Swarnalatha: "கண்ணிரண்டில் நூறு.. வெண்ணிலாக்கள் தோன்றும்".. மறக்க முடியாத குரல் இசை தேவதை!

May 05, 2024,08:43 AM IST

- பொன் லட்சுமி


திரை இசைக்கு வந்த வெகு சில காலத்திலேயே உச்சத்தை தொடுவதெல்லாம் எல்லோருக்கும் கை கூடாது.. அப்படிப்பட்ட பாக்கியம் சிலருக்கே கிடைக்கும்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரரான சொர்ணலதா. ஈடு  இணையற்ற குரல் வளத்தாலும்  தனி திறமையாலும்  உச்சத்தை தொட்டவர் சொர்ணலதா. ஆனால் அத்தனைவு சின்ன வயதிலேயே இயற்கை அவரை அழைத்து கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. ஆனால் சொர்ணலதா மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல.. இசை உள்ளவரை, இந்த உலகம் உள்ளவரை  அத்தனை இசை  பிரியர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பார் சொர்ணலதா.


அனைத்திற்கும் அப்பாற்பட்ட குரல் சொர்ணலதாவின் குரல்.. இந்தக் குரல் கொடுக்கும் உணர்ச்சியை  வேறு எந்த குரலிலும் நாம் இதுவரை கண்டதில்லை... சொர்ணலதாவை போல் வேறு யாராலும் பாட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.. இனிமையான குரலினால் எதிரில்  உள்ளவர்களை மெய்மறக்க வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் அவர் மட்டுமே.


சந்தோசமாக இருந்தாலும் சரி கவலையாக இருந்தாலும் சரி எல்லா  உணர்வுக்கும் அவரது பாட்டு மட்டும் தான் மருந்து. இங்கு நிறைய பேரின் மன காயங்களுக்கும் சந்தோசங்களுக்கும் அவரது பாட்டு தான் மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறது.. சிறுவயதில் பள்ளிக்கு  பஸ்ஸில் பயணம் செய்யும்போது   இளையராஜாவின் இசையில் சொர்ணலதா பாடலை கேட்கும் போது மனதிற்குள் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படும்... இன்றும் அதே உணர்வு தான் ஏற்படுகிறது.. எவ்வளவு காலம் ஆனாலும் அந்த உணர்வு மட்டும் மாறப்போவதில்லை...




அவரது பாடலைக் கேட்கும் போது எப்பொழுதுமே அந்த பாடலுடன் ஒன்றியது போன்ற உணர்வு மனதிற்குள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது... அது சந்தோஷமான பாடல் என்றாலும் சரி, சோகமான பாடல் என்றாலும் சரி எல்லா பாடலுமே தனித் தனியாக  அவ்வளவு அற்புதமான உணர்வை நமக்குள் கடத்துவார்.. இசையை  பார்க்க முடியாது உணர மட்டுமே முடியும்.. அதை அவரது குரலின் மூலம் நாம் உணர முடியும்.. அவரது குரலில் அனைத்து பாடலுமே நமக்குப் பிடிக்கும்தான்.. அதிலும் சில பாடல்களை கேட்கும் பொழுது சொல்ல முடியாத ஒரு உணர்வு மனதில் ஏற்படுகிறது...


அலைபாயுதே படத்தில் வரும் எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடலில்  தெறிக்கும் வலியை, அதை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்பாடலில் உள்ள வருத்தத்தை வாழ்வில் உணர முடியும். அந்த வலியை இப்பொழுதும் பலர் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்... காயம் கண்ட இதயத்தின் கதறல்  கண்ணால் காண  முடியாது, உணர மட்டும்தான் முடியும் ..அதிலும் இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன் என்னும் வரியை நினைத்து இன்றும் பல பெண்கள் இரவில் கண்ணீர் சிந்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.



ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுதும் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல் கொட்டுகிறது.. ஏன் என்று பார்த்தால்  தொலைந்து போன அந்த காலம் மறுபடியும் வரப்போவதில்லை என்று... அந்த அளவுக்கு அவரது குரல் அந்தப் பாடலுடன் ஒன்றி கேட்போரை கட்டி போட்டு வைக்கிறது...


ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்போது அழக்கூடாதுன்னு  தோணும் ..ஆனா அழுகையை அடக்க முடியாது.. அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் கருத்தம்மா படத்தில் வரும்  "போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு"... எப்பொழுது இந்த பாட்டை கேட்டாலும் அந்தக் குரலும் அந்த சோகமும் மனதை பிழிந்து எடுத்து விடும்.. இதுவரைக்கும் ஒரு முறை கூட இந்த  பாட்டை  அழாமல் கேட்டது இல்ல.. இதயத்தில் ரத்தத்தை வரவழைக்கும் இதுபோல்  ஒரு சோகப் பாடலை இதுவரை கேட்டதில்லை.. கடைசியில் சொர்ணலதாவுக்காகவே அந்தப் பாடலை எழுதியது போல ஆகிவிட்டது ... நம்மைப் போல் எத்தனையோ பேர் இன்றும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது கண்ணில்  கண்ணீரோடு தான் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.


ஒரு பெண் தன்னூள் எழும் விரக தாபத்தை  இதைவிட சிறப்பாக  யாரும் சொல்ல முடியாது. அப்படி ஒரு பாடல் தான் வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம். இந்தப் பாடலை ரசிக்காதவர்கள் யாருமே கிடையாது... சொர்ணலதாவின் உயிரை உருக்கும் காந்த குரலில் இளையராஜாவின் இசையில்  இந்த பாடல் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும்... அதிலும்  கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்  ஆனாலும் அனல் பாயும்  என்ற வரிகளை கேட்கும் போது  மனதை மயிலிறகால் வருடி  அந்த இசையில் நம்மை உருக செய்துவிடும். அப்படி ஒரு குரல் வளம் சொர்ணலதாவுக்கு.. இந்த படம் வந்த காலத்தில் இந்த பாடல் எத்தனை நெஞ்சங்களை அழ வைத்திருக்கும்.. இப்போதும் கூட இந்த பாடலை கேட்கும்போது நிறைய இதயங்கள் கண்ணீர் சிந்துகின்றது. அதிலும் பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஹெட் போன் மாட்டிக்கொண்டு கேட்கும் போதும் சரி இரவில் தூங்க செல்லும்போது கேட்கும்போதும் சரி  மனதில் ஒரு இனம் புரியாத  உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.




இசை உலகின் நவரச பாடகி என்று சொன்னால் அது நம் சொர்ணலதா  தான்... சந்தோசமாக இருந்தாலும் சரி சோகமாக  இருந்தாலும் சரி அவர் பாடலைக் கேட்கும் பொழுது அந்த உணர்வுக்குள்ளையே போய் வருவது போன்று இருக்கும்.. இந்தப் பாடலை சிறுவயதில் கேட்கும்போதும் சரி இப்பொழுது வளர்ந்த பின்பு கேட்கும் பொழுது சரி ஒரு குத்தாட்டம் போட்டா நல்லா இருக்கும்னு தோணும் அப்படி ஒரு பாட்டு தான் காதலன் படத்தில் வரும் முக்காலா முக்காப்புலா. இந்தப் பாட்டை எந்த இடத்தில கேட்டாலும் டான்ஸ் ஆட தான் தோணுது.. ஆடத் தெரியாதவர்களைக் கூட ஆட வைக்கும் இந்த பாட்டு ... ஏ ஆர் ரகுமான் இசையில்  மனோ - சொர்ணலதா வாய்ஸ்ல  இந்தப் பாட்டை கேட்கும் போது  சின்ன வயசுல இந்த பாட்டுக்கு ஆடுனது தான் ஞாபகம் வருது.. மனசுக்கு ஏதாவது கஷ்டமா இருக்கும்போது ஹெட் போன் போட்டுட்டு இந்த பாட்ட  கேட்கும் போது  தானாவே தலை ஆட  தொடங்கிடும்  அந்த அளவுக்கு பவர்ஃபுல்லானது இந்த பாட்டு.


பலரின் மன காயங்களுக்கு இங்கு இவரது பாட்டுதான் மருந்து.. இன்றும் பலர் வேலை செய்யும்போதும் சரி இரவில் தூங்க செல்லும் போதும் சரி, இவரது பாடலையும் கேட்டு கொண்டு தான் தூங்குவார்கள். அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். சொர்ணலதாவை நாம் இழந்து இத்தனை காலமாகியும் இன்னும் கூட அவரது குரலை மறக்க முடியவில்லை.. இந்த சோகத்துடன் தற்போது உமா ரமணன் என்ற இன்னொரு குரல் ஆளுமையையும் நாம் இழந்துள்ளோம்.. ஆனால் இவர்கள் எல்லாம் காலத்தைக் கடந்தவர்கள்.. அவர்களது உருவம்தான் மறைந்திருக்கிறது.. குரல் நம்மோடுதான் எப்போதும் பயணித்திருக்கும்.. இசையின் பயணங்களுக்கு எப்போதும் முடிவில்லைதானே!

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்