- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
காலை எழுந்தது முதல் தன் வீடு பரபரப்பாக இருப்பதாக உணர்ந்தாள் சுகந்தி. அவள் அத்தை, மாமா, தங்கை, அவள் கணவர் என்று திடீரென அவர்கள் வருகை தந்ததன் காரணம் என்னவாயிருக்கும் எனச் சிந்தித்தவள், காரணம் எதுவாக இருந்தால் நமக்கென்ன என்பது போல் தனக்குத்தானே உச் கொட்டிவிட்டு ராஜத்திடம் சென்றாள்.
அம்மா நாளைக்கு என் வகுப்பு மாணவர்களுக்கு சைன்ஸ் எக்ஸாம் பேப்பர் தரனும். பேப்பர் திருத்தற வேலை கொஞ்சம் பெண்டிங் இருக்கு. நான் சித்தி வீட்ல இருந்து வேலைய முடிச்சிட்டு வரேன் மா என்றுவிட்டுக் கிளம்பினாள். தன்னை மறந்து பேப்பர் திருத்திக் கொண்டு இருந்தவள் சித்தி வற்புறுத்தவே மதியம் சித்தி தந்த மட்டன் பிரியாணியைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தாள்.
மதியம் மூன்று மணிக்கு அவள் அத்தை லலிதா செல் பேசியில் சுகந்தியை உடனே வீட்டுக்கு வரும் படி அழைக்கவே புறப்பட்டாள்.
சுகந்தி வீடு இரண்டு வாசல் கொண்டது. அவள் வீட்டுக்குள் காலடி வைத்த வேளை மற்றொரு வாசல் வழியாக புதிய நபர்கள்
நாலைந்து பேர் உள்ளே போவதைக் கண்டவள் நேரே லலிதா அத்தையிடம் சென்றாள்.
யாரு அத்தை புதுசா யாரோ வந்திருக்காங்க?
அதுவா சுகந்தி. அவங்க உன்னைப் பெண் பார்க்க வந்திருக்காங்களாம். எங்களுக்கு எதுவும் தெரியாது. கொஞ்ச நேரம் முன்னாடி கால் பண்ணி விஷயத்தைச் சொன்னாங்கமா. அதான் உன்னை உடனே வரச்சொல்லி கால் பண்ணேன் என்ற அத்தையை முறைத்தாள். எல்லாருமாச் சேர்ந்து பிளான் பண்ணிப் பேசி வெச்சிட்டு இப்போ என்கிட்ட எதுவுமே தெரியாதுனு நல்லாவே நடிக்கிறீங்க அத்தை. நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க. இப்போதே நான் எங்காவது ஹாஸ்டல்ல போய்த் தங்கிக்கிறேன். அதைவிட்டு எல்லாருமாச் சேர்ந்து என் உணர்வுகளோட விளையாடாதீங்க ப்ளீஸ் அத்தை என்னை விட்டுடுங்க என்றவள் கலங்கினாள்.

சுகந்தி இப்ப நீ எதுக்கு தேவையில்லாம பீல் பண்ற? நீ உன் வாழ்க்கை நல்லா அமையனும்னு தானே மா நாங்க ஆசைப்படறோம். திடீர்னு பெண் பார்க்க வருவதா சொல்லிட்டு இதோ வந்து உட்கார்ந்திருக்காங்க. நீ நல்லதா ஒரு சேலைய கட்டிக்க. இந்தப்பூவை தலையில் வச்சிக்க. முகத்தை சிரிச்சமாதிரி வெச்சிக்க. வெளிய வந்து வந்தவங்களப்பார்த்து வாங்கனு ஒரு வார்த்தை சொல்லிக் கும்பிடு. கொஞ்சநேரம் அங்க அவங்க முன்னாடி உட்கார்ந்திருந்துட்டு இங்க வந்துடு. இந்த ஒரு உதவிய மட்டும் எங்களுக்காகச் செய் சுகந்தி கெஞ்சலாகப் பேசினாள் அத்தை லலிதா.
