அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

Dec 25, 2025,01:56 PM IST

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசாங்கத்தில், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உள்துறை விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்த குதா பக்ச் சௌத்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


மாணவர் எழுச்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட உஸ்மான் ஹாடியின் படுகொலையைத் தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்புகளே இந்த விலகலுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.


கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் கிளர்ச்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி, கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் மர்ம நபர்களால் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.




ஹாடியின் மரணத்திற்கு நீதிகேட்டு 'இன்குலாப் மஞ்சோ' என்ற அமைப்பு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. குற்றவாளிகளைக் கண்டறியத் தவறியதற்காக உள்துறை ஆலோசகர் மற்றும் சிறப்பு உதவியாளர் குதா பக்ச் சௌத்ரி ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று 24 மணி நேர காலக்கெடு விதிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை அன்று குதா பக்ச் சௌத்ரி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதனை வங்கதேச அதிபர் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அரசாணை தெரிவிக்கின்றது.


முன்னாள் காவல்துறை தலைவரான இவர், கடந்த நவம்பர் 10-ம் தேதிதான் இந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாடியின் படுகொலைக்கு நீதி கோரி டாக்காவின் ஷாபாக் பகுதியில் இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து வருவதால், அந்நாட்டு அரசியல் களம் மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்