-அ. தாமஸ்
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் உலகு போற்றும் உன்னத வரிகளும், "அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற திருவள்ளுவரின் வாக்கும், சகிப்புத்தன்மையும் அமைதியும் மனித வாழ்வின் இன்றியமையாத விடயங்கள் என்பதை ஒவ்வொரு நிலையிலும் உணர்த்த மறுக்கவில்லை.
இன்றைய உலகம் அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு விரைவாக வளர்ந்து வருகிறது அதே வேகத்தில் மனித மனங்களில் அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, அமைதி ஆகியவை நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையை தொடரும் பட்சத்தில் இந்த தேசம் மனிதம் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாறிவிடுமோ? என்ற அச்சம் ஒவ்வொரு நாளும் ஆட்கொள்கிறது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கும், நாடு நிம்மதியாக வளர்வதற்கும், உலகம் வளமாகத் திகழ்வதற்கும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும் இன்றியமையாதவை என்பதை தினம் உணர்ந்து சகிப்புத்தன்மை காக்கும் நிலைபெறுதலே நாளைய உலகை நலம் பெற மீட்கும்.
சகிப்புத்தன்மை என்பது பிறரின் கருத்து, நம்பிக்கை, மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளை மதித்து ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த மனப்பண்பு. அது பலவீனத்தின் அடையாளமல்ல; மாறாக, அறிவின் முதிர்ச்சியையும் மனிதநேயத்தின் மேன்மையையும் வெளிப்படுத்தும் உயரிய பண்பு. பிறரை மதிக்கும் மனமுள்ள இடத்தில் வெறுப்பு விலகும்; வெறுப்பு விலகும் இடத்தில் மட்டுமே அமைதி நிலைக்கும் என்பதை தினம் உணர்ந்து மனித நேயம் காப்போம், மானுடம் மீட்போம்.

அமைதி என்பது போரற்ற நிலை மட்டுமல்ல; அன்பும், நீதியும், சமத்துவமும் நிலவும் வாழ்வியல் சூழலே. அமைதி நிலவும் நாட்டில் கல்வி வளர்ச்சி பெறும்; பொருளாதாரம் முன்னேறும்; அறிவியல் செழிக்கும்; கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவை உயர்வடையும். மனித மனம் அமைதியாக இருந்தால் குடும்பம் மகிழும்; குடும்பம் மகிழ்ந்தால் நாடும் மகிழும்; மகிழ்வினில் தினம் வளரும்.
உலகமயமாக்கல், கல்வி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. இதனால் பிறரின் கலாச்சாரத்தை அறியும் மனப்பான்மையும், வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் பண்பும் வளர்ந்து வருகின்றது. பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவை மனிதநேயம், சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றைக் கட்டமைப்பதன் அவசியத்தை உணர்ந்து செயல்படத் துவங்கி விட்டன.
இவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், மனிதநேய விழுமியங்களை வலியுறுத்துவதன் மூலம் சகிப்புத்தன்மையும், எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் மாணவர்கள் மத்தியில் வளர்கிறது என்பதையும் நாம் உணர முடிகிறது. மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த நமக்கு இந்நிகழ்வுகள் விடியலின் வெளிச்சத்தை வெளிப்படுத்தி சகிப்புத்தன்மை வளர்கிறது என்ற உயர் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். எனவே மாணவர்கள் சிறுவயதிலிருந்தே அன்பு, பொறுமை, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், மனிதநேயம் ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளை ஆழமாய் கற்றுத்தெறிதல் அவசியமாகிறது. நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுதல், கருத்து வேறுபாடுகளை அமைதியாகக் கையாளுதல், யாரையும் இகழாமல் மதித்தல், பள்ளியின் ஒழுங்குகளை நெறி பிரளாது பின்பற்றுதல் ஆகியவை அமைதியைக் காத்து வளர்க்கும் அடிப்படைப் கூறுகளாகும் என்பதை தினம் உணர்ந்து மனித நேயம் பேணுவோம், மாணவ சமூகம் காப்போம்.
அமைதி என்பது விற்பனைப் பண்டமோ, மரங்களின் படைப்போ அல்ல நினைத்தவுடன் பெறுவதற்கும், தேவைப்பட்டால் பறிப்பதற்கும். ஒவ்வொரு மனிதனின் நல்ல எண்ணங்களும் உயர் சிந்தனைகளும், செயல்களுமே அமைதியைப் பேணி வளர்க்கும் ஆகச் சிறந்த வழிகள். இந்நிலை தொடர குடும்பங்கள் தோறும் அன்பின் அவசியமும், மரியாதையின் தேவையும் ஒவ்வொரு நிலையிலும் உணர்த்தப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். மாற்றம் என்பது எங்கோ இருந்து உருவாக்கப்படுவதல்ல; மாறாக, நம்மில் இருந்து உருவாவது. நாம் நினைத்தால் தான் மாற்றம் என்பது சாத்தியமாகும்.
நாளை பார்க்கலாம் என்று கடந்து போனதன் விளைவு தான் இந்த அவல நிலைக்கு அடிப்படை. குடும்பத்தில் அன்பும் மரியாதையும் வளர்வதில் பொறுப்பாக இருப்பதோடு பள்ளி, கல்லூரிகளிலும் நல்லொழுக்கக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமூகத்தில் மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வளர்க்க வேண்டும். சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தி பொய்யான தகவல்கள், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் பரப்பப்படுவதைக் கண்டு களைந்து அமைதியை வளர்ப்பதிலும், காப்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும்.
இந்நிலையே அமைதியைக் காக்கும் ஆகச் சிறந்த வழிமுறை என்பதை உணர்ந்து அன்பில் நிலைப்போம்; அமைதியைக் காப்போம்.
மகாகவி பாரதியார் "பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே" என்று மனிதநேயத்தை வலியுறுத்தினார். திருவள்ளுவரும் "அன்பும் அறமும் மனித வாழ்வின் அடித்தளம்" என்பதை எடுத்துரைத்தார். சகிப்புத்தன்மை என்பது அமைதிக்கான விதை; அமைதி என்பது வளர்ச்சிக்கான வேர். நாம் ஒவ்வொருவரும் சகிப்புத்தன்மையை வளர்த்து, அமைதியின் அவசியம் உணர்ந்து பொறுப்புடன் வாழ்ந்தால், மனிதநேயம் மலரும்; நல்லிணக்கம் நிலைக்கும்; உலகம் வளமும், அமைதியும் நிறைந்த அன்பின் இல்லமாக மாறும்.
"சகிப்புத்தன்மை மனிதனை உயர்த்தும்; அமைதி உலகத்தை உயர்த்தும். எனவே, சகிப்புத்தன்மையை வளர்ப்போம்; அமைதியைப் பேணுவோம்; மனிதநேயம் நிறைந்த உலகை உருவாக்குவோம்."
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
{{comments.comment}}