திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?

Mar 09, 2026,05:51 PM IST

திருச்சி: தமிழக அரசியலில் எந்தவொரு பெரிய மாற்றமும் திருச்சியில் இருந்து தான் தொடங்கும் என்பது எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. திராவிடக் கட்சிகள் முதல் புதிய வரவான தமிழக வெற்றி கழகம் வரை, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவோ அல்லது மாநில அளவிலான மாநாடுகளை நடத்தவோ திருச்சி ஒரு 'சென்டிமென்ட்' மற்றும் 'திருப்புமுனை' மையமாகத் திகழ்கிறது.


பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்கு திருச்சிக்கும் இடையேயான பிணைப்பு பல தசாப்த காலமானது. குறிப்பாக திமுகவின் வரலாற்றில் திருச்சிக்கு என்றுமே தனி இடம் உண்டு. திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு 1956-ல் திருச்சியில் நடைபெற்றது. அப்போதுதான் 'தேர்தல் அரசியலில் ஈடுபடுவதா வேண்டாமா?' என்பது குறித்து அக்கட்சி வாக்கெடுப்பு நடத்தியது. 56,942 தொண்டர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, திமுக தேர்தல் களத்தில் இறங்கியது. அதன் விளைவாக 1967-ல் அண்ணா தலைமையில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.


அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திருச்சியில் நடந்த மாநாட்டில் தான் மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட திமுகவின் அடிப்படை கொள்கைகளாக இன்றும் விளங்கும் ஐந்து முக்கிய முழக்கங்கள் வெளியிடப்பட்டன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த முறையும் (2026 தேர்தல்) அதே போன்ற ஒரு வெற்றியைத் திருச்சி பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் திமுகவினர் உள்ளனர்.




அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தார். இன்றும் பல அரசியல் தலைவர்கள் அந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும் திருச்சி மீது மிகுந்த அன்பு இருந்தது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், தன்னை 'ஸ்ரீரங்கத்தின் மகள்' என்றே அழைத்துக் கொண்டார்.

திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி, வைகோ திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவைத் தொடங்கிய போது, அதன் முதல் பொதுக்குழுவை திருச்சியில்தான் (1993 டிசம்பர் 25) நடத்தினார். இன்று அவரது மகன் துரை வைகோ திருச்சி தொகுதி எம்பியாக இருந்து பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.


ஜி.கே.வாசனின் தமாகா மீள் தொடக்கம், டிடிவி தினகரனின் அமமுக பொதுக்கூட்டங்கள், இடதுசாரி கட்சிகளின் மாநில மாநாடுகள் என அனைத்தும் திருச்சியை மையப்படுத்தியே நடந்துள்ளன. சமீபத்தில் விசிக-வின் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநாடுகளும் இங்கு பெரும் எழுச்சியுடன் நடைபெற்றன. விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் தனது அரசியல் பயணத்தின் முக்கிய புள்ளியாக திருச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் எளிதில் வந்து சேர முடிகிறது. மேலும், இங்கு நடத்தப்படும் மாநாடுகள் வெற்றி பெற்றால் அது மாநிலம் முழுவதும் ஒரு நேர்மறையான அரசியல் அலை வீசும் என்ற நம்பிக்கையே அனைத்துக் கட்சிகளையும் திருச்சியை நோக்கி ஈர்க்கிறது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திருச்சியில் நடக்கும் நிகழ்வுகளே தமிழக அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்