முடியவே முடியாது அத்தை. தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீங்க. நான் உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கேன். என்னைக் கட்டாயப்படுத்தினா அப்புறம் நான் கோபத்தில் எதுனா சொல்லிடுவேன். ப்ளீஸ் அத்தை ட்ரை டு அண்டஸ்டான்டு என்றவள் நகர முற்பட அவளை நிறுத்தினாள் ராஜம்.
சுகந்தி மூத்தவள் உன்னை வச்சிட்டு உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணதப் பார்த்து இந்த ஊர்ல, நம்ம சொந்த பந்தம் எல்லாம் உன்னைப்பத்தி என்னென்ன பேசினாங்கனு உனக்கே நல்லாத் தெரியும். உன் மேல எந்தத் தவறும் இல்லாதப்பவே ஏதேதோ பேசினாங்க. இப்போ வீடுதேடி வந்தவங்களை மதிக்காத குடும்பம்னு வந்திருக்கிறவங்க வெளியே போய்ச் சொன்னால் அது நமக்குத்தானே மா அசிங்கம். நீ எங்களுக்கு அந்தக் கெட்ட பெயரை வாங்கித்தரப் போறியா? சொல்லு. ஏதோ அவங்க திடீர்னு வந்துட்டாங்க. எதிரியாகவே இருந்தாலும் வீடு தேடி வந்தவங்களை வரவேற்று உபசரிப்பது நமது பண்பாடு கடமை. நீ வந்தவங்க முன்னாடி ஒரு கும்பிடு போட்டு வாங்கனு பொதுவாக ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடு போதும் என்ற ராஜம் தொடர்ந்தாள்.
சுகந்தி அவங்க யாரோ! உன்னைப் பார்க்க வந்ததா நினைச்சிக்க. முதல்ல பரஸ்பரம் ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துப் போகனும். உங்க ரெண்டு பேரு ஜாதகம் பொறுந்தனும். இதெல்லாம் சரியா இருந்தா தானே கல்யாணம் நடக்கும்?
உன் விருப்பத்தை மீறி நாங்க எதுவும் செய்ய மாட்டோம். என்னை நம்பு மா. அம்மாவுக்காக இதைக்கூடச் செய்ய மாட்டியா? ராஜம் கண்கலங்கப் பேசியது கண்டு மனம் இறங்கினாள் சுகந்தி. அம்மா உங்க சந்தோசத்துக்காக நான் நீங்க சொன்னபடி நடந்துக்கிறேன். பட் இப்டியே தான் வருவேன். புடவை கட்றது, பூ வெச்சுக்கறதெல்லாம் மாட்டவேமாட்டேன் என்றவளிடம் அதற்கு மேல் பேசிப் புண்ணியமில்லை என்று புரிந்து கொண்ட ராஜம் ஏதோ இம்மட்டும் சம்மதித்தாளே என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.
சுகந்தியை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவள் சற்றே நிம்மதியடைந்தாள். பிங்க் கலர் பாவாடை, பிளவுஸ், காஃபிக்கலர் தாவணி, கழுத்தில் மெல்லிய கோல்டு செய்ன், சிறு ஜிமிக்கி தோடு, கரு நாகக் கூந்தலில் ரெட்டை ஜடை, அதில் ஒன்று முன்புறம் மார்பில் தவழ, ஒற்றை ரோஜா, நெற்றியில் சிறு ஸ்டிக்கர் பொட்டு அதற்க்கும் மேலே திருநீறு பூசியிருந்த சுகந்தி கொள்ளை அழகாகவே இருந்தது கண்டு ராஜம் மகிழ்ந்தாள். சரி லலிதா நீ சுகந்திய அழைச்சிட்டு வா. நான் முன்னால போய் அவங்களுக்கு ஸ்வீட், காரம் கொடுத்துடறேன். சீக்கிரமா வாங்க என்றுவிட்டு நகர்ந்தாள்.
ராஜம், மற்றும் பார்வதி தந்த இனிப்பு, காரத்தை சுவைத்தபடி வீட்டைச் சுற்றிலும் கண்களால் அளந்து கொண்டிருந்தார் மூர்த்தி.
