- முனைவர் ராணி சக்கரவர்த்தி
ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி மாணவி தவழ்ந்து வந்து பரிசு பெற்றுச் சென்றார். விழாவிற்குப் பிறகு அவளை சந்தித்துப் பேசியபோது, அவள் தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதால் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்ததில், தனக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாக சொன்னார்கள், நான் அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டாள். நான் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்மா என்றேன். அதற்கு அந்த மாணவி அது முடியாது மேடம், நான் பள்ளியில் கழிவறையைப் பயன்படுத்த முடியாது. அதனால் வகுப்பு நேரத்தில் தண்ணீர் அருந்த மாட்டேன். வீட்டுக்குச் சென்று தான் தண்ணீர் குடிப்பேன், யூரின் போவேன் என்றாள். கழிவறையைச் சென்று பார்வையிட்டேன். அரசு பள்ளியின் கழிவறை நிலையை நான் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. அதில் அந்த பெண் தவழ்ந்து சென்று பயன்படுத்த வேண்டிய கொடுமையான நிலை. எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் இவர்களின் இயலாமையை, கஷ்டங்களை.
தலைமை ஆசிரியர் ஒரு பெண். அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், கழிவறையைப் பராமரிக்கவே அரசு பணம் தருவதில்லை. இதுல எங்க சாய்தளம் கட்டுவது? தனி சிறப்புக் கழிவறை கட்டுவது? இந்தப் பெண் இந்த வருடத்தோடு இந்தப் பள்ளியை விட்டு சென்று விடுவார், பிறகு இந்த மாதிரி மாற்றுத்திறனாளி மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என முடிவெடுத்துள்ளேன் என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. இவர்கள் பள்ளிக்கு வருவதே பெரிய விஷயம். எத்தனை தடைகள், சவால்கள் இருப்பினும், அவளின் பெற்றோர் தன் மகளின் வாழ்வை, கல்வி ஒன்றே மாற்ற முடியும் என நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இவளின் அடிப்படை தேவையைக் கூட அவளால் கேட்க முடியவில்லை. பள்ளிகளில் மட்டும் இந்த நிலை இல்லை, பேருந்து நிலையத்தில், கோவில்களில், வணிக வளாகங்களில், ஏன் எங்குமே இவர்கள் செல்ல, சாய்தள வசதியோ, கழிவறை வசதியோ இல்லை. விமான நிலையம் தவிர, மற்ற எல்லாப் பொது இடங்களிலும், இதே நிலைதான்.
சக்கர நாற்காலியில் இருப்பவர்களுக்கும், நடக்க முடியாத வயதானவர்களுக்கும், முடக்குவாதம் மற்றும் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்த அவல நிலைதான். இவர்களைப் பொது இடத்தில் பார்த்தால் பரிதாபப்படுவோம். இவங்க ஏன் வெளியே வந்து கஷ்டப்படுகிறார்கள், வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே என மிகச் சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். வெளியே வருவது இவர்களின் உரிமை, தேவை, வாழ்வாதாரத்திற்கான தேடல். இவர்களின் பலர் வீட்டுக்கு உள்ளேயே முடங்கித் தங்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு வேதனையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பள்ளியை சீரமைப்பதற்காக, ஒரு கிராமத்திற்குச் சென்றோம். பள்ளியைப் பார்த்துவிட்டு, குறுகிய வீதிகள் வழியாக நடந்து வந்தோம். அந்த பள்ளியில் சமையல் செய்யும் பாட்டி, ஒரு வீட்டின் முன் நின்று கொண்டு இருந்தார். எங்களை பார்த்ததும், இதுதான் என் வீடு அம்மா என்றார். திண்ணையில் ஒரு 35 வயது உடைய பெண் அமர்ந்திருந்தார். அம்மா வணக்கம், வாங்கம்மா என்றார். சூம்பியிருந்த கால்களை, கைகளால் சரி செய்து கொண்டு, மலர்ந்த முகத்துடன், வணக்கம் சொன்னார். அவள் ஒரு தவழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி எனப் புரிந்து கொண்டேன். அவளைக் கடந்து செல்ல மனமில்லாமல், திண்ணையில் அமர்ந்தேன். அவளுக்கு ஒரே குதூகலம். அவளோடு பேச ஆரம்பித்தேன். ஊரில் உள்ள பள்ளியில் எட்டாவது வரை படித்த அவள், வெளியூர் சென்று படிக்க முடியாதால் படிப்பை நிறுத்தி வேண்டிய நிர்பந்தம்.
