- ஸ்வர்ணலட்சுமி
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும். இத்திருத்தலம் அனைத்து திருமுறைகளிலும் பாடப்பெற்ற பெருமையைக் கொண்டது. இது 'சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்' என்றும் 'சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில்' என்றும், சிதம்பர கோவில் என்றும், அழைக்கப்படுகிறது.
சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. "திருச்சிற்றம்பலம் "எனும் சொல் இந்த தலத்தையே குறிக்கிறது .'பூலோக கைலாசம் 'என்றும் 'கைலாயம்' என்றும் அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமையப்பெற்றுள்ள ஸ்தலத்தை தரிசனம் செய்தால் முக்தி என்பது சைவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் வடிவமைப்பு:

தில்லை நடராஜர் கோவில் 50 ஏக்கருக்கு மேல் பரந்த வளாகத்தில் கட்டப்பட்ட ஒரு பாடல் பெற்ற ஸ்தலமாகும். மனிதனின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருப்பதை போல இக்கோவிலில் மூலவர் இருக்கும் கருவறை கோவிலின் நடுப்புள்ளியில் இல்லை, இடது புறமாக சற்று நகர்ந்து இருக்கிறார்.
ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையீரல் உதவியாளர் மூச்சு விடுகிறார். கோவிலின் இதயம் போல் அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் செய்யப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல் அக்கூரையில் 72 ஆயிரம் ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசனின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருப்பது இக்கோவிலில் சிறப்பாகும்.
கோவிலுக்குள் கோவில்கள்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோவிலுக்குள் பல்வேறு கோவில்கள் அமைந்திருக்கின்றன. சிவகாம சுந்தரி அம்மன் கோவில் மூன்றாவது பிரகாரத்தில் வடக்கு பகுதியில் சிவகாமசுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த சன்னதி அருகே எமன் மற்றும் சித்திரகுப்தனுக்கு சிலைகள் அமைந்துள்ளன. கோவிந்தராஜ பெருமாள் கோவில் நடராஜன் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. ஆறுமுகம் கொண்ட முருகன்,வள்ளி மற்றும் தேவசேனாவுடன் முருகன் கோவில் உள்ளது.
நாகலிங்க கோவில்- நவகிரகங்களால் வழிபடப்பட்ட லிங்கங்கள் உள்ள கோவில்கள் உள்ளன. பதஞ்சலி சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதி உள்ளது. முக்குறுனி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொ ல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் என பல்வேறு விநாயகர் சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளது.
கனக சபை :
சித்த சபை,கனக சபை, நடன சபை,தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்துள்ளன. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளை கொண்டுள்ளது. இவை 64 ஆய கலைகளை குறிக்கின்றது என்று கூறப்படுகிறது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.
'பொன்னம்பலம்' சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த ஐந்து படிகள் "பஞ்சாட்சரப்படி" என்று அழைக்கப்படுகின்றது. அதாவது சி வா ய ந ம எனும் ஐந்து எழுத்து மந்திரம் ஆகும். கனகசபை பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியில் இல்லாமல் பக்கவாட்டில் அமைந்துள்ளது.இதனை தாங்க 4 தூண்கள் உள்ளன. இந்த நான்கும் நான்கு வேதங்களை குறிக்கின்றது எனும் அமைப்பை கொண்டுள்ளது இக்கோவில்.
சிதம்பர ரகசியம் :
இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில்,அங்குள்ள திரை அகற்றப்பட்டு தான் தீபாராதனை காட்டப்படுகிறது.அங்கு திருவுருவம் இல்லாது தங்கத்தால் ஆன வில்வத்தல மாலை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆதியும் அந்தமும் கிடையாது, அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதே இந்த சிதம்பர ரகசியம்.
விழாக்கள்:
தில்லை அருள்மிகு நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தேர் திருவிழாவும், மார்கழி மாதம் மார்கழி ஆருத்ரா தரிசனத் தேர் திருவிழாவும் என இரு முறை திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்வது வழக்கம்.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் ஆன்மீகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புகழ்பெற்ற சைவத்தலமாகவும், சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது.
நம் வாழ்நாளில் ஒரு முறையேனும் இக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பு. ஆனித் திருமஞ்சனமான இன்று நடராஜர் அருள் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும்,இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மிக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தாயாக, தந்தையாக அரவணைத்தவரை மறந்த ஒரு மகனின் தேடல்
தந்தை எனும் ரத்தினம்
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இறைவன் அளித்த இணையற்ற அருட்கொடை
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
International Yoga Day: செய்யும் வழி யோக வழி! உய்யும் உன் தேக வலி!
{{comments.comment}}