அருகில் அவர் மகன் சுந்தர். வயது முப்பதுக்குள் இருக்கும். அதற்க்குள் முன்புறம் தலையில் வழுக்கையாகி தலையின் பின்புறம் மட்டும் முடி சுருட்டையாக இருந்தது. குள்ளமாகவும் இல்லாமல் உயரமாகவும் இல்லாத சராசரி உயரம். வரிசையான பற்கள். சற்றே குண்டான அமுல் பேபி போன்ற தோற்றம். கழுத்தில் ஒரு செய்ன், கையில் வாட்ச், இன் பண்ணிய பேன்ட் சர்ட்டில் இருந்த சுந்தர் அவன் அம்மாவிடம் ஏதோ கிசுகிசுத்த குரலில் பேசியவாறு தேனீரைச் சுவைத்துக் கொண்டு இருந்தான்.
அதேநேரம் அத்தை லலிதாவுடன் அறையைவிட்டு வெளியே வந்தாள் சுகந்தி. எல்லோரையும் பார்த்து வணங்கியவள் பார்வையில் முதலில் பட்டவர் மூர்த்தி தான். இவர் எதற்கு நம் வீட்டில் என்று சிந்தித்தவளைப் பார்த்து அசடு வழிந்தார் மூர்த்தி. அம்மா நீ என்ன யோசிக்கிறேனு எனக்கு நல்லாப் புரியுதுமா. எப்படி இருந்தாலும் நீ இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு. ஏன் எங்க வீட்டுக்கு நீ மருமகளா வரக்கூடாதுனு விரும்பினேன். அதனால தான் நேற்று உன்னைப் பார்த்துப் பேசிட்டுப்போன கையோட கால் பண்ணி விஷயத்தைச் சொல்லி இவங்கள இங்க உடனே கிளம்பிவரவெச்சேன். இவங்க என் மனைவி. இது என் மகள். அவர் என் மாப்பிள்ளை. இவர் என் மகன் சுந்தர். இவருக்குத்தான் உன்னைப் பெண் பார்க்க வந்திருக்கோம்.
நீ எதிர்பார்த்த எல்லாத்தகுதியும் கொண்ட, எந்தக் கெட்ட பழக்கவழக்கமும் இல்லாத நல்ல பையன் மா. நல்லாப் படிச்சிருக்கார். மத்திய அரசுப்பணியில் நல்ல வருமானத்தில் இருக்காரு மா. நீ ம்ம்னு ஒரு வார்த்தை சொன்னா நல்லபடியா கல்யாண விஷயத்தைப் பேசி முடிச்சிடலாம். என்ன நான் சொல்றது சரிதானே என்பது போல் மூர்த்தி சுகந்தியின் தாய்மாமன் கிருஷ்ணனைப்பார்க்க அவரும் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.
ஏய் சுந்தர், நீ அந்தப் பொண்ணுகிட்ட ஏதும் தனியாப் பேச விரும்பறியா? அவர் சுந்தரிடம் கேட்டு முடிக்குமுன் நிறுத்தினாள் சுகந்தி.
ப்ளீஸ் பர்கிவ்மீ. எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசுங்க பட்டென்று சொன்னவளை நிமிர்ந்து பார்த்த சுந்தரைப் பார்வையால் அடக்கினார் மூர்த்தி.
உனக்கு விருப்பம் இல்லைனா பரவாயில்லமா. நீங்க இங்கயே பேசுங்க என்ற மூர்த்தி சுந்தரைப்பார்க்க தொடர்ந்தான் சுந்தர்.
மே ஐ நோ யுவர் நேம், அன்டு வாட் இஸ் யுவர் குவாலிபிகேஷன்? சுந்தர் கேட்டதைப் பொருட்படுத்தாதிருந்த சுகந்தியை அவள் அருகில் இருந்த அத்தை அவள் பக்கம் திரும்பி கேட்கிறாங்கல்ல பதில் சொல்லுமா என்றதும் அவளை முறைத்தவாறு ஐம் சுகந்தி. ஐம் ஒன் ஆப் ஏ . எம். ஏ. டிகிரி ஹோல்டர் இருகைவிரல்களையும் பிசைந்தபடி வேண்டாவெறுப்பாகப் பதிலளித்தாள்.
வாட் ஆர் யூ டூயிங் நௌ?
