காணாமல் போன கனவுலகம்!

Oct 30, 2026,10:54 AM IST

- சியாமாளா வெங்கட்ராமன்


சென்னையிலிருந்து காணாமல் போன சில நிகழ்வுகள் 


நான் சிறுமியாக இருந்த சில நிகழ்வுகள் தற்போது காணாமல் போய்விட்டது சென்னையில்..


காலை 6 மணிக்கு மூங்கில் தட்டில் பூவரச இலையில் சுடச்சுட இடியாப்பத்தை வைத்து இடியாப்பம் என்று கூறிக்கொண்டு வரும் குரல் தற்போது கேட்கவில்லை.


தெருவில் விறகு அடுப்பு மூட்டி மண் சட்டியில் ஆப்பம் சுட்டு அதற்கு சைட் டிஷ் ஆக பாயாவையும் வைத்து கொடுக்கும் ஆயாக்களை பார்க்க முடியவில்லை. விடியற்காலையில தொடங்கு தொடங்கு என்று தண்ணீர் அடிக்கும் குழாயின் ஓசை கேட்கவில்லை.


காலையில் அரைக்கீரை முளைக்கீரை என்று கூவும் கீரைக்காரியின் குரல் கேட்கவில்லை. சிறு கூடையில் ஒரு பையை வைத்துக்கொண்டு அதில் கருவேப்பிலை கொத்தமல்லி அன்றாட சமையலுக்கு தேவையானதை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு கைப்பிடி அரிசியை வாங்கிக் கொண்டு செல்லும் பெண்மணிகளை பார்க்க முடியவில்லை.




தெருவுக்குத் தெரு ஒரு சிறிய மளிகை கடை, அதாவது நாடார் மளிகை கடை காணாமல் போய்விட்டது. அங்கு மளிகை வாங்க வரும் குழந்தைகளுக்கு கை நிறைய கடைக்காரர் பொட்டுக்கடலை கொடுப்பதும் அதை ஆர்வமுடன் சாப்பிடும் குழந்தைகளையும் பார்க்க முடியவில்லை . மளிகை கடையில் தேங்காய் பத்தை கீற்று போட்டு விற்பதை பார்க்க முடியவில்லை. இரண்டு தெருவுக்கு ஒரு விறகு தொட்டி என்று அழைக்கப்படும் நாடார் விறகு கடையும் காணாமல் போய்விட்டது. 


விடியற்காலை ஒவ்வொரு வீட்டிலும் மாட்டை ஓட்டிக் கொண்டு வந்து அம்மா பால் என்று அழைக்கும் பால்காரர் குரல் கேட்கவில்லை. இறந்து போன கன்றுக் குட்டியின் உடலில் வைக்கோலை அடைத்து பசுவை ஏமாற்றும் வேலை காணாமல் போய்விட்டது .


பழைய துணிக்கு எவர்சில்வர் பாத்திரம் என்று கூறும் குரல் வாசலில் கேட்கவில்லை. குடை ரிப்பேர் செருப்பு ரிப்பேர் என்ற குரல்கள் கேட்கவில்லை. பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சாக்கு பையை போட்டுக் கொண்டு உட்காந்து செருப்பு தைப்பவரை பார்க்க முடிவதில்லை.

 

இரவில் ரா பிச்சை என்று குரல் கொடுக்கும் பிச்சைக்காரர்கள் தற்போது இல்லை. கை ரிக்ஷா போய் சைக்கிள் ரிக்ஷா வந்து பாரிஸ் கார்னரில் மட்டும் பார்க்க முடிகிறது. மற்ற இடங்களில் அது போன இடமே தெரியவில்லை.


பள்ளிக்கூட வாசலில் கமர்கட் நெல்லிக்காய் எலந்த பழம் விற்கும் வியாபாரிகள் காணாமல் போய்விட்டார்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக மெட்ராஸ் பாஷை என்று சொல்லப்படும் மெட்ராஸ் தமிழ் மொழி வழக்கிலிருந்து போய்க்கொண்டிருக்கிறது.


உங்க மனசிலும் இதுபோல ஏதாவது லிஸ்ட் இருக்கா.. இருந்தால் கமெண்ட்டில் சொல்லிச் செல்லுங்களேன்.


(ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரான சியாமளா வெங்கட்ராமன், நெய்வேலி என்.எல்.சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் மற்றும் சமையல் குறிப்புகளை எழுதிவரும் இவர், எழுதிய 'யாதுமாகி நின்றாள்' சிறுகதைக்காக 'தமிழ்த்தாய்' விருதைப் பெற்றுள்ளார். மேலும், சென்னை ராமபுரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பைத் தொடங்கி அதன் தலைவியாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சமூகத் தொண்டு செய்து வருகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்