தன் இயலாமையால், கல்வியை இழந்த ஏக்கம் அவள் கண்களில் தெரிந்தது. இரண்டு, மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்ததால், உடல் வலுவையும் இழந்துவிட்டாள். மண், கல் நிறைந்த பாதையில் தவழ்ந்து தான் கழிவறை செல்ல வேண்டும். அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனம் சொல்லியதால் உன்னுடைய ஆசைகளைச் சொல், நான் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டேன். அவள் சொன்னாள் எனக்கு எதுவும் வேண்டாம், நான் இந்த வீட்டை விட்டு, வீதியை விட்டு வெளியே சென்று, 15 வருடம் ஆகிவிட்டது. உங்கள் வண்டியில் என்னை மதுரை வரை கூட்டிட்டுப் போறீர்களா? என குழந்தை போல கேட்டாள்.
என் மனம் கனத்துப் போயிற்று. உடனே திட்டமிட ஆரம்பித்தேன். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அருகில் இருக்கும் கிராமங்களில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளை, குறிப்பாக பெண்களைக் கணக்கெடுத்து, ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்தோம். 16 பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு வேனில் பயணப்பட ஆயத்தமானோம். எங்களோடு கல்லூரி மாணவிகளும், அவர்களுக்கு உதவி செய்ய, அவர்களை மகிழ்விக்க வந்திருந்தனர். 18 பேரில் முகத்திலும் பேரானந்தம். குழந்தைகளின் குதூகலத்தோடும், தலையை வெளியே நீட்டி பார்த்துக் கொண்டும், டாடா காட்டிக்கொண்டும், பெரிய கட்டிடங்கள், கடைகளை பிரமிப்போடு பார்த்துக் கொண்டும், அவர்களின் பயணம் தொடர்ந்தது. அனைவரும் தவழ்ந்து செல்லும் மனிதர்கள் என்பதால், வண்டியில் அமர்ந்து கொண்டே, மீனாட்சியம்மன் கோவிலையும், திருமலை நாயக்கர் மஹாலையும் வலம் வந்தோம். இராஜாஜி பூங்காவில், வண்டியை உள்ளே அனுமதித்ததால் அவர்கள் ராட்டினத்திலும், குழந்தைகள் ரயிலிலும், ஊஞ்சலிலும் மகிழ்வுடன் விளையாடினர். அருகில் இருந்த உணவகத்தில் மதிய உணவு மற்றும் ஐஸ்கிரீம், மீண்டும் அழகர் மலை நோக்கி பயணம்.
எல்லாம் முடிந்து, மாலையில் அவர்களின் ஊர் நோக்கி வண்டி பயணித்தது. அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அந்த இறுக்கத்தை ஒரு பெண் தன் வெண்கலக் குரலால் உடைத்தாள். பசுமை நிறைந்த நினைவுகளே என பாட ஆரம்பித்தாள். முடித்துவிட்டு சொன்னாள், அம்மா, இது போதும்மா, இந்த ஒரு நாள் போதும்மா, இனி எத்தனை வருடம் வேண்டுமானாலும், வீட்டுக்குள்ளேயே இருப்பேன் என்று ஒரு ஆலமரத்தடி டீ கடையில், அனைவருக்கும் தேநீர் வாங்கி கொடுத்துவிட்டு, அவர்களின் அனுபவத்தைப் பகிர சொன்னோம். அவர்கள் பேசுவதை கேட்டு, மாணவிகளும் அவர்களோடு சேர்ந்து அழுதார்கள். அவரவர் ஊரில் இறக்கி விட்டு விட்டு, நாங்கள் வீடு திரும்பினோம், இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தோடு.
கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}