தமிழ்நாட்டை மெல்ல மெல்ல நெருங்கி வரும் காற்றழுத்தம்.. இன்றும் நாளையும் அதி கன மழைக்கு வாய்ப்பு!

Nov 26, 2024,05:54 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் வடகடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.


நாகப்பட்டனத்தில் பலத்த மழை: 




குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நாகை கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகள் வெறுச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. 


ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை படகுகள், பைபர் படகுகள், போன்றவற்றை மீனவர்கள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நாகை மற்றும் மயிலாடுதுறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் கன மழை  விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மதுரையில் மழை : 


வங்கக்கடலில் நிலை கொண்டு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தெற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரையில் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நகர்ப்புறங்களில் சாரல் மழையுடன் கடந்த இரண்டு தினங்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் இன்று காலை ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம் மதுரையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டது. இதனையடுத்து ஓடுபாதை சரியானதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


மதுரையில் திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. விட்டுவிட்டுப் பெய்தும் வருகிறது.


வேகமாக நகரும் காற்றழுத்தம்


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் சற்று அதிகமாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும் திரிகோண மலைக்கு தெற்கு தென்கிழக்கே 410 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதேபோல்  சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 830 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.


தமிழ்நாட்டை நெருங்குகிறது


காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நெருங்கி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 10 கிலோமீட்டர் வேகத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் நெருங்கி வருவதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில்  அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல் நவம்பர் 28ஆம் தேதியும் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!

news

ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி

news

இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?

news

தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!

news

சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!

news

பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!

news

மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

news

பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?

news

மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்