சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டு நூதனமாக போராடிய விதம் தமிழ்நாடு மக்களிடையே பரபரப்பையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசியல்வாதிகள் விதம் விதமாக போராடியதை மக்கள் பார்த்துள்ளனர். ஆனால் இப்படி ஒரு வினோதமான போராாட்டத்தை இதுவரை பார்த்தது இல்லை. அந்த வகையில் வித்தியாசாமான தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் அண்ணாமலை. எதற்காக இந்த சவுக்கடி என்பதற்கு விளக்கம் கொடுத்து விட்டார் அண்ணாமலை. ஆனால் இந்த சவுக்கடி குறித்து மக்களிடையே இப்போது ஆர்வம் எழுந்துள்ளது.
இந்த சவுக்கடி பழக்கம் எப்படி வந்தது.. ஏன் இப்படி பண்ணுகிறார்கள்.. யார் கண்டுபிடித்தது இது என்ற கியூரியாசிட்டி வந்துள்ளது. இதுகுறித்து நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர் முனைவர் சி. சுந்தரேசன் இப்படிக் கூறுகிறார்..
நீளமான சாட்டையைக் கையில் வைத்துக் கொண்டு தனக்குத் தானே இரத்தம் வருமாறு அடித்துக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்கு “சாட்டையடி ஆட்டம்” என்று கூறுவர். இதற்கு கசையடி, சாட்ட நடனம் என்ற இரு பெயரும் உண்டு. தமிழகத்து நகரம், கிராமம் என்ற அனைத்துப் பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆண், பெண் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றாலும் ஆண்களே சாட்டை அடித்துக் கொண்டு ஆடுபவர்களாக உள்ளனர். பெண்கள் இசைக்கருவிகளை இசைக்கின்றனர். நிகழ்த்துநர்களே ஆடும் இடத்தினையும், காலத்தினையும் தீர்மானிக்கின்றனர். மக்கள் விரும்பித் தரும் பொருள்களே இவர்களுக்கு வருமானம்.
பல ஊர்களிலும் சாட்டை அடி ஆட்ட நிகழ்ச்சியைக் காணமுடிகிறது. ‘காளியம்மா’, ‘மாரியம்மா’ என்று இடையிடையே உரத்தக்குரலில் ஆவேசமாகக் கத்திக் கொண்டு சவுக்கால் தனக்குத்தானே அடித்துக்கொள்கிறார்கள். அடித்து அடித்து வலக்கையில் தழும்புக் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டுகிறது. இதனைக் காணும் பார்வையாளர்களுக்குத் திடுக்கிடும் நிகழ்ச்சியாக அமைகிறது. இவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் நிலையற்றது. கிராமப்புறங்களில் சாப்பாட்டுக்குக் குறைவு இல்லாமல் உணவு தானியங்கள் கிடைக்கும் என்றும், நகரங்களில் கிடைக்கக்கூடிய தொகை குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் சாட்ட அடி நிகழ்த்துபவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிறு சிறு மூங்கில் குச்சிகளைக் கைக்கு நான்காக இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கோலாட்டம் போல் அடித்து ஆடுவர். சாட்டையால் கைகளில் அடித்துக்கொள்ளுதல், தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கும் வளையத்தினுள் பாய்ந்து வெளியேறுதல், இளம் சிறுவர் சிறுமியர் குட்டிக்கர்ணம் அடித்தல், சிறு இரும்பு வளையத்தில் நுழைதல் போன்றவற்றை நிகழ்த்துகின்றனர். இது போன்ற வித்தைகளைக் காட்டி அரிசி, புளி, மிளகாய், பருப்பு, சமைத்த உணவுப் பண்டங்கள், காசு முதலியவற்றைப் பெறுகின்றனர் என்று கூறுகிறார் பேராசிரியர் சு. சுந்தரேசன்.
சவுக்கு அல்லது சாட்டை என்று அழைக்கப்படுவது ஒரு வகையான கருவி அல்லது ஆயுதம் என்று விக்கிபீடியா கூறுகிறது. ஆதி காலத்தில், மனிதர்கள் அல்லது விலங்குகளுக்கு ஏதேனும் தண்டனை வழங்க, அதனை கட்டுப்படுத்த இதை ஒரு கருவியாக அல்லது ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர்.
