விதையில்லாமல் விளையும் பொருள் தெரியுமா?.. அட.. இது இல்லாம சாப்பிடவே முடியாதே!

Apr 04, 2026,05:07 PM IST

- சொ.மங்களேஸ்வரி


நீர்ப்படிகம், கடல் தங்கம், பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், வர்ண புஷ்பம், சமுத்திரக்கனி, ஜலமாணிக்கம் என்றெல்லாம் போற்றப்படும் உப்புதான் விதையில்லாமல் விளையும்  மூன்றெழுத்து பொருளாகும்.


"உப்பில்லா பண்டம் குப்பையிலே" எனும் பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நம் நாவிற்கு இதன் அருமை நன்றாகவே தெரியும். அறுசுவை உணவென நாம் சமைத்த உணவுப் பொருள்களின் ருசியேற்றமே இந்த உப்பில் தான் அமைந்துள்ளது. அத்தகைய மூன்றெழுத்துப் பொருள் விளையும் இடம் தான் உப்பளம் .


சங்க இலக்கியத்தில் உப்பு விளையும் இடத்தை 'அளம்' என்றும், உப்பு விற்பவர்களை 'உமணர்கள்' என்றும் அழைத்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே இந்த உப்பு விளையும் இடம் ஆகிய உப்பளத்தையும், உப்பைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.


சைவ சமயத்தில் "ஸ்பரிச தீட்சை" என்று ஒன்று நடைபெறுமாம். அதாவது குருவானவர், சிஷ்யரின் தலையைத் தொட்டு, மந்திர முறைகளைச் சொல்லிக் கொடுப்பாராம். அப்போது குரு, சிஷ்யர் ஆகிய இருவரின் உப்புத்தன்மை விகிதமும் சரியான அளவில் ஒன்றாகி வரும்போது, அந்த சிஷ்யர் மிகச் சிறந்த மாணவராக விளங்குவார் என்பது ஐதீகம்.  உடலில் சேரும் உப்பே நமது அனைத்து குண நலன்களையும் தீர்மானிக்கிறது என்பது சீனர்களின் நம்பிக்கை . இந்து மதத்திலும் கடல் நீராடுவது சகலதோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளதல்லவா?  உப்பு கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுவதால், உப்பை சிந்தக்கூடாது, காலில் மிதிக்க கூடாது என நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர்.




அதேபோல் உப்பைக் கடனாகக் கொடுக்கக் கூடாது எனவும் சொல்வர் . இன்றும் திருஷ்டி கழிக்க உப்பைக் கையில் எடுத்து தலையைச் சுற்றிப் போடும் பழக்கம் பெரும்பாலான மக்களிடையே இருக்கின்றது . 


உப்பு வாங்குவது போல் கனவில் வந்தால் அது நல்ல சகுனமாகக் கருதப்படுகின்றது. அது பணவரவு, செல்வம் மற்றும் வீட்டில் மகிழ்ச்சி பெருகப் போவதைக் குறிக்கும் அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது. உப்பை மண்பானை அல்லது பீங்கான் ஜாடிகளில் போட்டு வைப்பது மிகச் சிறந்தது. இப்படிப்பட்ட உப்பை எவ்வாறு தயாரிக்கின்றார்கள் என்று பார்ப்போமா?


உப்பளம் என்பது கடல் நீரை ஆழமற்ற பாத்திகளில் தேக்கி, சூரிய வெப்பத்தால் ஆவியாக்கி, நீர் ஆவியான பிறகு தேங்கும் சோடியம் குளோரைடு எனும் கனிம உப்பை எடுக்கும் இடமாகும். இந்த  உப்பளங்கள், உப்பு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாம் இடம் வகிக்கும் தமிழகத்தில், தூத்துக்குடி, வேம்பார், முள்ளக்காடு, மரக்காணம், கோவளம் போன்ற கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை வெயில் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடக்கின்றது. இந்த உப்பு உற்பத்தியானது பருவமழைக்குப்பின் பாத்திகளில் தண்ணீரும் சேறுமாக சேர்ந்திருக்கும் சேற்றை அகற்றி, 'தொட்டம்' என்ற அமைப்புகளில் கடல் நீர் தேக்கப்படுகின்றது. துளைக் குழாய் மூலமாகவும் பாத்திகளில் நீர் தேக்கப்படும். 


