Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!

Apr 14, 2026,04:00 PM IST

- டாக்டர் கோ. லதா


துன்பத்தில் கலங்கேல் 


துன்பம் துரத்தும் பொழுதினில் 

துணிவே துணையெனக் கொள்வாய்!


அன்பு அரவணைக்கும் வேளையில் 

அச்சம் அகற்றி நில்வாய்!


கவலை கண்ணை மறைக்கையில்

கல்வி கண்ணெனக் கருதுவாய்!


நிலையற்ற நிழல் வாழ்வில் 

நிமிர்ந்து நிச்சயம் நடப்பாய்!


வெற்றி வெகுதூரம் இல்லையென

வென்று வெளியே வருவாய்!


பயமே பகைவனாய் மாறுகையில்

பண்பே பலமாய்க் கொள்வாய்!


இன்னல் இடிக்கும் நேரத்திலும்

இன்பம் இதயத்தில் காப்பாய்!


மனமே மதிலாய் நிற்கையில் 

மதியால் மதகு திறப்பாய்!


சோதனை சோர்ந்து போகையில் 

சோலையாய் சோதி காண்பாய்!


வேதனை வேரறுக்கும் காலத்தில்

வேகமாய் வேலை செய்வாய்!


காலம் காயம் செய்கையில்

காற்றாய் காடு கடப்பாய்!


ஞாலம் ஞானம் போற்றவே 

ஞாயிறாய் ஞான்று எழுவாய்!


தயக்கம் தடையாய் மாறுகையில்

தன்னம் தன்னம்பிக்கை கொள்வாய்!


முயற்சி முன்னேற்றப் பாதையென 

முழுதும் முனைந்து நிற்பாய்!


விதியோ விளையாடிப் பார்க்கையில்

விவேகம் விருதாய்க் கொள்வாய்!


"வாழ்வில் வாசல் திறக்கையில் 

வானமே வாழ்த்தக் காண்பாய்" !!



அறிவின் சிகரம் அண்ணல் அம்பேத்கர்


அறிவின் சிகரம் அண்ணல் அம்பேத்கர் 

அகிலம் போற்றும் சட்டத்தின் சுடர்


சாதி என்னும் சங்கிலியை அறுத்தவர்

சாமானியர் வாழ்வில் ஒளி ஏற்றியவர் 


ஈடற்ற கல்வி கற்ற மாமேதை

ஈகை குணங்கொண்ட புரட்சித் தந்தை 


உரிமைப் போரில் ஓங்கிய வாள் 

உலகம் போற்றும் உன்னதக் கோள்


எழுத்து வடிவில் ஏற்றம் தந்தார். 

எளியோர்  வாழ்வில் மாற்றம் தந்தார்


சட்டத்தை இயற்றிய சரித்திர நாயகர்

சமத்துவப் பாதையின் சத்திய இயக்குநர்


தாழ்ந்தவர் முன்னேற தவம் இருந்தவர்

தயக்கமின்றி உரிமைக் களம் கண்டவர்


நீதிதேவன் தந்த நெறிநூல் இது 

நீடித்த புகழுக்கு அடிப்படை இது


பகுத்தறிவு பகலவன் வழியில் நின்றார் 

பதவி மோகமின்றித் தொண்டு செய்தார் 


மானுடம் காக்க மார்தட்டி நின்றார் 

மாவீரன் எனப் பெயரெடுத்து நின்றார்


வர்க்க பேதத்தை வேரறுக்கச் சொன்னார்

வல்லரசு இந்தியாவின் வழிமுறை சொன்னார்


வாழ்க அம்பேத்கர் நாமமே எங்கும் !!

வாழ்க அவர் தந்த சட்டமே என்றும் !!


--


தூது சொல் ஆய்ந்திடு...!


கார்மேகம் கவிழ்ந்திடவே காதலவன் நினைவினிலே 

தார்வேய்ந்த குழலாலைத் தவிக்கவிட்டே சென்றாரோ?

