"இந்தாங்க டீச்சர் பூ".. சிறுகதை

Jan 08, 2026,09:56 AM IST
- க.முருகேஸ்வரி

மகளிர் தினக் காலை அது. வகுப்பறைக்குள் நுழைந்தபோதே என் மனதிற்குள் ஒரு மெல்லிய பிடிவாதம் இருந்தது. காரணம், தர்ஷன். அவன் செய்த ஏதோ ஒரு குறும்பு என் கோபத்தைத் தூண்டியிருந்தது. ஆனால் அது உண்மையான கோபம் அல்ல; அவனைத் நல்வழிப்படுத்த நான் அணிந்துகொண்ட 'பொய்க்கோப' முகமூடி.

அன்று முழுவதும் அவனைப் பார்க்காமல், அவனிடம் பேசாமல் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் தர்ஷன் விடுவதாக இல்லை. என் மேஜையைச் சுற்றிச் சுற்றி வந்தவன், இடைவிடாமல் ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

"மிஸ்... உங்களுக்குத்தான் பூ கொண்டு வந்திருக்கேன். வச்சுக்கோங்க மிஸ்... ப்ளீஸ் வச்சுக்கோங்க!"



அவன் சொல்லும்போதெல்லாம் என் கண்கள் அங்கும் இங்கும் தேடின. அவன் கையில் பூ இல்லை, பையிலும் இல்லை. 'எங்கே ஒளித்து வைத்திருக்கிறான்?' என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், வெளியே கோபமாக இருப்பது போலவே காட்டிக்கொண்டேன்.

மணி பதினொன்றைத் தொட்டது. மீண்டும் அதே குரல், "மிஸ்... பூவ வச்சுக்கோங்க மிஸ்!"

இறுதியில் என் மௌனத்தைக் கலைத்தேன். "எங்கடா இருக்கு பூ? எப்போ பாரு பூ பூ-ன்னு சொல்லிட்டே இருக்க, கண்ணுக்கே தெரியலையே?" என்று சற்று அதட்டலாகக் கேட்டேன்.

உடனே அவன் தன் மேஜை மீது இருந்த ஒரு பிளாஸ்டிக் டம்ளரைக் காண்பித்தான். அதற்குள் இதழ் விரித்துச் சிரித்துக் கொண்டிருந்தன சிவப்பு நிறச் செம்பருத்திப் பூக்கள். தண்ணீருக்குள் மிதந்தபடி ஒரு டம்ளர் நிறைய அன்பை எனக்காகச் சேமித்து வைத்திருந்தான்.

"இதோ மிஸ்... இது உங்களுக்குத்தான்!" - அவன் கண்களில் இருந்த அந்தத் தெளிவும் எதிர்பார்ப்பும் என் பொய்க்கோபத்தை அப்படியே கரைத்துவிட்டது.

'அடப்பாவி... இதை எப்படிடா நான் தலையில் வைப்பது?' என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டேன். ஆனால், அவன் கொண்டு வந்த அந்த அன்பின் கனம் எனக்குப் புரிந்தது.

"எனக்காகத்தானே கொண்டு வந்த? சரி, என் கையிலேயே கொடு," என்று நான் கையை நீட்ட, அடுத்த நொடியே அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தில் பிரகாசித்தது. மிகுந்த குஷியுடன் அந்தப் பூக்களை எடுத்து என் கையில் கொடுத்தான்.

அன்று எத்தனையோ வாழ்த்துகள் வந்திருக்கலாம், ஆனால் ஒரு குழந்தையின் கள்ளமில்லாத இந்த அன்புப் பரிசை விடச் சிறந்த ஒன்றை யாரால் கொடுத்துவிட முடியும்?

நிச்சயமாக, குழந்தைகள் இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட தேவதைகள்!

(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்