தாயும் சேயும்

Oct 09, 2026,01:06 PM IST

- சு.மலர்விழி


பசுமையான செடிகளும் கொடிகளும் சூழ்ந்த அழகான வீட்டில் மாலா தன் சிறுமி மீனுக்குட்டியுடன் வசித்து வந்தாள். அவர்களின் வீட்டைச் சுற்றியிருந்த மரங்களில் பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.


ஒருநாள் காலையில் மாலா வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, ஒரு மரத்தின் கீழே சிறிய புறாக்குஞ்சு ஒன்று விழுந்து கிடந்தது. அதைக் கண்டதும், “ஐயோ! பாவம், இந்தக் குஞ்சு கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்டதே!” என்று பதற்றத்துடன் கூறிக்கொண்டே ஓடிவந்தாள்.


அவளது குரலைக் கேட்ட மீனுக்குட்டியும் அங்கே ஓடி வந்தாள்.


“என்னம்மா, என்ன நடந்தது?” என்று கேட்டாள்.


“பார், இந்தப் புறாக்குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது. இதற்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,” என்றாள் மாலா.




மாலா அந்தக் குஞ்சை மெதுவாகப் பரிசோதித்தாள். அதற்குப் பெரிய காயம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள். பின்னர், ஒரு சிறிய கூடையில் மென்மையான பழைய துணியை விரித்து, அதில் புறாக்குஞ்சைப் பாதுகாப்பாக வைத்தாள். அதற்குத் தேவையான கவனிப்பை அளித்தாள்.


சில நாட்களில் புறாக்குஞ்சு சுறுசுறுப்பாக மாறியது. அது மெதுவாகச் சிறகுகளை அசைத்துப் பார்த்தது. மீனுக்குட்டி அதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தாள். அந்தக் குஞ்சின் கீச்...கீச்... என்ற சத்தத்தை கேட்ட தாய் புறா வீட்டின் ஜன்னலுக்கு வெளியே வந்து அடிக்கடி குரல் கொடுத்துக்கொண்டிருந்தது. ஜன்னலில் வலை இருந்ததால் அதனால் வீட்டிற்குள் வர முடியவில்லை.


“அம்மா, அந்தப் புறா ஏன் இப்படி அடிக்கடி கத்துகிறது?” என்று மீனுக்குட்டி கேட்டாள்.


“அது தன் குஞ்சைத் தேடிக்கொண்டிருக்கலாம். தன் குழந்தையைப் பிரிந்திருக்கும் தாய்க்கு எவ்வளவு கவலையாக இருக்கும்!” என்றாள் மாலா.


இதைக் கேட்ட மீனுக்குட்டி, “அம்மா, நாம் இந்தக் குஞ்சை நம்முடனேயே வைத்துக்கொள்ளலாமே! நாம்தானே இதைப் பாதுகாத்தோம்?” என்று கேட்டாள்.


மாலா அன்புடன் அவளிடம், “மீனுக்குட்டி, நாம் இந்தக் குஞ்சைப் பாதுகாத்தது நல்ல செயல்தான். ஆனால், அதன் தாயுடன் இருப்பதுதான் அதற்கு மிகவும் நல்லது. தாய்ப்புறா அதற்குப் பறக்கவும், உணவு தேடவும் கற்றுக்கொடுக்கும். நம்மால் அதற்குத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொடுக்க முடியாது அல்லவா? அதனால், இந்தக் குஞ்சை அதன் தாயிடம் சேர்த்துவிடுவோம்,” என்றாள்.


அம்மாவின் விளக்கத்தைக் கேட்ட மீனுக்குட்டி, தன் விருப்பத்தைவிடப் புறாக்குஞ்சின் நலனே முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டாள்.


மாலா அந்தக் குஞ்சைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று, அதன் தாய் புறா அணுகக்கூடிய பாதுகாப்பான இடத்தில் வைத்தாள். தாய் புறா அருகில் வந்து குஞ்சைத் தன்னுடன் அழைத்துச் சென்றது. இதைப் பார்த்த மீனுக்குட்டி மகிழ்ச்சியடைந்தாள்.


“அம்மா, அந்தக் குஞ்சு இனி அதன் அம்மாவுடன் மகிழ்ச்சியாக இருக்கும்!” என்றாள்.


மாலா புன்னகையுடன், “ஆம், மீனுக்குட்டி! பிற உயிர்களிடம் அன்பு காட்டுவது மட்டுமல்ல, அவற்றின் இயல்பான வாழ்க்கைக்கு உதவுவதும் நமது கடமை,” என்றாள்.


(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்