- சுதா திருநாராயணன், திருச்சி
நாக்பூர் பள்ளியில் படித்த போதும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. எலிமெண்டரி வகுப்பில் படித்த போது பத்தரை மணிக்கு ஸ்கூல் விட்டவுடன் நேரே வீட்டிற்கு போகாமல் தெருவில் உள்ள லாந்தக்கம்பங்களை எல்லாம் பிரதக்ஷிணம் செய்து கொண்டும், நடுவில் வரும் மைதானத்தில் சிறிது நேரம் விளையாடிவிட்டும், சிலர் வீட்டு வாசல்களில் இருக்கும் ஊஞ்சலில் போய் ஆடி விட்டும், பிறகுதான் வீட்டிற்கு போவோம். சில சமயம் நான் தனியாகவே இவற்றையெல்லாம் செய்வேன்.
என் அண்ணா ஹை ஸ்கூலில் இருந்தான். எனக்கு ஸ்கூல் விடும்பொழுது அவனுக்கு ஆரம்பிக்கும். அவன் சில சமயம் என்னை பார்த்து "தாத்தா பாட்டி ஊர்ல இருந்து வந்து இருக்கா " என்று பொய் சொல்லி என்னை வேகமாக வீட்டுக்கு ஓடிப் போகும் படி செய்து விடுவான்.
சனிக்கிழமைகளில் நாக்பூர் பள்ளியில் mass PT என்று அனைத்து வகுப்பு மாணவர்களும் பங்கேற்கும் ட்ரில் நடக்கும். காலை 7 மணிக்கு பிரேயருக்கு முன்பு நடக்கும். முதல் இரண்டு வகுப்புகளுக்கு இது கிடையாது. கடைசி வரிசையில் நின்று கொண்டு நைசாக ட்ரில்லை சரியாக செய்யாமல் டிமிக்கி கொடுப்போம். அப்புறம் பனிஷ்மென்ட் வாங்குவோம்.
நான் சராசரி மாணவியாக தான் இருந்தேன். ஆனால் ஸ்வாமி டீச்சர் Wren and Martin புத்தகம் வைத்துக் கொண்டு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்ததால் ஆங்கிலத்திற்கு பலமான அடித்தளம் அமைந்தது. பூனா வந்த பிறகு சீதா ஐயர் மேடம் எங்கள் ஆங்கிலத்தை நன்கு உறுதிப்படுத்தினார். கணக்கில் முட்டை மார்க் கூட வாங்கி இருக்கிறேன். அதனால்தான் எஸ்எஸ்எல்சியில் கணக்கு படிக்கவில்லை . பூனா எஸ்எஸ்எல்சி போர்டில் நான் படித்த போது கணக்கு கம்பல்ஸரியாக இருக்கவில்லை.

நாக்பூர் பள்ளியில் ப்ளூ ஸ்கர்ட் வைட் ஷர்ட் அணிந்து டை கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். இவற்றை செக் செய்வதற்கு இரண்டு மாணவி மானிட்டர்கள். ஸ்கூலில் ஒரு முறை ஆனுவல் டே நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் வகுப்புக்கள் சில நடைபெறவில்லை. இதை பயன்படுத்தி சிலர் சீருடை அணியாமல் வந்துவிடுவர். நானும் அது போல் ஒரு நாள் அம்மா புதிதாக தைத்திருந்த பாவாடையை அணிந்து கொண்டு வந்து விட்டேன். மானிட்டர்களிடமிருந்து ஒளிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். டை செக் செய்யும் பெண் "ஏன் டை(tie) போட்டுக்கல?" என்றாள். நான் "யூனிஃபார்மே போட்டுக்கலையே " என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு மானிட்டர் என்னை துரத்துவதை விட்டு விட்டாள். மறுநாள் கிளாஸ் டீச்சரிடமிருந்து வார்னிங் வந்தது, யூனிபார்ம் இல்லாமல் வந்தால் வீட்டிற்கு திரும்பி போய் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறிவிட்டார். பூனா பள்ளியில் கணக்கு கற்பித்த பாஸ்கர ஐயர் "உங்களை எல்லாம் எவ்வளவு திட்டினாலும் கணக்கு மண்டைல ஏறாது. நீங்கள் எல்லோரும் வைய வைய வைரக்கல் திட்ட திட்ட திண்டுக்கல்" என்பார். பைதாகரஸ் தியரத்தை நாங்கள் பைத்தியக்கார தியரம் என்போம். பத்தாவது வரை தான் நான் கணக்கு படித்தேன்.
பூனா பள்ளியில் பத்தாவது வரை கணக்கு கற்பித்த திரு. பாஸ்கர ஐயர், சம்ஸ்கிருதம் கற்பித்த திரு. ராமச்சந்திர ஐயர், தமிழ் மேடம் திருமதி தர்மாம்பாள், சயின்ஸ் டீச்சர் மிஸஸ். குமார், மிஸ். நூர்பானு, மிஸ். அமீன் பேப்பர்வாலா, ஆங்கிலம் கற்பித்த இன்னொரு டீச்சர் Mrs. கோப்பிகர், ஹிந்தி ஆசிரியை Mrs.கேல்கர் ஆகியோர் மறக்க முடியாதவர்கள்.
மிஸஸ் கேல்கர் அறிமுகப்படுத்திய ஹரிவன்ஷ் ராய் பச்சனின் (அமிதாபச்சனின் தந்தை) ஹிந்தி கவிதைகள் பின்னாளில் நான் எம் ஏ ஹிந்தி படிக்க தூண்டுகோலாக அமைந்தது. எப்படியோ எஸ் எஸ் எல் சியில் இரண்டாம் வகுப்பில் பாஸ் செய்து விட்டேன். எங்களுக்கெல்லாம் அப்பொழுது ஏழு சப்ஜெக்ட்ஸ். அதில் மூன்று மொழிகள் - ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ்.
அதேபோல் நாக்பூர் மிசஸ் ஸ்வாமி டீச்சர், பூனா சீதா ஐயர், மிஸஸ் கோப்பிகர் ஆகியோர்தான் ஆங்கிலத்தை பிழையின்றி எழுத அடித்தளம் அமைத்துத் தந்தனர் என்றால் அது மிகையாகாது.
2022 அக்டோபரில் பூனாவில் எங்கள் வகுப்பு (batch) மாணவ மாணவிகளின் ரியூனியன் மீட்டிங் நடந்தது. அதற்கு எங்கள் ஆசிரியை மிஸஸ் கோப்பிகரும் வந்திருந்தார். ஆசிரியை என்னைவிட அழகாகவும் இளமையாகவும் இருந்தது எனக்கு மிகுந்த பெருமை.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
{{comments.comment}}