எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!

Oct 30, 2026,10:42 AM IST

- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்


ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் ஏகாம்பரம் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் நம்பினர்.  அதனால் அவர் எதை சொன்னாலும் ஏற்றுக் கொண்டு  விடுவார்கள். காரணம்  அந்த ஊர் மக்களைவிட அவர்தான் அதிகமாக படித்துள்ளார். 


என்ன படித்துள்ளார் தெரியுமா? வெறும் ஒன்றாம் வகுப்புதான். மற்றவர்கள் யாரும்   பள்ளிக்கூடம் பக்கம்  தலை வைத்து படித்ததில்லை. அதனால் ஒன்றாம் வகுப்பு  மட்டுமே  படித்திருக்கும் ஏகாம்பரம்  அனைத்தையும்  அறிந்தவர் என நம்பினர்.


ஏகாம்பரத்திற்கும் ஒன்றும் தெரியாதுதான். இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எதையாவது சொல்லி விடுவார். மக்களும் அதை ஏற்றுக் கொண்டு விடுவர்.


ஒரு நாள் அந்த ஊர் வழியே ஒரு யானை மெதுவாக சென்றது. அவ்வளவு பெரிய கருப்பு   உடலை மக்கள்  அதுவரை பார்த்ததில்லை. அதனால் அதைப் பார்த்தும் மக்கள் பயந்து விட்டனர்.




உடனே அவர்கள் ஏகாம்பரத்திடம் சென்று ஏகாம்பரம் அண்ணே, உடனே வாங்க. கருப்பா ஒரு உருவம் போகுது. அது என்னன்னு தெரியலை. பயமாக இருக்குது. நீங்க வந்து பார்த்து அது என்னன்னு சொல்லுங்க என்றனர்.


ஏகாம்பரம் உடனே அவர்களுடன் சென்றார். யானையை பார்த்தார். அவருக்கும் அது என்னவென்று தெரியாது. இருந்தாலும்  ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். அப்பொழுதுதானே தனக்குள்ள புகழை தக்க வைத்துக் கொள்ள முடியும்.


அவர் மக்களிடம் கூறினார்.


ஃபூ, இதுக்கு போயா பயந்தீங்க. இது என்ன தெரியுமா? நேத்து ராத்திரி இருட்டு வந்ததில்லையா. அதெல்லாம் காலையில சூரியன் வந்ததும் போயிடுத்து. அதுல கொஞ்சம் இருட்டு இப்ப மெதுவா போயிண்டிருக்கு. அவ்வளவுதான்.


அதைக்கேட்ட மக்கள் ஏகாம்பரம் அண்ணன் சொன்னா அது சரியாகத்தான் இருக்கும் என்று  நிம்மதி அடைந்தனர்.


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்