கடல் நீரில் மூன்று டிகிரி வரை உப்பு இருக்கும், ஆனால் இந்த துளை குழாய் மூலம் பெறப்படும் நீரில் ஏழு சதவீதம் உப்பு இருக்கும். ஆகவே பெரும்பாலும் இந்த நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகின்றது. தொட்டத்திற்கும், பாத்திக்கும் இடையில் அமைந்த வாய்க்கால் பகுதி 'கிடங்கல்' எனப்படும். இந்த பாத்திகளில் கிடக்கும் சேற்றை அகற்றி, பின் கடற்கரை மணல் கலந்து நன்றாக காலால் மிதித்து தரை போல் சரிசெய்வர். ஒரு பாத்திக்கு 9 நாட்களுக்கு ஆறு பேர் மிதிப்பார்கள். பிறகு வரப்புகளை மொழுகி கிடங்கல் வழியாகத் தண்ணீர் பாத்திகளுக்குக் கொண்டு வரப்படும். அல்லது நிலத்தடி நீர் மூலம் நிரப்பப்படும். 




நிரப்பப்பட்ட தண்ணீர் சூரிய வெப்பத்தில் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாட்கள் என  நாள் கணக்குகளில்  ஆவியாக்கப்படும். நீர் ஆவியாகும் போது உப்பு படிகங்கள் பாலாடை போல் மிதக்கும். அவற்றை வார்ப்பலகை கொண்டு வரப்பு ஓரத்தில் சேர்த்து வைத்து, தண்ணீர் வற்றியதும் மொத்தமாகச் சேகரித்து, தரையில் கொட்டி அம்பாரமாக வைப்பார்கள்.


மழை பெய்தால் தண்ணீரில் உள்ள உப்பு அளவு குறைந்து 15 நாட்களுக்கு அதில் வேலை செய்ய இயலாது. ஆகவே உப்பளம் வைத்திருப்பவர்கள் மழை வருவதை விரும்ப மாட்டார்கள். இந்த உப்பளங்களில் வேலை செய்வோர் சூடு தாங்க முடியாமல் உடல் உபாதைகள், கால் வெடிப்புகள், உதடு வெடிப்புகள் போன்றவற்றாலும் பாதிக்கப்படுவர். வெள்ளை நிற உப்பின் மேல் சூரிய ஒளி படும் பொழுது மிகவும் பிரகாசமாகத் தெரிவதால் இவர்களுக்கு விரைவில் கண்பார்வை மங்கி விடுவதாகவும் கூறுகின்றனர். இத்தகைய கடினச் சூழலின் மத்தியில் நமக்காக உப்பை விளைவித்துத் தரும் மக்களை மறவோம். 


"உப்பிட்டவரை உள்ளளவும் நினை"!


(சொ.மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.  14 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பணிபுரிந்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுபவர். இதுவரை தமிழில் " எறி தகர்த்தெறி! எனும் தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றும், " மனமகிழ் இம்சை" எனும் தலைப்பில் நாவல் ஒன்றும் எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் மூன்று கவிதை புத்தகங்கள் வெளியிட்டுள்ள இவர் வரும் மே மாதத்தில் மேலும் இரு புத்தகங்கள் வெளியிட தயார் நிலையில் வைத்துள்ளார். இவரைத் தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனப்படும் நல் ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்துள்ளது‌.  இந்து தமிழ் திசை நாளிதழ்  "அன்பாசிரியர்" விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்