ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)

Sep 04, 2026,02:41 PM IST

-சுதா திருநாராயணன்


அருமையான டாபிக். ஒன்றாவது வகுப்பில் இருந்து எட்டாம்  வகுப்பு வரை நான் படித்தது நாக்பூர் சரஸ்வதி வித்யாலயா. பின்னர் 11 ஆம் வகுப்பு,  SSLC வரை படித்தது பூனா or புணே சரஸ்வதி வித்யாலயா யூனியன் ஹை ஸ்கூல். பெயர் தான் ஒன்றே தவிர மேனேஜ்மென்ட்  வேறு. நாக்பூரில் முதல் இரண்டு வகுப்புகள் தரை தான். மூன்று நான்கு வகுப்புகளில் எங்கே அமர்ந்தேன் என்று நினைவில்லை.


ஐந்தாம் வகுப்பில் இருந்து ஹை ஸ்கூல். நான்காம் வகுப்பு வரை பள்ளி நேரம் காலை ஏழு மணியிலிருந்து பத்தரை மணி வரை மட்டும்தான். ஐந்தாம் வகுப்பில் இருந்து பதினோரு மணியிலிருந்து மாலை நாலரை மணி வரை. ஐந்தாம் வகுப்பு வந்தவுடன் ஏதோ ரொம்ப பெரிய மனுஷி  ஆகிவிட்டது போல் பெருமிதமாக இருந்தது.


என் வகுப்பில் சுமார் 40 மாணவ மாணவிகள். இடமில்லாமல் கடைசி பெஞ்சில் ஏழு பேர் நெருக்கியடித்துக் கொண்டு 

அமர்ந்திருந்தோம். ஆசிரியரிடம் சென்று ஏழு பேருக்கு அமர இடம் இல்லை என்று ஹிந்தியில் சொல்லத் தெரியாமல் “ஹம் ஸாத் லோக் பைட்டே ஹைங். அச்சா நஹீ” என்றவுடன் அவர் பியூனை வரவழைத்து இன்னொரு பென்ச் போடச் செய்தார். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளில் மாணவர்கள் ஒரு வரிசையிலும் மாணவிகள் இன்னொரு வரிசையிலுமாக அமர வைக்கப்பட்டனர். 


பாய்ஸ் கேர்ள்ஸ் பேச மாட்டோம். பெண்களோ பையன்களோ பக்கத்தில் உள்ளவர்களுடன்  அதிகமாக பேசினால் டீச்சர் ஒரு பையன் ஒரு பெண் என்று ஒரே பெஞ்சில் மாற்றி மாற்றி அமர வைத்து விடுவார். நான் என் பக்கத்து வீட்டு பையன் ரவியுடன் வீட்டில் நிறைய விளையாடுவேன். அவனும் என் வகுப்பு தான். ஆனால் பள்ளிக்கூடத்தில் அவனுடன் பேச மாட்டேன். “ஸ்கூல்ல வந்து என்னோட பேசாதடி எனக்கு கூச்சமா இருக்கு” என்பான். (இன்னமும் திரு.ரவி என் ஸ்கூல் குரூப் மூலம் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்)




நாக்பூர் பள்ளி கணக்கு வாத்தியார் கன்னத்தை வலிக்க வலிக்க கிள்ளுவார். அவரிடம் அடி உதை கிள்ளு வாங்காத மாணவ மாணவியரே கிடையாது. சீதாலட்சுமி டீச்சர், ஸ்வாமி டீச்சர், Mrs.மஜும்தார், Mrs. சிங், Mrs.வர்மா, காக்டே Sir போன்ற பல நாக்பூர் ஆசிரியர்களை மறக்க இயலாது. ரொம்ப நாள் வரை நான், கிட்டத்தட்ட 15, 16 வயது வரை டீச்சர் என்றால் பெண் ஆசிரியை, ஸார்  என்றால் ஆண் ஆசிரியர்   என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் ஆசிரியைகளை டீச்சர் என்றும் ஆசிரியர்களை சார் என்றும் அழைப்போம். 


நாக்பூரில் ஆசிரியர்களிடம் நிறைய அடி வாங்கியதுண்டு, பெஞ்சு மேல ஏறி நின்றதுண்டு. வகுப்பில் பேசியதற்காக வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டதும் உண்டு. 


பூனா 1970களில்  ஒரு அருமையான நகரம். நாங்கள் வசித்த ஹடப்சர் என்ற இடத்தில் இருந்து இரண்டு பஸ் பிடித்து நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.  7:45 to 12.45 பள்ளி நேரம். காலை 7.45  மணிக்கு முதல் பள்ளி மணி அடிக்கும். காலை 6:15 அல்லது ஆறரைக்குள் வீட்டை விட்டு கிளம்பி விடுவேன். குளிர்காலத்தில் குளிர் பின்னி எடுக்கும். சுவாரசியமான சம்பவங்கள் பல. 


நான் உயரம் என்பதால் கடைசி பென்ச். நிறைய குறும்பு கொஞ்சமாக படிப்பு. பூனா பள்ளியில் ஆசிரியைகளை மேடம் என்று அழைப்போம். சீதா ஐயர் என்ற ஆங்கில ஆசிரியை டெரர். திட்டும் வசவும் அடியும் அவரின் ஏகோபித்த உரிமை. பானு என்ற பெண் வகுப்பை கவனிக்காததற்காக பளாரென்று கன்னத்தில் அறை வாங்கினாள். அதேபோல் பலமுறை  அறை வாங்கி கடுப்பில் இருந்த கிளாஸ்மேட்ஸ் ஒன்று சேர்ந்து திட்டமொன்று தீட்டினர். 


