- ஆனந்தி. ச
வாசலையே பார்த்து கொண்டிருந்த பத்மாவிற்கு கழுத்து வலியே வந்துவிட்டது. கடைக்கு போன கணவரையும் காணவில்லை, கம்ப்யூட்டர் கிளாஸ் போன மகனும் இன்னும் வரவில்லை. தோழியை பார்த்து வரேனென்று சொல்லி சென்ற மகளோ மணிக்கணக்காய் வரவில்லை. யாருக்கும் போன் செய்யவும் தோன்றவில்லை. போன் செய்தால் சொல்லிவைத்தாற் போல் சொல்வதென்னவோ ”நான் என்ன குழந்தையா ? என்பதுதான். மனைவியின் முதல் குழந்தை கணவன் என்பதும்.. எத்தனை வயது ஆனாலும் தனது மக்கள் தன் அம்மாவிற்கு குழந்தைதான் என்பதை எப்படி புரியவைப்பது?
மனசு பாரமாக இருக்க, சரி இரவு சாப்பாட்டையாவது செய்யலாம் என கிச்சனுக்கு வந்தாள் பத்மா. அப்பப்பா எத்தனை குழப்பம் இந்த சமையல் செய்வதில்? வயதாகிவிட்டதால் கணவனுக்கும் தனக்கும் உப்பு காரம் கம்மியாகவும், வயது பிள்ளைகளானதால் அவர்களுக்கு காரசாரமாக வேண்டும் .
என்ன செய்வது? சரி . இட்லி ஊற்றி காரசட்னியும் கொஞ்சமாக சாம்பார் வைக்க யத்தனித்தவள் .. காலிங் பெல் சத்தம் கேட்டவள் .. இதோ வரேன் .. என்றபடியே அடுக்களையிலிருந்து வேகமாய் வந்தவள் டைனிங் டேபிள் முனை வயிற்றில் தட்ட “அம்மா" என கத்தியபடியே வயிற்றைபிடித்த படி கீழே உட்கார்ந்தாள். வலியைவிட வாசலில் யார் என்ற ஆர்வத்தில், யாரு பெல் அடிச்சது ? இதோ வரேன் என கூறி வலியையையும் பொருட்படுத்தாது எழுந்தாள்.
காலிங்பெல் அடித்தது அவளின் ரத்தங்கள் என்ற நினைப்புடன் ஓடி வந்தவளுக்கு ஏமாற்றமே.
"ஓ நீயா ரவி? என்றவள். “நான் ஐயாவோ தம்பியோ பாப்பாவோன்னுல்ல நினைச்சேன்” என்றாள் எதிர்ப்பார்ப்பின் ஏமாற்ற குரலில்.
“அயர்ன் துணிக்கா அயர்ன் துணிக்கா. எத்தனை தடவ சொன்னேன் அக்கா , உன் காதுல தான் விழல" ..
“சரிடா , சாரிடா .. எவ்வளவு தரணும்?"
"ஆறு பேண்ட் எட்டு சட்டை, பத்து சுடிதார் செட்டுக்கா.. மொத்தம் 380 ஆச்சுக்கா “
" சரி இரு பணம் கொண்டுவரேன்" என்றவள் , சென்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை நீட்ட ..
“அக்கா சில்லறை இல்லையே “...என்றவனிடம். மீதி உன்கிட்டையே இருக்கட்டும் நீ எங்க , ஓடியா போப்போற? இல்ல நான் எங்கையாவது போகப்போறேனா? என்றவளிடம், அக்கா நீ எப்போதுமே சூப்பர்க்கா என்று வாயெல்லாம் பல் தெரிய வாழ்த்தி நகர்ந்தான் அயர்ன் மேன் ரவி..
ஐந்து ரூபாய் கொடுக்கவேண்டுமானால் கூட உடனடியாக கொடு எனக்கூறும் அடாவடிகளுக்கு நடுவே ரவிக்கு பத்மா தெய்வமாக தெரிந்தாள்.
கிச்சனில் சென்று வேலையை தொடர ஆரம்பித்தாள்.
