சென்னை: எல்லோருக்குள்ளும் ஒரு விதமான அழுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எப்படி கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டோமோ அது போலவே இந்த
மன அழுத்தம், பதட்டத்துடனும் நாம் வாழ வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தையும், அதை தான் எப்படி ரிலீஸ் செய்தேன் என்பதையும் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு காவலர் தன்னைப் பார்த்து Are you Ok? என்று கேட்டதுமே தான் அழுது விட்டதாகவும், அந்த நொடியே தனது மனசு லேசாகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது பெயர் ஜனனி பொற்கொடி.
சென்னையைச் சேர்ந்த ஜனனி பொற்கொடி மிஸ்டிக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது லிங்க்ட்இன் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
கடந்த வாரம், நான் ஒரு போக்குவரத்து காவலர் முன் அழுதுவிட்டேன். வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நான், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்திலும், மிகுந்த பாரத்திலும் இருந்தேன். வேலை, அழுத்தம், எதிர்பார்ப்புகள் என ஒன்றன் பின் ஒன்றாக குவிந்துவிட்டன.
அப்போது வழியில், ஒரு போக்குவரத்து காவலர் என்னை நிறுத்தினார், என்ன காரணத்திற்காக நிறுத்தினார் என்று கூட எனக்கு நினைவில்லை. ஆனால் இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது:
அவர் என்னைப் பார்த்து, "என்ன ஆச்சு? நல்லா இருக்கீங்கதானே?" என்று கேட்டார்.
அவர் உண்மையான அக்கறையுடன் கேட்ட அந்த நொடிதான், பல வாரங்களாக நான் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்வுகளையும் கண்ணீராக வெளிக்கொண்டு வந்தது. அழுது விட்டேன்.
விசித்திரமாக, அந்த அழுகை எனக்கு மனதை இலகுவாக்கியது. அதன் பிறகு நான் நிம்மதியாக உணர்ந்தேன். என் கட்டுப்பாட்டில் இருந்தது போல் உணர்ந்தேன்.
நாம் எவ்வளவு வலிமையாக இருக்க முயன்றாலும், நாம் அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள்தான். உடைந்து போவது பரவாயில்லை. உணர்வுகளை வெளிப்படுத்துவது பரவாயில்லை.
நீங்கள் யாராவது சிரமப்படுவதைப் பார்த்தால், ஒரு அன்பான வார்த்தை உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நம்மோடும், மற்றவர்களுடனும் மென்மையாக இருப்போம்.
இது 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் வரும் விமான நிலையக் காட்சியை எனக்கு நினைவூட்டியது!
{{comments.comment}}