ஏர்வாழும்  விழியாளே! ஏங்கியே நீயும் நிற்க

சீர்வாழும் பெண் புறாவே! தூதுசெல ஆய்ந்திடுவாய்!


நன்னயமே கொண்டிலங்கும் நற்புலவர் சொல்லாலே

மின்னலிடை மங்கைவர வருத்தத்தைச் சொல்லிடுவாய்!

தன்னந் தனியாகத் தவிப்பதையும் விளக்கிடுவாய்!

என்னவன்பால் சென்றேநீ  இனியமொழி ஆய்ந்திடுவாய்!


பொன்னார மார்புடையான் புகழுடையான் அவனிடம் 

என்னார உயிர்வாழ வழிவகை தான் கேட்டிடுவாய்!

சொன்னமொழி தவறாமல் துணிவாகச் சொல்லிடுவாய்!

மின்னும் மணிமாடத்து வேந்தன்பால் ஆய்ந்திடுவாய்!


காலம் கனிந்திடவே காதலர்நீர் சேர்ந்திடவே

ஞாலம் புகழுமொரு நன்மொழியை ஓதிடுவாய்!

கோலமுடன் வாழவே கொள்கையினைச் சொல்லிடுவாய்! 

மேலவனே வந்திடவே மேன்மையுடன் ஆய்ந்திடுவாய்!!


--


சனநாயகக் கடமையாற்று.... 


கதிரவன் எழுகையில் கடமையை நினைப்போம்

விதியினை மாற்றவே விரைந்து எழுவோம்

மதியினைச் செலுத்தியே மாற்றத்தைக் காண்போம்

சதியினை வென்றிடச் சக்கரம் சுழற்றுவோம் 


உரிமைப் போரினை உறுதியாய்ப் பெறுவோம்

பெருமை கொள்கையில் பிழை தவிர்த்து நிற்போம்.

வாக்கினை செலுத்துதல் வலிமையின் அடையாளம்

ஆக்கினைப் போக்கிட அரசாள்வோம் நாமே


சாதி மதமெனும் சுவர்களைத் தகர்ப்போம்

நீதி ஒன்றையே நெஞ்சினில் வளர்ப்போம்,

காசுக்கு வாக்கினை விற்றிட மாட்டோம் 

மாசுறு அரசியலை மாற்றியே தீர்ப்போம்.


--


தரணி போற்றும் சனநாயக மெய்யது


தகுதியுள்ளோரை தேடியேச் சேர்ப்போம்

மிகுதியாய் நன்மைகள் நாட்டிடப் பார்ப்போம்

விரலில் வைக்கும் கருநீல மையது

தரணி போற்றும் சனநாயக மெய்யது


இளைய தலைமுறை எழுச்சி கொள்ளட்டும்

பழைய குறைகள் ஒழிந்து போகட்டும்

விழிப்புணர்வு கொண்டு விரைந்து செல்வோம்

வழிப்பாதை சீராக வாக்கினை இடுவோம்


கடமை உணர்ந்து களத்தில் நிற்போம்

மடமை அகற்றி மனிதம் காப்போம்

தேசம் உயரத் திருநாள் இதுவே

பாசம் பொழியும் பொன்னாள் இதுவே....


--


தெளிவில்லாச் செயல் அற. 


தெளிவிலாச் செயலது திசைதெரியாப் பயணமாம் 

வழியிலா வனத்திடை வழிதவறி நிற்றலாம் 

விழியிலா லொருவன்முன் விளக்கேந்திச் செல்வதாம் 

பழியிலா வாழ்வினைப் பாழ்படுத்தி விடுமே!


ஆழமறி யாதுநீ யாற்றினில் இறங்கினால் 

சூழலினில் சிக்கியே துன்பமே மிஞ்சுமால் 

சூழல் உணராது செய்திடும் வினையெலாம்

தாழ்வினைத் தந்துமுன் தவிப்பினை தருமே!


