சென்னை : விஜய்யிடம் ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது குறைந்து விட்டதாகவும், அரசியல் களத்தில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாக தேர்தல் வேலைகளில் விஜய் தீவிரம் காட்ட வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்ல தவெக கட்சியினரே தற்போது கூற துவங்கி விட்டனர்.
மாநாட்டின் போது மட்டும் விஜய் ஆவேசமாக பஞ்ச் டயலாக் பேசுகிறாரே தவிர, சமூக அக்கறையுடன் மக்களுக்காக குரல் கொடுக்க தவறுவதாக அவர் மீது ஆரம்ப முதலே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதே போல் தற்போது தவெக.,வில் ஆதவ் அர்ஜூனா, அருண் ஆரோக்கியசாமி ஆகியோரின் வருகைக்கு பிறகு விஜய்யிடம் வேகம் குறைந்து விட்டதாகவே அரசியல் களத்தில் கருத்து நிலவுகிறது.
திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக தான் வந்திருப்பதாக கூறிக் கொள்கிறார் விஜய். தற்போது வரை விஜய் கூட்டணியில் யாரும் சேராததால், 2026 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவும் என அனைவருமே நினைக்க துவங்கி விட்டனர். திமுக, அதிமுக அதிருப்தியாளர்கள், இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கும். சட்டசைபை தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என பல அரசியல் கட்சி தலைவர்களே கூற துவங்கி விட்டனர். ஆனால் அதற்கான வேகத்துடன், மற்ற தரப்பு மக்களையும் கவரும் வேலையிலும், அரசியல் களத்தில் திமுக, அதிமுக.,வை மிரள வைக்கும் வேலைகளை விஜய் துவக்கி உள்ளாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மதுரையில் நடந்த 2வது மாநில மாநாட்டில் திரண்ட கூட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே பலரும் மிரண்டுதான் போனார்கள். விக்கிரவாண்டியை மிஞ்சிய கூட்டம் இது. மதுரையில் பல காலமாக இப்படி ஒரு கூட்டத்தை எந்தக் கட்சியுமே கூட்டியதில்லை. ஆனால் இதை சரியாக பயன்படுத்தத் தவறி வருகிறார் விஜய் என்ற கருத்து எழுந்துள்ளது. மதுரை மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீதம் வரி விவகாரத்திற்கு மட்டுமே விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிஜிபி நியமன சர்ச்சை, முதல்வரின் வெளிநாட்டு பயணம், பீகார் ஓட்டு திருட்டு விவகாரம் என நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவர் கருத்தோ, கண்டனமோ, விமர்சனமோ தெரிவிக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் மதுரை மாநாட்டில் அவரது பாதுகாப்பிற்கு வந்த பவுன்சர்கள் மீது எஃப்ஐஆர்., போடப்பட்டது, அதிலும் ஆள் மாறாட்டம் நடத்த விவகாரத்திற்காவது கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும். அதையும் கூட தவெக செய்யவில்லை. விஜய்யும் பேசாமலேயே இருக்கிறார்.
சமூக பிரச்சனைகள் ஒரு புறம் இருக்கட்டும் என்றாலும், விஜய்யை வைத்து அரசியல் களத்தில் மிகப் பெரிய சதுரங்கமே நடந்து கொண்டிருக்கிறது. அதையாவது அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையில் வலிமையான மூன்றாவது அணி அமையும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் பேசி உள்ளார். விஜய்யுடன் கூட்டணியா என்று கேட்டால், எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ். இந்த சமயத்தில், இவர்களுடன் கூட்டணியே அமையாவிட்டாலும் தங்களின் எதிரி என விஜய் சொல்லிக் கொள்ளும் திமுக, அதிமுக, பாஜக.,வை குழப்பி விடவும், கதிகலங்க வைப்பதற்காகவாவது டிடிவி தினகரன், ஓபிஎஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோரை அழைத்து பேசி இருக்க வேண்டும்.
விஜய் சினிமாவில் உச்சம் தொட்டவர் என்றாலும் அரசியலுக்கு புதியவர் தான். இப்போது கட்சி துவங்கி, அரசியல் களத்திற்கு வந்த பிறகு மற்ற கட்சிகளுக்கு போட்டியாக கண்டிப்பாக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். நாட்டில் நடக்கும் விஷயங்களையும், தன்னுடைய எதிரி கட்சிகளின் செயல்பாடுகளையும் கவனித்தே தீர வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. மக்களின் கவனத்தையும், மீடியாக்களின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பி, மக்களின் மனதில் நல்ல தலைவன் என்ற பெயரில் இடம்பிடிக்கும் வேலையை தான் விஜய் தற்போது செய்ய வேண்டும். அத்தோடு நில்லாமல் தனது ரசிகர்களையும் அவர் அரசியல்வாதிகளாக மாற்ற வேண்டும். இன்னும் ரசிகர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்களாக மாற வேண்டும், சுய கட்டுப்பாட்டை பொது மாநாடுகளில் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது விஜய்க்குத்தான் பாதகமாக மாறி விடும்.
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
பொய்யுரைப்போருக்கான தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள்: அன்புமணி ராமதாஸ்
கூட்டணி தொடர்பாகத் தவெக யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை: ஆனந்த் அறிவிப்பு!
தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன்: செங்கோட்டையன் அறிவிப்பு
இந்தியா மீதான வரியை ரத்து செய்யுங்கள்...டிரம்ப்க்கு அதிகரிக்கும் நெருக்கடி
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?
{{comments.comment}}