கனவிலும் நீ!

Apr 15, 2026,10:44 AM IST

- வ. துர்கா தேவி


பந்து வீச்சுக்கு

ஏற்ற பிச் என்று

ஜெஃப்ரி பாய்காட்      

சொன்னபோது

எப்படியாவது

இந்தியா டாஸில்

வெற்றி பெற்று

பேட்டிங் செய்ய 

வேண்டும் 

என்று

அனைத்து 

கடவுள்களையும்

வேண்டிக் கொண்டேன்.


ஆனால்

காட்சி மாறிவிட்டது.


டாஸ் வென்ற ஆஸ்திரேலியா

பேட்டிங்கை

தேர்வு செய்தது.




அது சரி…

கடவுள்

நமக்கு மட்டுமா 

சொந்தம்?


பவுலிங்

பிட்ச் 

என 

கணிக்கப்பட்ட

கிரவுண்டில் 

அவர்கள் 

கருணையே 

இல்லாமல்

பந்தை

அடித்த 

அடி

ஏனோ, 

கோவை சரளா வடிவேலுவை 

வெளுக்கும் 

காட்சியை வேறு 

நினைவூட்டியது...


50 ஓவர்களில் 

272 எடுத்தால்

வெற்றி

என 

இமாலய 

இலக்கை

நிர்ணயித்தது

ஆஸ்திரேலியா.


இடது கை

பேட்டிங்

நாயகனான

கங்குலியும்,

இந்திய 

கிரிக்கெட்டுக்கு

பெருமை சேர்த்த

சச்சினும்

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக

களம் இறங்கினர்.




மிக லாவகமாக

சில பந்துகளை

பவுண்டரிக்கு 

அனுப்பிவிட்டு

பெவிலியனுக்குத்

திரும்பினார்

கங்குலி.


எதிரணியினரை

“நீயே பந்து வைத்துக் கொண்டு

பௌலிங் 

போட்டுக் கொள்!”

என்று கதற 

விடச் செய்யும்

டிராவிட் உடன்

கைகோர்த்தார்

சச்சின்.


மட்டைக்கு வந்த

பந்துக்கு

வலிக்குமோ 

என

மெதுவாகத் 

தட்டிக் 

கொடுத்து

டிராவிட்

சிறுகச்

சிறுக

ரன்களை 

சேர்க்க

ஒரு ஓவருக்கு

எட்டு ரன், 

ஒன்பது ரன் 

தேவை என

required run rate

ஏறிக் கொண்டே

சென்றது.


ஆனால்

அடுத்த 

20 ஓவர்களுக்கு

விக்கெட் விழாமல்

ஆட வேண்டும்

என்பதை

இரு 

இமயங்களும்

நன்றாகவே

உணர்ந்திருந்தனர்.


பௌலிங்கில்

மூன்று விக்கெட் 

எடுத்த

சச்சின்

பேட்டிங்கிலும்

ஜொலிப்பார்

என்று சொன்ன

அப்பாவின் 

முகத்தை

பார்த்துக்

கொண்டே

கிரிக்கெட்டையும்

பார்த்துக்

கொண்டிருந்தேன்.


சில ஓவர்களில்

டிராவிட்

பெவிலியன் 

திரும்ப,

அடுத்தடுத்து

வந்தவர்கள்

தங்கள் 

பங்கிற்கு

Scoreboard இல் 

சில ரன்களை

சேர்த்து விட்டு 

வந்த வழி

செல்ல,

மறுபுறம்

நங்கூரமிட்டபடி 

அயல் மண்ணில்

கோப்பை கனவை நிஜமாக்கும் 

முனைப்புடன் 

சச்சின்.


சில நேரங்களில்

இந்தியாவின் பக்கம்,

சில நேரங்களில்

ஆஸ்திரேலியாவின்

பக்கம்

என

வெற்றி

மாறி மாறி

பயணம் 

செய்தது.


இறுதியில்

சச்சினின்

தினமாகவே

அன்றைய 

தினம்

அமைந்து

கோப்பையை 

இந்தியா 

கைப்பற்றிய 

போது 

நேரம் 

இரவு 11:30 மணி.


பின்னர்

கமெண்டரியின் கதாநாயகன்

ரவி சாஸ்திரியின்

காந்தக் குரல் 

முழங்கியபடி

வெற்றி 

ஆர்ப்பாட்டம்

அனைத்தும் 

முடிந்து

டிவியை

அணைத்த போது

அடுத்த நாளே

விடிந்துவிட்டது. 


ஆம்…

12:30 மணி.


காலை

பள்ளிக்கு

அவசர 

அவசரமாகச் 

சென்று

அரையாண்டு 

தேர்வுக்கான

தேர்வறையில்

அமர்ந்தவுடன்

கணித

வினாத்தாளை

கொடுத்தார்

கிரிக்கெட் 

பார்ப்பவர்களை

எல்லாம்

முட்டாள்களாகவே

பார்க்கும்

எங்கள் 

சமூக அறிவியல் 

ஆசிரியர்.


என் 

கேள்விக்கென்ன

பதில்

என்று

கண்காணிப்பாளருக்கு தெரியாமல்

கண்களால் கேட்கும்

பழக்கமும்

இல்லை,

அத்திறமையும்

எனக்கில்லை.


மயக்கமா…

கலக்கமா…

மனதிலே

குழப்பமா…

என்று

எத்தனை

முறை

வினாத்தாளை 

முன்னும்

பின்னும்

திருப்பி

பார்த்தாலும்

ஒன்றும்

விளங்கவில்லை.


மானே… தேனே…

பொன்மானே…

என்றெல்லாம்

எழுதி

விடைத்தாளை 

நிரப்ப

வாய்ப்பே 

தராத

கணக்கு

வினாத்தாள்...


“இன்னும்

அரை மணி நேரமே

உள்ளது”

என்று மணி

ஒலித்த போது

வெற்று

விடைத்தாளுடன்

விழித்துக் கொண்டு

நான்…


சட்டென 

யாரோ

வாசல் தெளித்து

கோலமிடும்

ஓசை கேட்டு 

கண் விழித்தேன்.


பள்ளி முடித்து

முப்பது 

ஆண்டுகள் 

ஆன போதும்,

நானே

ஒரு ஆசிரியை 

ஆன பிறகும் 

ஆண்டுக்கு

ஒரு முறை வந்து

தேர்வு பயத்தை  

புதுப்பிக்க

இந்தக் கனவு

தவறுவதே 

இல்லை


(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்