கடவுளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

Sep 30, 2024,06:08 PM IST

டெல்லி:   திருப்பதி லட்டுவில் கலப்பட நெய்தான் கலக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. அனுமதிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததா என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்.. அதில்தான் லட்டு செய்யப்பட்டதா என்பதை ஏன் விளக்கவில்லை. அரசியலில் மத நம்பிக்கையை கலக்கக் கூடாது. அரசியல்சாசன பொறுப்பில் இருப்பவர் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.


திருப்பதி லட்டுவில் கலப்படம் நடந்துள்ளது. விலங்குகளின் கொழுப்பு அதில் கலந்துள்ளது. கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில்தான் இது நடந்தது என்று கூறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பினார். குஜராத் மாநிலத்தில் இதுகுறித்து ஆய்வு நடந்ததாகவும் அவர் கூறியிருந்தார். திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி புட்ஸ் நிறுவனம்தான் கலப்பட நெய்யை அனுப்பியதாகவும் திருப்பதி தேவஸ்தானம் கூறியது.


இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதை விட முக்கியமாக இந்த சர்ச்சை வெளியான வேகத்தில் அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியல் சர்ச்சையாக இது மாறி ஆந்திராவில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டுள்ளன. அத்தோடு இல்லாமல் இந்த லட்டு விவகாரம் தொடர்பாக யார் கருத்து கூறினாலும் அதை கண்டிக்க ஆரம்பித்து விட்டது ஆந்திர மாநில ஆளுங்கட்சி. குறிப்பாக துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ் நடிகர் கார்த்தியின் சாதாரண பேச்சையே கடுமையாக கண்டித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேச, எங்கே தனது படம் ஆந்திராவில் ஓட விடாமல் செய்யப்படுமோ என்ற அச்சத்தில் மன்னிப்பெல்லாம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.


இப்படி திருப்பதி லட்டில் அரசியல் கலந்து மேலும் கலப்படமான நிலையில் ஆந்திர மாநில  அரசியல்வாதிகளுக்கு குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். சரமாரியான கேள்விகளை கேட்டு உண்டு இல்லை என்று  பண்ணியுள்ளது உச்சநீதிமன்றம்.  ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு  நாயுடு இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏன் என்றும் அது கடுமையாக கேட்டுள்ளது. ஆதாரமே இல்லாமல் அவர் குற்றம் சாட்டியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாக கேட்டுள்ளது.




திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியம் சாமி, திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான சுப்பா ரெட்டி, வரலாற்று ஆசிரியர் டாக்ட்ர விக்ரம் சம்பத் மற்றும் ஆன்மீக பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் மொத்தம் 3 வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள்  கூறிய கடுமையான கருத்துக்கள் மற்றும் எழுப்பிய கடுமையான கேள்விகளின் தொகுப்பு:


நீதிபதி பி.ஆர். கவாய்: உடனடியாக மீடியாக்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல என்ன காரணம்.. மத நம்பிக்கைகளுக்கு நீங்கள் மதிப்பளித்திருக்க வேண்டாமா?


நீதிபதி விஸ்வநாதன்:  கலப்படம் செய்த நெய்யில்தான் இந்த லட்டுக்கள் தயாரிக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது.. அந்த ஆதாரம் எங்கே? எத்தனை காண்டிராக்டர்கள் நெய் சப்ளை செய்தனர்? அனைத்துமே அனுமதிக்கப்பட்டதா? அனுமதிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக எங்கேயுமே நிரூபிக்கப்படவில்லையே, கூறப்படவில்லையே?. நெய் சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த ஆய்வு முடிவு இணையதளத்தில் பொதுவெளியில் உள்ளது. ஆனால் விசாரணை நிலுவையில் உள்ளது.


நீதிபதி கவாய்: ஜூன் 12ல் வந்த டேங்கரிலிருந்து சாம்பிள் எடுக்கப்பட்டதா அல்லது ஜூன் 20ம் தேதி டேங்கரிலிருந்து எடுக்கப்பட்டதா?


