சிந்தனைச் சிதறல்.. மகிழ்ச்சி என்னும் மரத்திற்கு உலகோர் நீர் ஊற்றுவார்களா?

Nov 23, 2026,01:20 PM IST

- அ. தாமஸ்


மகிழ்ச்சி என்னும் மரத்திற்கு உலகோர் நீர் ஊற்றுவார்கள் என்று காத்திருப்பதால்தான், அம்மரம் தழைக்காமலும், கனி கொடுக்காமலும் காய்ந்து போவதோடு, அதன் இலைகளும் பயனற்றுச் சருகுகளாகின்றன.


துன்பம் என்னும் மரத்திற்கு நாம் தண்ணீர் வார்க்க மறந்த நேரங்களில்கூட, ஊரார் தண்ணீர் ஊற்றி உரமிடுகிறார்கள். எனவேதான், அது பல நேரங்களில் பல மடங்குப் பலனை வாரி வழங்குகிறது.


இனிவரும் காலங்களில் மகிழ்ச்சி என்னும் மரத்திற்கு நாமே நீர் வார்ப்போம்; உரமிடுவோம். உடனிருந்து வளர்த்து, கனி கொடுக்கும் நிலைக்கு அதனை உயர்த்தி, நற்சுவைக் கனிகளைத் தினமும் பறித்து நாமும் உண்டு, ஊருக்கும் உண்ணக் கொடுப்போம்.




துன்பம் என்னும் மரத்திற்கோ ஊரார் நீர் வார்த்தாலும், நாம் நீர் வார்க்காமலும் உரமிடாமலும் இருப்போம். அந்த மரம் ஒன்று இருப்பதையே மறந்திட முனைவோம். மகிழ்ச்சியை மறந்துவிட்டு, துன்பத்தை நமக்குத் துணையாகக் கொள்வதால்தான் வாழ்க்கை வெறுமையாகி, விரக்தி நிறைந்து, அனைத்தையும் துறந்திடும் நிலைக்குச் செல்கிறது.


கவலைகளைக் களைந்த மனதுடன், மகிழ்ச்சியைத் தினமும் புதிதாகப் படைத்திடுவோம். வாழ்வையே நாம் விரும்பும் வகையில் அமைத்து, வளம் கொழிக்கும் நல்வாழ்வாக மாற்றிடுவோம். நாம் வாழும் வாழ்க்கையே ஓர் உயர்ந்த வரம் என்பதை உணர்ந்து வாழ்ந்திடுவோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்