எண்ணித் துணிகவென் றேற்றமே கொண்ட பின்

திண்ணிய அறிவினால் தெளிவினைப் பெற்றிடு 

மண்ணில் வினையினை மாண்புற முடித்திடக் 

கண்ணியத் தோடுநீ காலடி வைத்திடு!


--


தேக்கென உடல் கொள். 


தேக்கென திரண்டதோள் திண்மையே கொண்டதாம் 

வீக்கென விழ்ந்திடா வீறுகொண்ட மேனியாம்!

யாக்கெனப் போற்றிடும் யாக்கையை வளர்த்திட

வாக்கெனத் தூயதோர் வாழ்வுண்டு கண்டீரே!


மலையென நிமிர்ந்திடா வன்மைமிக்க உடலினால்

அலையெனத் துள்ளியே ஆற்றிடும் பணிகளே!

கலையெனக் கற்றதை கைகொண்டு செய்திட

நிலையெனப் பெற்றதோர் நித்திலத் தேகமே!


உண்ணுமே உணவினை உயிரினை வளர்த்திட

மண்ணுமே வியந்திட மதியினை ஏற்றிட!

கண்ணுமே ஒளியினை கவின்பெறக் காட்டிட

பண்ணுமே உடலினைப் பார்மிசை உய்த்திட

 

துயிலினைச் சிரதாய்த் துய்த்திடத் தகுமென

வெயிலினை ஏற்றேதான் மெய்யினைத் தேக்கிட

பயிலுமே உடற்பயிற்சிப் பாரினில் நிதமுமே

எயிலெனக் காக்குமே எழிலுடல் நமக்கே!


--


பூவின் புன்னகை...


வண்ண இதழ் விரித்து வையகம் வாழ்த்தும்

எண்ணம் இனித்திடவே எங்கும் சிரிக்கும்

மண்ணில் மலர்ந்திட்ட மாண்புமிகு ஓவியம்

கண்ணைக் கவர்ந்திடும் கந்தர்வக் காவியம்!


காற்றின் அசைவினிலே காதலாய் ஆடும்

ஊற்றெழும் தேனை உள்ளத்தில் சூடும்

தேனீக்கள் மொய்க்கவே தெவிட்டாமல் இனிக்கும் 

மேனி சிலிர்க்கவே மென்மையாய் ஜொலிக்கும்!


வாடிடும் போதினிலும் வையகத்தை ஊக்கும்

சூடிடும் போதினிலும் சுகந்தங்கள் ஆக்கும்

நாடிடும் யாவருக்கும் நம்பிக்கைப் பூக்கும்

பாடிடும் நாவிற்கு பைந்தமிழாய்த் தீர்க்கும்!



வாகை தமிழ்ச் சங்கத்தின் பாராட்டு


DR. G. லதா, தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர் அவர்களுக்கு வாகை தமிழ் சங்கத்தில் இருந்து மாண்புமிகு மகளிர் விருது மற்றும் அறநெறிச் செம்மல் விருது என இரு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


கல்வித்துறையில் பணியாற்றும் இவருடைய  சமூக சேவை, தமிழ்ப் பணி, கல்விப் பணி ஆகியவற்றை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு மகளிர் விருதும், திருக்குறளில் 92 ஆம் அதிகாரம் வரைவின் மகளிர் என்னும் அதிகாரத்திற்கு ஆகச்சிறந்த பொருண்மைமிகு சீரிய ஆழமான செறிவான  கருத்துக்களோடு சிறுகதை எழுதியதை பாராட்டி அறநெறிச் செம்மல் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 


இவர் எழுதிய சிறுகதையானது குறளறம் என்னும் புத்தகத்தில்  இடம்பெற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு திருவள்ளுவர் கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது பாராட்டுதற்குரியது இதற்கு கல்வியாளர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்