இட்லி ஆறு தட்டு ஊற்றி காரச்சட்னியும் அரைத்தாகிவிட்டது.. சாம்பாரும் மணக்க ஆரம்பித்தது.. சாப்பிடத்தான் இன்னும் யாரையும் காணோம்.
அனைவருக்கும் கொடுத்தே சாப்பிட்டு பழகிவிட்ட பத்மாவிற்கு சூடாக சாப்பிடவும் தோணவில்லை. மாமனார், மாமியார் இருந்த காலத்தில் அவர்களுக்கு டிபன் கொடுத்து .. மகன் மகளுக்கு ஊட்டி விட்டு கணவனுக்காக காத்துக் கிடப்பாள் .. வந்ததும் அவருக்கும் கொடுத்து குழந்தைகளை தூங்க வைத்தபிறகே சாப்பிடுவாள் பத்மா ..
அதற்குள் சாப்பாடு ஆறி சுவையே போய்விட்டிருக்கும் ..
இப்பொழுதும் அதே பழக்கம்தான் .. அவளை யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை . ஆனாலும் சாப்பிடுவதில்லை ..
இம்முறை காலிங்பெல்லை அழுத்தியது மகன்..
வந்தவன் ஆசுவாசப்படுத்தியதும் .. சாப்பிட வரியாப்பா ? என்றதும் .
அம்மா இன்னைக்கு கம்பூட்டர் கிளாஸ் முடிஞ்சதும் நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து நம்ம “பஜாரில் புதிதா தொறந்திருக்காங்கல்ல? மணி புரோட்டா கடை ,அதிலே ஒரு வெட்டு வெட்டிட்டோம். எனக்கு அது போதும் நான் தூங்கப்போறேன்" என்றவாறே அறையை அறைந்து மூடினான் .
கணவரின் சத்தம் கேட்டு வந்தவள் அவரிடம் இருந்து சாமான்கள் இருந்த பையை வாங்கியபடியே .. “ஏங்க, வாங்க சாப்பிடலாம் “எனக்கூற . இன்னைக்கு அபுதாபியிலேர்ந்து வந்திருந்த என் பால்ய சிநேகனை பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில பார்த்தேன் .. ரொம்ப நாளைக்கப்புறமா பார்க்குறோமா? ரெண்டு பெரும் பேசிக்கிட்டே அன்னபூரணி ஹோட்டல்ல சாப்பிட்டோம் மா” பேசி பேசி ரொம்ப களைப்பாயிருக்கு நான் போய் படுக்கிறேன் “என்றவர் பட்டெனெ படுக்கையறைக்கு பாய்ந்தார்..
கடைசியில் கதைவை தட்டிய மகளோ . அம்மா இன்னைக்கு சிநேகா வீட்ல அவங்க அக்கா ராஜஸ்தான் புது டிஷ் ஒண்ணு செஞ்சிருந்தாங்க அம்மா செம சூப்பர் தெரியுமா? நீயும் எப்ப பார்த்தாலும் இட்லி தோசைன்னு இம்சை பண்ணிக்கிட்டு என பத்மாவின் கண்னத்தை செல்லமாய் கிள்ளி மறைந்து போனாள்.
நீ சாப்பிட்டியா ? சாப்பிடு என யாரும் ஓர் வார்த்தை கூட கேட்காததை நினைத்தவள் பட்டென்று வந்த கண்ணீரை படாரென துடைத்தவள்.. போனை எடுத்து ரவி உங்க வீட்ல கொஞ்சம் எங்க வீட்டுக்கு வரச்சொல்லுறியா ? டிபன் இருக்கு குழந்தைகளுக்கு கொடு என்றவள், கிச்சனுக்கு சென்று இரண்டு டம்பளர் தண்ணீர் குடித்து முடித்தவளுக்கு , அப்போதுதான்.. டேபிளில் இடித்துக்கொண்ட வலி தெரிய ஆரம்பித்தது.
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
பெண்களுக்கு பலம் தரும்.. கருப்பு உளுந்தங்கஞ்சி .. வரலாறு கூறும் சமையல் (பகுதி 4)
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
வலி!
மாறிக்கொண்டே இருப்பதும் மாறாதிருப்பதும் (The ever changing and UnChanging)
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
{{comments.comment}}