பானு, சீதா ஐயர்  மேடத்திடம் சென்று “நீங்க அடிச்சதால என்னோட காது ரிங் எங்கயோ போய் விழுந்துடுச்சு காணல. அப்பா ரொம்ப திட்டுவாங்க. “ என்று புகார் அளித்தாள். சீதா ஐயர் “நான் உன்னை கன்னத்துல அடிக்கல, தோள்பட்டைல தான் அடிச்சேன்” என்று சாதித்தார். ஆனால் மொத்த வகுப்பும்  பானுவுக்கு ஆதரவாக நின்றதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


பியூனை அழைத்து டெஸ்க் பெஞ்ச் எல்லாவற்றையும் அகற்றி தேடச் செய்தார். அது இருந்தால் தானே கிடைக்கும்? இரண்டு நாட்கள் கழித்து எங்கள் கிளாஸ்ரூம் ஜன்னலுக்கு வெளியில் விழுந்து விட்டதாக கூறி சமாளித்து விட்டோம்.  அதன் பிறகு மீண்டும் ஒரு வாரம் கழித்து வகுப்பை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்த ஒரு மாணவனை கன்னத்தில் அடிக்கச் சென்ற சீதா ஐயர் அவனிடம் கூறினார் “நீ காதுல ஏதாவது போட்டிருந்தா கழட்டி கையில வச்சுக்கோ. அப்புறம் நான் அடிச்சேன், காணாமல் போய்விட்டது அப்படின்னு சொல்லாதே” என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு பளார் என்று அறைந்தார்.


சீதா ஐயர் மாணவ மாணவிகளிடம் “நான் உங்கள் அம்மா மாதிரி” என்று கூறியதால், அவர் எங்கள் வகுப்பை கடந்து செல்லும் போதெல்லாம் நாங்கள் எல்லோரும் “அம்மாஆஆஆஆஆ” என்று குரல் கொடுப்போம்.


நான் சீதா ஐயரிடம் அறை வாங்கவில்லை, ஆனால் என் அனுபவம் வித்தியாசமானது. என் கையெழுத்து  மஹா மோசமாக இருக்கும். கோழிக் கிறுக்கல். கட்டுரை நோட்டுகளை சமர்ப்பித்திருந்தோம். முதலில் என் நோட்டு புத்தகம். ஏற்கனவே பள்ளிக்கு மிகவும் கோபமாக வந்திருந்தார்  சீதா ஐயர்.  முதலில்  என் நோட்டைப் பார்த்தவுடன் கோபம் அதிகமாகி விட்டது. “என்ன ஹேண்ட் ரைட்டிங் இது? You are bringing discredit to the school.” என்று கூச்சல் இட்டு என்னை தரதரவென்று இழுத்துக்கொண்டு ஹெட் மாஸ்டர் ரூமுக்கு சென்றார்.


ஹெட் மாஸ்டர் சீதா ஐயரின் கோபம் தாங்க முடியாமல் என் தந்தையின் அலுவலக நம்பருக்கு போன் செய்து “Your daughter is bringing discredit to the school. Ridiculous “ என்று கூறவும் என் தந்தை அலறி புடைத்துக் கொண்டு சைக்கிளில் ஸ்கூலுக்கு வந்து விட்டார். மோசமான கையெழுத்துக்காக தான் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தெரிந்தவுடன் என் தந்தைக்கே சிரிப்பு வந்துவிட்டது. 


“I will ask her to improve” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டிருந்த என்னை சமாதானப்படுத்துவதற்காக “வீட்டிற்கு போகலாம் வா “ என்று அழைத்துப் போய் ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்க் குலாப் ஜாமுன் வாங்கி கொடுத்தார். பிறகு என்னை பஸ் ஏற்றிவிட்டு மீண்டும் ஆபீஸ் போய்விட்டார்.


பதினொன்றாம் வகுப்பில் ஹெட் மாஸ்டர் எங்களுக்கு சிவிக்ஸ் பாடம் கற்பித்தார். பப்ளிக் பரிட்சைக்கு நான் தயார் செய்து கொண்டிருந்தோம். பப்ளிக் பரிட்சைகள் வேறு ஒரு சென்டரில் நடத்தப்படும். அதற்கான அறிவுரைகளை ஹெட் மாஸ்டர் எங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அன்று தான் கடைசி பள்ளி நாள். அதற்கு அடுத்த நாளிலிருந்து பரீட்சைக்கான விடுமுறை ஆரம்பம். அறிவுரைகளை கேட்டு கேட்டு கேர்ள்ஸ் எல்லோரும் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தோம். பாய்ஸ் பக்கத்திலிருந்து ஒரு கேப் படார் என்று வெடித்தது. தூக்கி வாரி போட்டு ஹெட் மாஸ்டர்  “யாரு இந்த டபாஸ் வெடிச்சது”? என்று கேட்கவும் வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்ந்தது. எங்களால் சிரிக்கவும் முடியவில்லை. சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. 


இது முதல் பகுதி மட்டுமே. அடுத்த பகுதி அடுத்த பதிவில்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்