் படா தோஸ்த் பாடல், மாற்றான் படத்தில் இடம் பெற்ற தீயே தீயே என பல பாடல்களை அசகாயமாக பாடி அசத்தியவர் சத்தியன்.
இப்படி சத்தமில்லாமல் பாடி அசத்தியவர் இப்போது இப்போது எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என இசை ரசிகர்கள் தீவிரமாக தேடி, அவரை கண்டிபிடித்து, இவரின் தற்போதைய ரோஜா ரோஜா பாடலின் வெர்சனையும் கொண்டாடித் தீர்த்துக் கொண்டுள்ளனர். ஒரிஜினலாக பாடிய உன்னிகிருஷ்ணன் இந்தப் பாடலுக்குப் பிறகு எப்படிக் கொண்டாடப்பட்டாரோ அதேபோல இப்போது சத்தியனை மக்கள் கொண்டாடுகிறார்கள். அது சத்தியனுக்கே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த அன்புக்கு நன்றி கூறி வீடியோவும் போட்டுள்ளார்.

பாடகராக மட்டுமல்லாமல் ஒரு இசையமைப்பாளராகவும் தனி முகம் கொண்டவர் சத்தியன் மகாலிங்கம். இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ் மற்றும் இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். "விழித்திரு" என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனி இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு இசையமைப்பாளர் என, ஏழு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் உலகம் முழுவதும் பல மேடை நிகழ்ச்சிகளை தனது பாடல்களால் அலங்கரித்துள்ளார். இதற்காகவே ASTHRAAS என்ற இசைக் குழுவையும் உருவாக்கி அதன் மூலம் பல இசைப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அஸ்த்ராஸ் குழுவில் இடம் பெற்று மனோ, உன்னி மேனன், அனுராதா ஸ்ரீராம், மது பாலகிருஷ்ணன் என பல பிரபல பாடகர்கள் மட்டுமல்லாமல் வளரும் பாடகர்கள் பலரும் கூட பாடியுள்ளனர்.
இது போன்ற தமிழை தெளிவாக உச்சரிக்க தெரிந்த, மனதை இதமாக்கும் இசையுடனான குரலை கொண்ட பாடகர்களுக்கு ஏன் தமிழ் சினிமாவில் எப்போதும் வாய்ப்புக்கள் மிக குறைவாகவும், அரிதாகவும் மட்டுமே கிடைக்கிறது என்று தெரியவில்லை. தற்போதைய சினிமாக்களில் காதை கிழிக்கும் இரைச்சலுடனான இசை, புரியாத வார்த்தை கொண்ட பாடல்கள், அப்படியே புரிந்த வார்த்தைகளில் இருந்தாலும், அது என்ன வார்த்தை என்றே கேட்க முடியாத அளவிற்கு ஓவரான இசை அந்த பாடகரின் குரலை காணாமல் போக செய்து விடுகிறது. இதனால் தற்போது வரும் படங்களில் இருக்கும் எந்த பாடலும் ரசிகர்கள் மனதில் நிற்பது கிடையாது.
2025 ம் ஆண்டில் இப்போது ஒன்பது மாதங்கள் ஓடி விட்டது. இந்த ஒன்பது மாதங்களில் வெளியான தமிழ் படங்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிட்டான பாடல் என்று எதையுமே சொல்லி விட முடியாது. ஆனால் 80, 90 களில் வந்த இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்கள் இப்போதும் கூட பலரையும் முணுமுணுக்க வைத்து, ரிங்டோனாகவே வைத்துக் கொள்ளும் அளவிற்கு ரசிக்கிறார்கள். அந்த பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவதாக இசை, குரல், பாடல் வரிகள் என அனைத்தும் சேர்ந்த நிறைவான கலவையாக இருந்ததே இதற்கு காரணம். யாருடைய இசை, யாருடைய குரல், எந்த படம் என யோசிக்க வைக்காமல், கடந்த கால நினைவுகளை மனதில் மெல்லியதாக நிழலாட வைத்து விட்டு செல்கின்றன.

இப்போது வெளியாகும் பல படங்களில் அப்போதைய இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களையும் எடுத்தாண்டு, காப்பிரைட் பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்கிறார்கள் இன்றைய படைப்பாளிகள் என்பது சுவாரஸ்யமான வேதனை என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது!
சத்தியன்களை உடனுக்குடன் கொண்டாடுங்கள், தொடர்ந்து கொண்டாடுங்கள்.. இசையின் புதல்வர்கள் அவர்கள்.. அவர்களைக் கொண்டாடாமல் வெறும் சத்தத்தைக் கொண்டாடுவது.. சத்தியமாக நியாயமே இல்லைங்க..!
வாழ்த்துகள் சத்தியன்.. இன்னொரு சூப்பர் ரவுண்டு வாங்க.. கேட்க எங்க காதுகள் ரெடி!
Image Credits:
Satyan Mahalingam/FB
Asthraas/FB
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}