மதுரை அரசாளும்.. மீனாட்சி.. மீனாட்சி அம்மன் வரலாறு!

Apr 13, 2026,02:15 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


தூங்கா நகரம் மதுரையை அரசாளும் மீனாட்சியம்மன் வரலாறு பற்றிய தகவல்களை காண்போம்.


மதுரை மாநகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகப் பிரசித்தி பெற்ற  மீனாட்சியம்மன் கோவில் நகரின் மையப் பகுதியில் மிகப்பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 1600 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. 

 

மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோவில்:


மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையானதாக உள்ளது. இந்த கோவில் 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதத்தால் ஆனது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவர் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி  தளத்தையும் அமைத்ததாக கூறப்படுகிறது.


மீனாட்சி அம்மன் வரலாறு:




மலையத்துவச பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். அவரது மனைவி காஞ்சன மாலை. இருவருக்கும் குழந்தையின்மை  காரணத்தினால் பல்வேறு யாகங்கள் செய்து இறைவனை வேண்டி வழிபட்டு வந்தனர். பிரம்மன் உபதேசத்தின் பேரில் "புத்திர கா மேட்டி" யாகம்  செய்தனர். அவர்களின் வழிபாட்டிற்கு அருளாசி புரிந்த உமா தேவியார் அந்த யாக குண்டத்தில் மூன்று தனங்களை உடைய பெண் குழந்தையாக தோன்றினார். குழந்தை வரம் கிடைக்கப்பெற்றதனால் அரசனும், அரசியும் பேரானந்தம் அடைந்தனர். ஆனால், அக்குழந்தையின் உருவத்தில் இருக்கும் மாற்றத்தை கண்டு மனம் வருந்தினர். அவர்கள் வருந்துவதை கண்ட சிவபெருமான்  அசரீரியாக  "மன்னா மனம் வருந்தாதே இக்குழந்தைக்கு 'தடாதகை 'என்று பெயரிட்டு கல்வி கேள்விகளில் சிறப்பு பெறுமாறு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடு "தனக்கேற்ற கணவனை குழந்தை காணும் பொழுது மிகுதியாக உள்ள ஒரு தனம் மறைந்து விடும்" என்று கூறி மறைந்தார். அரசனும் மன அமைதி பெற்றான். தடாதகை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, வீரமிக்கவளாக,நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள்.


இக்கதை உணர்த்தும் விஷயம் என்னவென்றால் ஒரு மனிதன் பிறக்கும்போது பரஞானம், அபரஞானம், தன்முனைப்பு  என்ற ஆணவம் ஆகிய மூன்று தனங்களோடு பிறக்கின்றான்.தடாதகை இறைவனை கண்டவுடன்  மூன்றாவது தனம் மறைந்தது போல மனிதன் இறைவனை தரிசிப்பதால்  ஆணவம் என்ற மூன்றாவது தனம் மறையும் எனும் தத்துவத்தை இக்கதை உணர்த்துகிறது.


பாண்டிய நாட்டின் அரசி தடாதகை செங்கோல் வழுவாமல்,அவள் செய்த ஆட்சியில் பாண்டிய நாடே பெருவளம் பெற்று பொன்னாடாக பொலிவுடன் திகழ்ந்தது. தடாத கை அவளுடைய நாட்டின் எல்லையை விரிவு படுத்த எண்ணி பல குறுநில மன்னர்களின் மீது படையெடுத்து போர் செய்து வெற்றி  பெற்றாள். பின்னர் பெரும் படையுடன் கையிலயம் பதிக்கு சென்று போர் முரசு கொட்டினாள். அவளை எதிர்த்த பூதப்படைகளும், நந்தி தேவரின் படைகளும் தோல்வி அடைந்தன. இதனை அறிந்த இறைவன் போர் கோலத்துடன் அங்கே எழுந்தருளினார்.


