அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி

Sep 04, 2026,03:06 PM IST

சென்னை: இந்தியாவின் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் மற்றும் டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் Samagra Shiksha – ICT திட்டத்தின் நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், கணினி ஆசிரியர் நியமனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தமிழ்நாடு B.Ed கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


இந்தியாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆய்வகங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் செய்முறை அடிப்படையிலான கணினி அறிவியல் கல்வியை வழங்குவதே Samagra Shiksha ICT திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் கீழ் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டிலும் கூடுதலாக ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.


கணினி ஆய்வகங்களை அமைப்பதுடன் திட்டம் முடிவடையாமல், இணைய இணைப்பு, மின்சாரம் உள்ளிட்ட ICT சார்ந்த செலவுகளுக்கும் நிதி வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை முறையாக கற்பிப்பதற்காக ICT Instructor / Computer Instructor போன்ற பணியிடங்களுக்கு மத்திய அரசின் பங்காக நிதி ஒதுக்கப்படுவதாகவும் சங்கம் கூறுகிறது.


“கணினி அறிவியல் தனிப்பாடமாக ஏன் இல்லை?”




மாநில அளவில் SCERT மூலம் கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, பாடநூல் கழகத்தின் வாயிலாக தனிப்பட்ட கணினி அறிவியல் பாடநூல் வழங்கப்பட வேண்டும் என்பதே ICT திட்டத்தின் கல்வி நோக்கமாக இருக்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.


ஆனால் தமிழகத்தில் கணினி அறிவியல் தனிப்பாடமாக வழங்கப்படாமல், அறிவியல் பாடப்புத்தகத்தில் சில பக்கங்களுக்குள் மட்டுமே கணினி தொடர்பான உள்ளடக்கம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு முறையான கணினி அறிவியல் பாடவேளையும் தனிப்பாடப் புத்தகமும் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


“ஆயிரக்கணக்கான கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்தி கணினி அறிவியலை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏன்?” என்ற கேள்வியையும் சங்கம் எழுப்பியுள்ளது.


2021ஆம் ஆண்டு முதல் கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாகவும், கணினி ஆய்வகங்கள் மற்றும் ICT வசதிகளுக்காகவும் தனியாக நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.


ஆனால், கணினி ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்புவதற்குப் பதிலாக, Administrator-cum-Instructor போன்ற பணியிடங்கள் மூலம் கணினி சார்ந்த அலுவலகப் பணிகள், EMIS, UDISE உள்ளிட்ட தரவு உள்ளீட்டுப் பணிகளுக்கு மனிதவளத்தை பயன்படுத்தியதாக சங்கம் குற்றம்சாட்டுகிறது.


இதன் மூலம் மத்திய அரசிடம் கணினி ஆய்வகங்களும் ICT Instructor வசதிகளும் இருப்பதாக பதிவுகள் காண்பிக்கப்பட்டாலும், மாணவர்களுக்கு தேவையான முறையான கணினி அறிவியல் கல்வி கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும், இதன் காரணமாக ஆசிரியர் பணியின் அடிப்படை நோக்கம் மாற்றப்பட்டதாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


“ஒரு திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கும் நிதியை அந்தத் திட்டத்தின் நோக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான நிதியை அலுவலகப் பணிகளுக்கு பயன்படுத்துவது அரசு பள்ளி மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதிக்கும்” என சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும், சுமார் 60,000 B.Ed கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் கூறியுள்ளது.


உலகம் செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம், Coding, Robotics உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியலை முறையாக கற்றுக்கொடுப்பதில் இன்னும் முழுமையான முன்னேற்றம் ஏற்படவில்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்தியாவின் பல மாநிலங்களில் 6ஆம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


“இன்று கணினி ஆசிரியர் பணியை டெண்டர் முறையில் மாற்றுவது ஏற்றுக்கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களின் ஆசிரியர் பணிகளும் இதேபோன்ற முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் உருவாகும்” என சங்கம் எச்சரித்துள்ளது.


ஆசிரியர் என்பது வெறும் தரவு உள்ளீட்டுப் பணியாளர் அல்ல. மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் எதிர்காலத்தை உருவாக்கும் கல்வியாளர். எனவே உரிய கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதே அரசின் கடமை என சங்கம் வலியுறுத்தியுள்ளது.


அரசுக்கு முக்கிய கோரிக்கைகள்


தமிழக அரசு உடனடியாக:


1. 6ஆம் வகுப்பு முதல் கணினி அறிவியலை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும்.

2. கணினி அறிவியலுக்கென தனி பாடநூல் மற்றும் தனி பாடவேளை வழங்க வேண்டும்.

3. அரசு பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டுவர வேண்டும்.

4. Samagra Shiksha ICT திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

5. கணினி ஆசிரியர் நியமனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எந்தெந்த பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

6. 60,000 B.Ed கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

7. பெற்றோர் ஆசிரியர் கழகம், தொகுப்பூதியம் அல்லது மத்திய அரசின் ICT நிதி உள்ளிட்ட சட்டபூர்வமான வழிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. கணினி ஆசிரியர் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்து, உரிய கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க வேண்டும்.

9. கணினி அறிவியலுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியையும் அரசு பள்ளிகளில் முறையாக அறிமுகப்படுத்த வேண்டும்.

10. ICT திட்ட நிதி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான சமூகத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.


“தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான டிஜிட்டல் கல்வியைப் பெற வேண்டும். இது ஒரு சாதாரண கோரிக்கை அல்ல; வருங்கால தலைமுறையின் கல்வி உரிமை.


தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கணினி அறிவியல் கல்வியை தனிப்பாடமாக கொண்டு வந்து, ICT திட்டத்தின் நிதியை அதன் உண்மையான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ‘மாணவர்களுக்கான அரசு’ என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்” என தமிழ்நாடு B.Ed கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்