Monday Motivation: உள்ளழிக்கல் - ஆகா? ஆகும்?

Mar 23, 2026,12:11 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


கல்விச் செல்வத்தையும் கல்வியால் பெற்ற அறிவையும் பற்றி,  நம் தமிழ்ச் சான்றோர்களும் ஆன்றோர் பெருமக்களும் பலவாறாகப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். 


வள்ளுவர், அறிவுடைமை அதிகாரத்தில் “அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் ‘உள்ளழிக்கல் ஆகா’ அரண்” (குறள்.421) என்று கூறி உள்ளார்.  அழிவிலிருந்து காக்கும் கருவி அறிவு என்று சொல்லி இருக்கிறார். 


மேலும் பலரும் காலங்காலமாக ‘அழிவற்ற செல்வம், கள்வரால் கவர முடியாது, அரசனாலும் கைப்பற்றிட முடியாது’ என்ற நாலடியார் கூறும் பாடல் கருத்தையும் மேற்கோள் காட்டுவர். 


‘வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது .... கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு மிகஎளிது’ – என்று தனிப்பாடல் திரட்டும் சிறப்பாகச் சொல்லியுள்ளது. 


ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவையெல்லாம் உண்மையா? என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். நம்மின் நினைவுத்தடங்களில் தடங்கல்கள் ஏற்பட்டு தடம் புரள்தல்கள் ஏற்படுவதைக் காண முடிகிறது. 


வயோதிகம் வந்து சேரும்போதும், தனிமையில் தவித்து தனித்து நிற்கும்போதும், உடல்நலம் குன்றி நரம்புகள் தளர்ச்சியுறும் போதும், எதிர்பாராத விபத்தில் மூளை முடங்கி கோமாவில் கிடக்கும்போதும் நினைவு அடுக்குகளில் உள்ள பல தட்டுகள் காலியாகிவிடுகின்றன. அறிவு அழிந்த நிலை.... இவையெல்லாம் விதிவசம் என்று சொல்லிக் கடந்துவிடலாம். 




ஆனால் இன்றைய மின்னணு மற்றும் செயற்கைத் தொழில்நுட்பக் காலக்கட்டத்தில் இளம்பிள்ளைகள், பள்ளிச் சிறார்கள் மற்றும் நடுவயது மனிதர்களிலும் பலருக்கும் ஞாபக மறதி என்ற நினைவுகள் தொலையும் தொல்லைகள் இருக்கின்றனவே. ஏன்? சிந்தித்தது உண்டா?


மூளையின் சிந்தனைத் திறத்தை, நினைவாற்றலைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் அரிக்கும் கறையான் போல… நமக்கே தெரியாமல் நம்முள் நிகழும் அழிவு இது. ஆம்...! தொடர்ந்த தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அடிமையாவதும், சிறுவர்கள் விளையாடும் வீடியோ கேம்ஸ்களும் அவர்களின் மூளையின் நினைவு அடுக்குகளைப் பாதிக்கின்றன. பிறருடன் கலந்து பழகும் பண்பை மாய்க்கின்றன. பேசும் வல்லமையை முடக்கி ஊமைகளாக, சங்கோஜிகளாக மாற்றிவிடுகின்றன. 


விழிப்போடு இருந்து வீண்பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டும் அடிமையாவதைத் தவிர்த்தும் நம்மை நாமே காப்போம்! அறிவு உள்ளழிக்கல் ஆகா அரணாக இருக்க வேண்டுமென்றால், நாம்தான் அந்த அரணை முறையாகப் பராமரிக்க வேண்டும். 


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள்...நொடிக்கு நொடி மாறும் அரசியல் களம்

news

27 நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களும்!

news

தமிழகம் வாழ வேண்டும் என்றால்... திமுக வீழ வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றும் சரவனுக்கு ரூ.5,840 குறைவு!

news

தேமுதிக.,வுக்கு எத்தனை சீட்? மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை

news

திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்பதா? வேண்டாமா? சிபிஎம் அவசர ஆலோசனை

news

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம்... அமமுக 10, பாஜக 29 இடங்களில் போட்டியா?

news

தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டி இல்லையா?

news

நீரே ஆதாரம்.. வாழ்வின் மூலாதாரம்.. Water is Life

அதிகம் பார்க்கும் செய்திகள்