தடாதகை எம்பெருமானை தன் எதிரே கண்டதும் பெண்ணுக்கு உரிய அச்சம், மடம்,நாணம் பயிர்ப்பு எனும் நான்கு  வகை நெறியில் நாணி   தலைகுனிந்தாள். தடாதகையின்   மூன்றாவது  தனங்களில்  ஒன்று மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்பதை உணர்ந்தாள். இறைவன் தடாதகையை, "நீ மதுரைக்கு செல், இன்றைக்கு எட்டாம் நாள் நாம் அங்கு வந்து உன்னை திருமணம் புரிவோம்" என்று கூறினார். அதன்படி தடாதகை மதுரையை அடைந்து மகளிர் அட்டமங்கலத்தோடு எதிர்கொள்ள அரண்மனைக்குள் புகுந்தாள். இறைவனுக்கும் தடாத கைக்கும் ஆன திருமணநாள் குறித்து பல நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. மதுரை வீதிகளும், மாளிகைகளும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும்,திருமாலும் வந்திருந்தனர். மேலும் பல நாட்டு மன்னர்களும் திரண்டு திருமணத்திற்கு வந்திருந்தனர்.


திருமணம்:


பங்குனி உத்திர நன்னாளில் இறைவன் தடாதகையை   மணம் புரிந்தார். சுந்தரபாண்டியன் எனும் பெயருடன் மதுரையை ஆண்டு வந்தார். அதன் பின்பு முருகனின் அவதாரமாக வந்து தோன்றிய உக்கிரகுமார பாண்டியனுக்கு முடி சூட்டிவிட்டு மீனாட்சி சுந்தரேசுவரராக இறைவடி வாயினர் என்பது இத்தல வரலாறு.

 

மதுரை -  தூங்கா நகரம்.

 

மீனை ஒத்த கண்களை உடைய தடாதகை பிராட்டியே "மீனாட்சியம்மை "என்ற பெயருடன் கோவில் கொண்டு  விளங்குகின்றாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு அருளாசி புரிய மீனாட்சி அம்பிகை   அருளுகிறார்.

 பக்தர்கள் தங்கள் மஞ்சள், குங்குமம் நிலைக்கவும், தைரியமாக பேசவும், மீனாட்சி அம்மையே கதி என தவம் கிடக்கின்றனர். மீனாட்சி என்பது மீன் போன்ற அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்.மீன் முட்டையிட்டு தனது பார்வையாலே குஞ்சு பொறிக்கும்.அதுபோல, உலகத்து மக்களுக்கு தன் அருள் பார்வையால் மீனாட்சியாக நலம் தருபவள் என்று புராணங்கள் கூறுகின்றன.


மீன்கள் எவ்வாறு கண்கள்  இமைக்காமல் இரவும், பகலும் விழித்து கொண்டிருப்பது போல தேவியும் கண்கள் இமைக்காமல் உயிர்களை காத்து வருகிறாள். இதனாலேயே,மதுரைக்கு 'தூங்காநகரம் 'என பெயர் வந்தது. கருவறையில் மீனாட்சி அம்மன் இரு திருக்கரங்களுடன், ஒரு கையில் கிளியுடன் செண்டு  ஏந்தியபடி காட்சி தருகிறாள்.மீனாட்சி அம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.கருணை பொழியும் கண்களுடன் அகிலம் எல்லாம் அருள் பாலிக்கும் அன்னையைக் காண கண் கோடி வேண்டும். ஒரு குடும்பத்தில் பெண்கள் கை ஓங்கி இருந்தால் அந்த வீட்டில் மீனாட்சி ஆட்சி நடக்கிறதா?.. என்று சுவாரசியமாக பேச்சு வழக்கில் கேட்பார்கள்.அந்த அளவுக்கு மீனாட்சி அம்மன் புகழ் இன்றளவும் கொடி கட்டி பறக்கிறது. 

 இக்கோவிலின் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழா மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 மீனாட்சி அம்மன் அருளால் வரும் பராபவ வருடம் முழுவதும் அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக.


மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

news

சுகம் தரும் சுற்றுச் சூழல்.. மாசு நீங்கிடும் மனதும் தெளியும்!

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

The Left Hand That Wrote a Destiny.. விதியைத் தீர்மானித்த இடது கை!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்