நீதிபதி விஸ்வநாதன்: நீங்கள் நெய்யை அனுமதித்த பிறகு அது பிற லட்டு தயாரிப்புப் பொருட்களுடன் கலக்கப்பட்டு விடுகிறது. அதன் பிறகு எந்த நெய் கலப்படமானது, அந்த நெய்யை அனுப்பியது யார், எந்த காண்டிராக்டருடைய நெய் என்பதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள்? அதை எப்படி கண்டுபிடிக்க முடியும்?


நீதிபதி கவாய்: சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்துள்ளீர்களா? முதல்வர் சந்திரபாபு நாயுடு எப்போது இதுகுறித்து மீடியாக்களிடம் பேசினார்?


நீதிபதி விஸ்வநாதன்: டெண்டர் சரியாக வழங்கப்படவில்லை, அதில் தவறு நடந்துள்ளது என்று நீங்கள் தாராளமாக கூறலாம். ஆனால் நெய்யைக் கலந்த பின்னர் அது கலப்படமானது என்று கூறுவதாக இருந்தால்.. அதற்கான ஆதாரம் வேண்டும். அந்த ஆதாரம் எங்கே?


நீதிபதி விஸ்வநாதன்: நீங்கள் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் உள்ள முக்கியக் குறிப்பை உரக்கப் படியுங்கள். அதை மக்களும் அறிய வேண்டும். அதை நீங்கள் மக்களிடம் சொல்லவில்லை. (நீதிபதி இப்படிக் கூறியதும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லூத்ரா அந்த குறிப்பை உரக்க வாசித்தார்).. இந்த குறிப்பில் சொல்லப்பட்டுள்ளதை வைத்துக் கொண்டு அதை முடிவாக எப்படி நீங்கள் எடுக்க முடியும்?.. 2வது ஒப்பீனியன் போயிருக்க வேண்டும்தானே?.. ஏன் போகவில்லை. எல்லோருமே எந்த விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்தானே.. கலப்பட நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக எங்கேயுமே கூறப்படவில்லை. திருப்பதி தேவஸ்தானமும் கூட அதைச் சொல்லவில்லை. பிறகு நீங்கள் எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?


எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், ஆய்வு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், நெய் சோதனை முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில், அவசரப்பட்டு மீடியாக்களிடம் இதைப் பற்றிப் பேசியதும், குற்றம் சாட்டியதும் சுத்த அர்த்தமற்ற செயல். அரசியல்சாசன பதவியான முதல்வர் பதவியில் இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கையில் அரசியல் செய்யக் கூடாது. அரசியலையும், மதத்தையும் கலக்காதீர்கள். தனியாகவே வைக்க வேண்டும்.


நெய்யில் கலப்படம் இருந்ததாகத்தான் ஆய்வக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. லட்டில் கலப்பட நெய் கலந்திருப்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள், அதை எப்படி பிரித்துப் பார்த்தீர்கள்?


விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு


நீதிபதி கவாய்: என்டிபிபி ஆய்வறிக்கையில் அது பாமாயிலாகவும் இருக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதை எப்படி பன்றியின் கொழுப்பு என்று எடுத்துக் கொண்டீர்கள்.. அதேபோல, சோயாபீன் ஆயிலாகவும் இருக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதை எப்படி மீன் எண்ணெய் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள்.? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.


இந்த விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி பி.ஆர். கவாய், இன்று லன்ச்சுக்கு லட்டு சாப்பிடக் கூடாதுன்னு நினைக்கிறேன் என்று நகைச்சுவையாக  கூறினார். அதன் பின்னர், இந்த வழக்கில் ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதா.. அப்படி இருந்தால் அதன் விசாரணையைத் தொடரச் செய்யலாமா அல்லது வேறு குழு அமைக்க வேண்டுமா என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த கட்ட வழக்கு விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வான் சாகச நிகழ்ச்சி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

news

Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு

news

திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை.. இது அரசின் தவறுதான்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!

news

பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!

news

விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்.. இனிமேல் கவனமா இருங்க.. தவெக தலைவர் விஜய் அட்வைஸ்!

news

ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!

news

மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்

அதிகம் பார்க்கும் செய்திகள்