நௌ ஐம் ஒர்க்கிங் இன் ஏ பிரைவேட் ஸ்கூல் டீச்சர். மியூசிக் அன்டு வெரைட்டீஸ் ஆப் புக் ரீடிங் இஸ் மை ஹாபி எனி திங் எல்ஸ் என்றாள் சுந்தரை நிமிர்ந்து பார்த்து. வாட் எ கேரக்டர் ஷீ இஸ் என்று ஒரு நிமிடம் யோசித்தவன் ஐ வாண்ட் யுவர்ஸ் ரீசெண்ட் போட்டோஸ் என்றான் சுந்தர் மிக அமைதியாக.
ஐம் சாரி. மை போட்டோஸ் ஆர் நாட் அவெய்லபிள் ஹியர். ஆல் போட்டோஸ் ஆர் மை சிஸ்டர்ஸ் ஹோம் இன் மதுரை பட்டென்று பதில் சொல்லிவிட்டு எக்ஸ்கியூஸ்மீ ஷல் ஐ லீவ்? என்று எழுந்தவள் எல்லோருக்கும் பொதுவாக கைகூப்பிவிட்டுத் தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.
சே என்னம்மா பொண்ணு இது. சரியான திமிரு புடிச்சவளா இருக்கா. இந்தப் பொண்ணு வேண்டாம்மா என்று தன் மகள் பூங்கொடி அவள் தாயிடம் கிசுகிசுப்பதைக்கேட்ட மூர்த்தி அவளைப் பார்வையால் அடக்கினார்.
தயவுசெய்து நீங்க யாரும் தவறாக நினைக்கக்கூடாது. எங்க சுகந்திக்குப் பொய் பேசுறது பிடிக்காது. அவள் அப்பாவோட நண்பர்னு நேற்று அறிமுகமானவர் பொய் பேசி நம்பவைத்து இன்னிக்கு குடும்பத்தோட பெண் பார்க்க வந்ததை அவளால ஏத்துக்க முடியல. அதான் இப்படி நடந்துக்கறா. மத்தபடி எங்க சுகந்தி சொக்கத்தங்கம். அவளுக்கு அவ்வளவு சீக்கிரம் கோபமே வராதுனா பார்த்துக்கங்களேன் என்றார் கிருஷ்ணன்.
சுகந்தியின் கோபம் நியாயம் தான். என் மீதும் தவறு இருக்குல்ல. அப்பா அப்பானு வாய் நிறைய அழைச்ச பெண்னிடம் நான் நம்பிக்கை தரும் விதமாகப் பேசிட்டு இப்ப நானே பெண் கேட்டுவந்து பேசினா கோபம் வரத்தான் செய்யும். பரவாயில்ல விடுங்க. அப்போ நாங்க கிளம்பறோம். நீங்க எல்லாரும் சுகந்திகிட்ட பேசி எங்களுக்கு நல்ல பதில் சொல்லுவீங்கனு நம்பறேன் என்றார் மூர்த்தி.
அண்ணே எல்லாரும் சாப்பிட்டுப் போகலாமே என்ற ராஜத்தை இடைமறித்த மூர்த்தி அம்மா சீக்கிரம் நல்ல சேதி சொல்லுங்க. அன்னிக்கு நாங்க இங்க விருந்தே சாப்பிடறோம். இப்போ கிளம்பறோம் என்றவாறு மூர்த்தி கைகூப்பி விடைபெற்று வெளியே செல்ல சுந்தரும், அவன் குடும்பமும் விடைபெற்று மூர்த்தியைப் பின் தொடர்ந்தனர்.
காரில் ஏறப்போன மூர்த்தி ஏதோ சிந்தனை வயப்பட்டவராக ராஜத்தை நெருங்கி வந்து ஒரு சிறு பேப்பர் துண்டை நீட்டினார்.
அம்மா இதில் எங்க வீட்டு முகவரி, என்னோட செல் நம்பர் இருக்கு. சுகந்திகிட்ட எல்லாரும் நல்ல விதமாப்பேசி ஒரு நல்ல பதிலை சீக்கிரமா சொல்லுங்க என்றுவிட்டு மூர்த்தி காரில் ஏற கார் வேகமெடுத்தது.
(தொடரும்)
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).
{{comments.comment}}