வரமும்.. வரம்பும்!

Mar 26, 2026,05:14 PM IST

- ஆனந்தி சத்யராஜ்


தாகம் கொண்ட பாலை மணல் மீது, தாராளமாய் விழுந்த மேகத் துளிகள்!...  ஒவ்வொரு துளியும் வெறும் தண்ணீர் அல்ல; அது மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் விதைகளுக்கு வழங்கப்படும் 'உயிர் பிச்சை'. இயற்கையின் இந்த பெரும் பரிசை விவரிக்க வேண்டும் என்றால்...


" நீண்ட  இடைவேளைக்கு பிறகு சந்திக்கு காதலர்கள் எவ்வாறு ஒரு பார்வை பரிமாற்றத்தால் தங்கள் முழு அன்பையும் பகிர்ந்து கொண்டு, அந்த நொடிகளின் இன்பத்தை  அடுத்த சந்திப்பு வரை நினைத்து மகிழ்வார்களோ!, அதேப் போல் இந்த ஓரிரண்டு நாட்கள் பெய்யும் மழை தரும் சுகமான உணர்வு, அடுத்த வருடம் வரை இன்பமளித்து, மீண்டும் எப்போது பொழியும் என்று ஏங்கி காத்திருக்க வைக்கும். "


தகிக்கும் நிலம் குளிர்ந்து, ஈர மணலாக மாறும் இந்த வேளையில்,  இறுகிய இதயம் கூட தன் தன்மையை இழந்து, ஒரு மலரைப் போல மென்மையாக மாறத் துடிப்பது ஏனோ தெரியவில்லை !!  உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் சிறு சிறு கோபங்கள் கூட இந்த மழையில் காணாமல் கரைந்துதான் போகின்றன பாவம்!..




வறட்சியால் பொலிவிழந்து சிக்குண்ட ஒரு நங்கையின் கூந்தலை போல செல்லும் வழியெல்லாம் காட்சியளித்த  மலையும், நிலமும், இப்போது மேகத்துளிகளின் குளியலுக்கு பின், நன்கு எண்ணெய் வைத்து சிக்கெடுத்து, மெருகேற்றி, வாரி முடிக்கப்பட்ட பளபளப்பான கூந்தலை போல  மின்னுகின்றன. அப்படி வாரி விரிக்கப்பட்ட கூந்தலில், சரம் சரமாக மல்லிகைப் பூக்களை தொங்க விட்டால் எப்படி இருக்குமோ அப்படி கொள்ளை அழகோடு காட்சியளிக்கிறது  மலை உச்சியிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள்!

 

சில மணிநேர மழையிலேயே பசுமை போர்த்தத் துடிக்கும் இந்தப் பாலை நிலத்தின் வேகமும், அழகும் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இது இயற்கையின் அதிசயங்களில் ஒன்றுதான்.


இருப்பினும், ஒரு நிபந்தனை உண்டு...


இந்த அழகு நீடிக்க வேண்டுமானால், அந்த பாலைவன மழை தன் எல்லையை அறிந்திருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால், இந்தப் பேரழகே பெரும் அழிவாக மாறிவிடும். வரம் சாபமாவதும், வசந்தம் வெள்ளமாவதும் இயற்கையின் நுட்பமான விதியில் தான் அடங்கியுள்ளது.


வானுக்கும் பூமிக்குமான அன்பினால் மேகம் கருத்து சில்லென்ற துளிகளாய் மண்ணை தொடும் பேரின்பமே...இதோ உன் ரசிகர்களின் வேண்டுகோள்: 




தாகம் தீர்க்கும் மழையே! 

தாராளமாய் இரு, ஆனால் தடம் புரண்டு விடாதே!

பெய்யும் மழையே வரம்போடு இரு!அதுவே உன் பேரழகின் மேன்மை!

மீறினால் இங்கு வாழும் உயிர்களுக்கு தாழ்மை!

அழகு அழிவாய் மாறாமல், அருவி வெள்ளமாய் சீறாமல், தேவை சேதமாக மாறாமல் தன் எல்லையோடு நின்றால் அதுதான் மண்ணுயிர்களுக்கு நீ கொடுக்கும் பெரும் பரிசு! 


இதுவே பாலைவன (ஒரு நாள்) மழையின் வரமும் வரம்பும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு

news

சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி

news

அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

news

மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

news

கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!

news

RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா

news

வரமும்.. வரம்பும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்