தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

Sep 23, 2026,10:27 AM IST

- சு.தா.அறிவழகன்


ஒரு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பும் சட்டம்-ஒழுங்கும் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு முதன்மையான தூண்கள். ஆனால், கடந்த காலங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளிலும் அரசியல் போராட்டங்களிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்தபோது, காவல்துறையினருக்கு அவற்றை எதிர்கொள்வதில் பெரிய சவால்கள் உருவாயின. உணர்வுப்பூர்வமான சூழல்களில் பெண்களைக் கையாளுவதில் ஏற்படும் சிறு தவறும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்கும் அபாயம் இருந்தது. இத்தகைய இக்கட்டான காலக்கட்டத்தில், தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட ஒரு முடிவே மத்திய இருப்புப் காவல் படையின் (CRPF) மகளிர் பிரிவு உருவாக்கம்.


1986-ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் முதல் மகளிர் பட்டாலியனான 88 (M) பட்டாலியன் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் பரிணாம வளர்ச்சி கண்டு, நாட்டிலேயே 6 பிரத்யேக மகளிர் பட்டாலியன்களைக் கொண்டுள்ள ஒரே துணை ராணுவப் படை என்ற பெருமை சிஆர்பிஎஃப்-க்கு மட்டுமே உரியது.


தொடக்கத்தில் ஒரு பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்தப் படை, 1987-இல் மீரட் கலவரத்தை அமைதிப்படுத்தியதிலும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையில் (Indian Peace Keeping Force) இணைந்து பணியாற்றியதிலும் தன் வீரியத்தையும் வீரத்தையும் நிரூபித்துக் காட்டியது.




இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 1995-இல் குஜராத்தின் காந்திநகரில் 135-வது பட்டாலியனும், 2011-இல் நாக்பூரில் 213-வது பட்டாலியனும் உருவாக்கப்பட்டன. பெண்களின் அதிகாரமளித்தலை வெறும் முழக்கமாக நிறுத்தாமல், பாதுகாப்புத் துறையிலும் சாத்தியமாக்க 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் மேலும் 3 புதிய பட்டாலியன்கள் (232, 233, 240) சேர்க்கப்பட்டன. இன்று விரைவு அதிரடிப் படை (RAF) உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் மகளிர் வீராங்கனைகள் அங்கம் வகிப்பது நாட்டின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.


ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகள், மணிப்பூர், அஸ்ஸாம், அயோத்தி மற்றும் இடதுசாரி தீவிரவாதம் நிறைந்த சவாலான நக்ஸல் பாதிக்கப்பட்ட பகுதிகள் என இந்தியாவின் மிகக் கடுமையான போர்க்களங்களில் சிஆர்பிஎப் வீராங்கனைகள் தாய்நாட்டைக் காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


ஆண் ஆதிக்கம் நிறைந்ததாகக் கருதப்பட்ட ராணுவப் பிரிவுகளில், பெண் வீராங்கனைகள் தங்களின் அர்ப்பணிப்பாலும் திறமையாலும் முத்திரை பதித்து வருகின்றனர். நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதில் சிஆர்பிஎஃப் மகளிர் பிரிவின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியப் பெண்களின் ஆற்றலுக்கும் தைரியத்திற்கும் சான்றாகத் திகழும் இந்த மகிளா பட்டாலியன்களின் சேவை என்றும் போற்றத்தக்கது!


40 ஆண்டுகளை இன்று பூர்த்தி செய்யும் சிஆர்பிஎப் வீராங்கனைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் வைப்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

அதிகம் பார்க்கும் செய்திகள்