அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்

Jun 06, 2026,01:43 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி.


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை   

பண்பும் பயனும் அது.


இத் திருக்குறளின் பொருள்: 


ஒருவருடைய குடும்ப வாழ்க்கை அன்புடையதாகவும், அறம் சார்ந்ததாகவும்  இருக்க வேண்டும், .  அந்த வாழ்க்கையின் சிறந்த பண்பும் பயனும்   அந்த அன்பும் அறமுமே ஆகும்.


இந்தத் தத்துவத்தை விளக்கும் ஒரு சிறுகதை இதோ


மதிவாணன் - அகல்யா தம்பதியினர் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள். வசதியான வீடு, கார் என எல்லாம் இருந்தும், அவர்களது அந்தப் பெரிய வீட்டில் ஏதோ ஒரு நிசப்தம் எப்போதும் நிலவியது. இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்வார்கள், ஆனால் மனதால் வெகு தொலைவில் இருந்தனர்.


ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது தாத்தாவின் ஊரான வத்தலக்குண்டுவிற்குச் செல்ல மதிவாணன் முடிவெடுத்தான். அங்கே அவனது தாத்தா சிவநேசன் மற்றும் பாட்டி மரகதம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.




அவர்கள் ஊருக்குச் சென்றபோது, பாட்டி மரகதம் உடல்நலக் குறைவால் படுத்திருந்தார். ஆனால், தாத்தா சிவநேசன் சற்றும் சோர்வின்றி அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்.


மதிய உணவின் போது, தாத்தா பாட்டிக்கு ஊட்டி விடுவதைப் பார்த்த அகல்யா வியப்புடன் கேட்டாள், "தாத்தா, இவ்வளவு வயதான காலத்திலும் பாட்டி மேல் உங்களுக்கு எப்படி இவ்வளவு அன்பும் அக்கறையும்  குறையாமல் இருக்கிறது?" என்றாள்.


தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னார், "அகல்யா, அன்பு என்பது ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ஒருவருக்காக ஒருவர் வாழ்வது. இவள் என் வாழ்க்கையின் அங்கம்.  இவள் காட்டிய அன்பினால் தான் என் முரட்டுத்தனம் குறைந்து நான் ஒரு நல்ல மனிதனாக மாறினேன்."


மாலையில், கிராமத்து மக்கள் பலர் தாத்தாவைத் தேடி வந்தனர். ஒருவருக்கு  திருமண உதவி, ஒருவருக்குக் கல்வி உதவி எனத் தாத்தா தாராளமாகச்  உதவி செய்து கொண்டிருந்தார்.


அப்போது மதிவாணன் குறுக்கிட்டு, "தாத்தா, நீங்களே உங்களின் சொற்ப ஓய்வூதியத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள.  இதில் இவ்வளவு பேருக்கு உதவி செய்தால் உங்களுக்கு என்ன மிஞ்சும்?" என்றான்.


தாத்தா மதிவாணனின் தோளைத் தொட்டுச் சொன்னார், "தம்பி, நாம் மட்டும் நன்றாக வாழ்வது வாழ்க்கை அல்ல. நாம் வாழும் வாழ்க்கையினால் பிறருக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதுதான் இல்வாழ்க்கையின் 'பயன்'. நான் அறம் செய்யும்போது, உன் பாட்டி ஒருபோதும் தடுத்ததில்லை. அதுதான் எங்களை இன்றுவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது." என்றார்.


அன்று இரவு மதிவாணனும் அகல்யாவும் தாத்தா சொன்ன அந்த இரண்டு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அதாவது பண்பு என்பது ஒருவருக்கொருவர் இல்வாழ்க்கையில்  காட்டும் நிபந்தனையற்ற அன்பும், அந்த அன்பின் வழியாக   அவர்கள் இணைந்து சமூகத்திற்குச் செய்யும் அறச்செயல்களே அந்த இல்வாழ்க்கையின் வெற்றியின் பயனாகும். என்பதை சரியாக புரிந்து கொண்டனர்.


அடுத்த நாள் அவர்கள் சென்னைக்குக்  திரும்பிய பிறகு ,  மடிக்கணினிகளைப் எப்போதும்  பார்ப்பதை விடுத்து,  தினமும்  சற்று நேரம் ஒதுக்கி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, சிரித்து , புன்னகைத்து, அன்பை வெளிப்படுத்திக்  கொண்டனர். அவர்கள் வீட்டில் இனி நிசப்தத்திற்கு இடமில்லை; 


மேலும் மாத சம்பளம் வந்தவுடன் ,ஒரு சிறு தொகையை ஏழை எளியோருக்கு உதவ பயன்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.


அங்கே 'அன்பும் அறனும்' குடியேறி விட்டது.


இந்த குரல் உணர்த்தும் நீதி என்னவென்றால்:


உங்கள் குடும்ப வாழ்க்கையில் அன்பு நிறைந்திருந்தால் 

அதுவே அந்த வாழ்வின் சிறப்பு; 

அந்த அன்பின் வழியாக நீங்கள் பிறருக்குச் செய்யும் அறமே 

உங்கள் வாழ்வின் வெற்றி.


அதாவது: அன்பும் அறமும் ஒரு சேர அமைந்துவிட்டால், அந்த வாழ்க்கையே முழுமை பெற்ற வாழ்க்கையாகும். என வள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார்


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்