- ஆ.வ. உமாதேவி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தை ஜனவரி 9, 2026 இல் தொடங்கி வைத்தார். இத்திட்டம் எங்கள் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது எனக்கு மிகுந்த பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள 1.91 கோடி குடும்பங்களின் தேவைகளையும், 2030 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு கனவுகளையும் கண்டறிய, 50,000 தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களின் கனவுகளை கேட்டு "கனவு அட்டை"யுடன் பதிவு செய்யும் ஒரு முன்னோடி முயற்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஐயா தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டமானது மக்களின் எதிர்கால தேவைகளை உணர்ந்து, எதிர்கால திட்டங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நல்ல நோக்கம் முழுமையாக வெற்றி அடைய, தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

2030 இல் தமிழகம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை தமிழக மக்களின் கனவுகள் நிர்ணயிக்கப் போகின்றன. அப்துல் கலாம் ஐயா சொன்ன, "கனவு காணுங்கள்" என்ற வார்த்தையின் செயல் வடிவமாகவே இத்திட்டத்தை நான் கருதுகிறேன்.
மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களில் இது முன்னோடி திட்டமாக அமையும் என உறுதியாக நம்புகிறேன். நம்முடைய கனவு மற்றும் இலக்குகளை நிர்ணயித்தால்தான், வெற்றிகளை அடைவதற்கான வழிகள் பிறக்கும். அந்த வெற்றிகள் நம் தமிழகத்தை இந்தியாவிலேயே, முதன்மையான மாநிலமாக உருவாக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
முதல்வர் ஐயா, என் கனவைக் கொஞ்சம் கேளுங்க!
எனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த கனவும் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே கனவு என் பள்ளியை பற்றியது. எதிர்காலத்தில் அப்பள்ளி எப்படி இருக்க வேண்டும்? என்று எல்லா நேரமும் என் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இது என்னுடைய 12 ஆண்டு கால கனவு. குறிஞ்சி மலர் கூட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும். ஆனால் என் கனவு ஒவ்வொரு நொடியும் 12 ஆண்டுகளாக பூத்துக் கொண்டிருக்கிறது. அது என்றைக்கு காயாகி கனியாகும் என்ற ஏக்கத்தில் இருக்கிறேன்.
10-12-2014இல், SSA திட்டத்தில் உருவான புது பள்ளியில் முதல் ஆசிரியராக, 11 குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து கொண்டு உள்ளே நுழைந்தோம். என் பள்ளி, என் வகுப்பறை மீது எனக்கு அலாதி அன்பு. அது எனக்கே, எனக்கு மட்டும் சொந்தமான வகுப்பறை என்ற ஒரு இறுமாப்பு எனக்குள் உண்டு. ஒரு சிறு கீறல் விழாமல் பாதுகாக்கிறேன்.

என் பள்ளி பல தலைமுறைகளை காண வேண்டும். அங்கு படித்த, படிக்கின்ற, படிக்கப் போகும் மாணவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அவர்கள் என் பிள்ளைகள் என்று மார்தட்டி, காலரை தூக்கி விட்டுக்கொண்டு, நான் பெருமிதத்துடன் சொல்ல வேண்டும். எங்கள் பள்ளி ரொம்ப அழகா, அமைதியா, அன்பா இருக்கிற பள்ளி. என்னை தாயாக நினைக்கும் குழந்தைகள். நான் சுமக்காமல் பெற்றெடுத்த எனது குழந்தைகளின் அன்பில் தினம் தினம் மூழ்கி, மகிழ்ச்சியில் திளைக்கிறேன். மனதில் எத்தனை சுமைகள் இருந்தாலும், என் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டால் போதும் அது எனக்கு சுமைதாங்கி கல்லாக மாறிவிடுகிறது.
நான் இவ்வளவு நேசிக்கும் என் பள்ளியை பற்றி எனக்கு பல கனவுகள் உள்ளன. அவை,
1.என் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும்.
2.அழகான பூந்தோட்டத்தை அமைக்க வேண்டும்.
3. அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
4. மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும்.
5. குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு கருவிகளை அமைத்தல் வேண்டும்.
6. இரண்டு பக்கம் 12 அடி உயரத்தில், பில்லர் எழுப்பி பெரியதாக பள்ளியின் பெயர் பலகை வைக்க வேண்டும்.
7. 61 வது குழந்தையை சேர்க்க வைத்து, மூன்றாவது ஆசிரியர் பணி இடத்தை ஏற்படுத்த வேண்டும்.
8.101 வது குழந்தையை சேர்க்க வைத்து இன்னொரு கட்டிடம் கட்ட வேண்டும்.
9. நம் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

10. திருத்தணி ஒன்றியத்திலேயே முதன்மையான பள்ளி என்ற நிலையை எட்ட வேண்டும்.
11. சில தனியார் பள்ளிகளில் தம் குழந்தைகளுக்கு இடம் கிடைக்க இரவு முழுவதும் காத்திருந்து, மறுநாள் சேர்க்கை விண்ணப்பம் பெற்று, அப்பள்ளியில் இடம் கிடைக்காதா என ஏங்கும் பெற்றோரை தொலைக்காட்சி செய்திகளில், பார்த்திருக்கிறேன். அதே நிலைமை நம் பள்ளியில் சேர்க்கை நடைபெற வர வேண்டும்.
இது என்னுடைய மிகப்பெரிய கனவு. இவற்றைப் படிக்கும் பொழுது படிப்போருக்கு அதிகப்படியான ஒரு செயலாகத்தான் தெரியலாம். ஆனால் இது என் உள்ளத்து உணர்வுகள். அதனை விளக்க எனக்கு வார்த்தைகள் போதவில்லை. என் வகுப்பறை எனக்கு கோவிலாகத்தான் தெரிகிறது. அங்குள்ள குழந்தைகள், பேசும் தெய்வங்களாகவே தெரிகின்றனர். என் கனவை சொல்லிவிட்டேன். அது நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அது மட்டும் நிச்சயம்.
மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் கனவுகளை நன வாக்கும் முதல்வரின் "உங்க கனவ சொல்லுங்க" திட்டம் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
{{comments.comment}}