அதேபோல தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும் இந்த சாட்டையைப் பயன்படுத்தியுள்ளனர். உடல் ரீதியான தண்டனைக்கு இது பயன்படுத்தப்பட்டுள்ளது. சாட்டையால் அடிப்பதன் மூலம் வலி அல்லது பயத்தை ஏற்படுத்தி, சில செயல்களை செய்ய வைக்கும் ஒரு உந்துதலாக சாட்டை அடி திகழ்கிறது . எடுத்துக்காட்டாக மாட்டு வண்டியில் உள்ள மாடுகளை சாட்டையால் அடித்து அழுத்தம் தருவதால் விரைவாக ஒட்டவோ அல்லது திசை திருப்பவோ பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக சாட்டை கயிறை எடுத்தாலே மாடு மிரண்டு வேகமாக ஓட ஆரம்பிக்குமாம். அதேபோல் குதிரையை ஏற்றத்தின்போதும் சாட்டையடித்து குதிரையை வேகமாக ஓட வைக்கவும் உட்கார வைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
அதனால்தான் சாட்டைகள் விலங்குகளை அச்சுறுத்தி அதன் மூலம் மனிதர்கள் பயனடைவதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாளடைவில் மனிதர்களும் ஏதேனும் தப்பு செய்தால் தண்டனை வழங்கும் விதமாக சாட்டையால் அடித்து அவர்களை கட்டுப்படுத்த சாட்டையடி முறை வழக்கத்திற்கு வந்தது. பிறகு மெல்ல மெல்ல அரச காலத்தில் திருடர்களுக்கு தண்டனை வழங்குவது,பஞ்சாயத்தில் தண்டனை வழங்குவது, கோயில்களில் தண்டனை வழங்குவது என சாட்டைகள் பயன்படுத்தப்பட்டது. பிறகு மனிதர்களே தப்பு செய்வதாக உணர்ந்தால் சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு நேத்திக்கடன் செலுத்துவதாக வழக்கத்தை கொண்டு வந்தனர். இந்த வழக்கம்தான் நாளடைவில் கோயில் திருவிழாக்களில் சாட்டையடி திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த சாட்டையடி கோயில் திருவிழாக்களில் ஒரு அங்கமாகவும் திகழ்கிறது.
இதன் மூலமாக தான் தற்போது உள்ள காலகட்டத்தில் மாரியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா நடைபெறுவதை வழக்கம் கொண்டு வருகின்றனர். அதாவது பக்தர்களுக்கு கோவில் பூசாரி சாட்டையால் அடித்து ஆசி வழங்கும் வினோத நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்ந்து கொண்ட ஏதேனும் செயல் நடந்து விட்ட பிறகு ஏராளமான பக்தர்கள் பூவோடு ஏந்தி வந்து பூசாரியிடம் சாட்டையில் அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். சாட்டையால் அடி வாங்குவதன் மூலம் பேய் பிசாசுகள் அண்டாமல் நோய், தீய சக்திகள் விலகி குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் என, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில் திருவிழாக்களில் சாட்டையடி திருவிழாவும் நடத்தப்படுகின்றன. சாட்டையால் அடி வாங்கினால் நினைத்தது நடைபெறும் என்பதால் பக்தர்கள் சாட்டையால் அடிவாங்குகின்றனர். இது மட்டுமல்லாமல் நரிக்குறவர்கள் பழங்குடியின மக்கள் சாட்டையால் அடித்து வித்தை காட்டி, அனுதாபத்தை சந்தித்து மக்களிடமிருந்து யாசகம் பெறுவதற்காகவும் சாட்டையடியை பயன்படுத்துகின்றனர்.
சரி இந்த சாட்டையை எப்படி செய்கிறார்கள்..?
புளிச்சக்கீரை தண்டுகளை வெட்டி அதனை நன்றாக வெயில் காய விட வேண்டும். பிறகு அந்த காய விட்ட தண்டுகளை தண்ணீரில் ஊறவிட்டால் வலுவான நார்கள் போன்று தோற்றமளிக்கும். இதன் மூலம் தான் கற்காலத்தில் நார் கட்டில்கள் பின்னப்பட்டன.
சாட்டை செய்ய புளிச்சக்கீரை நார்கள், அத்திப்பட்டை நார்கள், கற்றாழை நார்கள் இந்த நார்கள் அனைத்தையும் சிக்கல் இல்லாமல் எடுத்துக்கொண்டு கால் கட்ட விரல்கள் நடுவே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உருட்டி திரித்து சாட்டை பின்ன பின்ன ஒரு கட்டையில் சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு சாட்டை பின்னி முடித்த பிறகு இறுதியில் அதனை முடித்துப் போட்டு விட்டால் சாட்டை தயார்.
அண்ணாமலை தன்னைத் தானே அடித்துக் கொண் சாட்டை இதே முறையில் செய்யப்பட்டதா அல்லது வேற பொருள் பயன்படுத்தப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. எப்படியோ, தமிழ்நாட்டு மக்களை சாட்டை குறித்து தேடவும், பேசவும் வைத்து விட்டார் அண்ணாமலை!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்.. திரையுலகினர் அஞ்சலி
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!
டாப்ஸ்லிப் மலைப்பகுதியில்.. மலையேற்றத்தின் போது கேரளாவை சேர்ந்த மருத்துவர் உயிரிழப்பு..!
வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி.. டிரம்ப் அதிரடி.. இந்தியப் படங்களுக்கு பாதிப்பு வருமா?
கவனக்குறைவான டிரைவிங்.. மதுரை ஆதீனத்தின் டிரைவர் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தமிழ்நாட்டில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு ..இந்திய வானிலை ஆய்வு மையம்!