"பாரு.. என்னாச்சு.. நல்லாத்தானே போய்ட்டிருக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு".. (கெளதமியின் காதல் -22)

May 07, 2024,05:19 PM IST

- சுதா. அறிவழகன்


போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த பார்வதிக்கு இன்னும் படபடப்பு போகவில்லை. நெஞ்செல்லாம் குமுறியது. வியர்த்துக் கொட்டியது. இப்படி ஒரு நிலைமையில் வந்து நிற்போம் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆட்டோ ஒன்றை நிறுத்தியவள், ஹோட்டல் பெயரைச் சொல்லி அங்கு போகுமாறு கூறினாள்.


ஆட்டோ செல்லச் செல்ல அவளது நினைவுகள் பின்னோக்கிப் போனது.


பார்வதிக்கும், நவீனுக்கும் இடையிலான அறிமுகம் அப்போதுதான் ஏற்பட்டிருந்தது.. ஒருமுறை ஒரு சீனியர், பார்வதியை கிண்டலாகப் பேசி விட்டான்.. அவளுக்கு அழுகையாக வந்து விட்டது. அந்த சமயம் பார்த்து அந்தப் பகுதியை கிராஸ் செய்த நவீன், இவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் வந்து, என்னாச்சு ஏன் அழறீங்க என்று கேட்டான்.


"செகன்ட் இயர் பையன்.. ரொம்ப கேவலமா பேசிட்டான்.. என்னால தாங்கிக்க முடியலை. இப்படித்தான் அடிக்கடி பண்றான்.. என் கிட் புரபோஸ் பண்ணான். நான் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன்.. அதுல இருந்து இப்படி டார்ச்சர் பண்றான்.. இன்னிக்கு ரொம்ப தப்பா பேசிட்டான்".. குமுறியபடி அழுதாள் பார்வதி.




"யாரு அவன்.. பேரு தெரியுமா"


"ராஜ்குமார், செகன்ட் இயர் பி.எஸ்.சி மேத்ஸ்"


"சரி நான் பாத்துக்கறேன்.. நீங்க ரிலாக்ஸா கிளாஸுக்குப் போங்க.. அப்பறம் ஒரு விஷயம்.. இப்படி எடுத்ததுக்கு எல்லாம் பயப்படக் கூடாது, அழக் கூடாது. தைரியமா ஃபேஸ் பண்ணனும்.. 100 பேர் இருக்கும் இடத்தில் பத்து பேர் பைத்தியக்காரனத்தான் இருப்பான்.. அந்தப் பத்து பேரைக் கூட சமாளிக்காட்டி, நாளைக்கு பியூச்சர்ல நம்மை சுத்தி நிற்கப் போற பத்தாயிரம் பிரச்சினைகளை சமாளிக்கும் பக்குவமும், தைரியமும் எப்படி வரும்.. நாம படிக்கிறதே, நம்மளோட அறிவை, தைரியத்தை, சாதுரியத்தை வளர்த்துக்கத்தான்..  அதனால முதல்ல பயப்படுவதையும், அழுவதையும் விட்டுட்டு தைரியமா எதிர்கொள்ள டிரை பண்ணுங்க.. அப்பத்தான் வாழ்க்கையிலும் ஜெயிக்க முடியும்.. தப்பு நம்ம மேல இல்லைலல்ல.. பிறகு எதுக்கு நாம அழனும்.. அவன்தான் தப்பு பண்ணான்.. அப்ப அவன்தான் அழனும்.. உணரணும். உணர வைப்போம்.. சரியா.. ரிலாக்ஸா கிளாஸுக்குப் போங்க.. நான் பாத்துக்கறேன்.. பை தி வே.. உங்க பேரு"


"ம்ம்.. சரி.. என் பேரு பார்வதி.. உங்க பேரு?"


"நவீன்.." புன்னகையுடன் சொல்லி விட்டு சென்ற நவீனைப் பார்த்தபடி நின்றிருந்தாள் பார்வதி. நவீன் சொன்ன வார்த்தைகள், அவன் ஆறுதல் சொன்ன விதம், கூடவே மோட்டிவேட் செய்தது அவளுக்குப் பிடித்திருந்தது. அடுத்து வந்த சில நாட்களில் அந்த ராஜ்குமாரைக் காணவில்லை. அவனது தொல்லை இல்லாமல், நிம்மதியாக வகுப்புகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள் பார்வதி. 


அன்று கல்லூரியில் இவளது டிபார்ட்மென்ட்டிலிருந்து ஒரு செமினார் வைத்திருந்தார்கள். வெளியிலிருந்து சில முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர். அவர்களை ரிசீவ் செய்யும் பொறுப்பு இவளுக்குத் தரப்பட்டிருந்தது. அந்த வேலையில் பிசியாக இருந்தபோது, திடீரென அங்கு வந்தான் ராஜ்குமார்.


"பாரு.. கொஞ்சம் பேசணும்"


சைத்தான் கொஞ்ச நாளா காணாம இருந்ததே.. மறுபடியும் வந்துருச்சே என்று துணுக்குற்ற பார்வதி, மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் குடைய, இன்னொரு மாணவியிடம் கொஞ்சம் பார்த்துக்க என்று கூறியபடி வெளியே வந்தாள்.


"தேங்க்ஸ் பாரு.. வந்ததுக்கு.. ஆக்சுவலா நான் உன் கிட்ட ஸாரி கேட்கத்தான் வந்தேன்.. என்னோட உணர்வுகளில் தவறு கிடையாது.. அதுல இந்த நிமிஷம் வரைக்கும் நான் தெளிவாத்தான் இருக்கேன்.. ஆனால் அதை உன்னிடம் உணர்த்திய விதத்தில்தான் நான் தப்பு பண்ணிட்டேன்.. .ஒன்னு ரெண்டு இல்லை, நிறைய.. நவீன் புரோதான் எனக்கு அதைப் புரிய வச்சார்.. அவர் சொன்ன பிறகுதான்.. நான் எவ்வளவு தூரம் உன்னை ஹர்ட் பண்ணிருக்கேன்னு உணர்ந்தேன்.. இத்தனை நாளா நான் செஞ்சது டார்ச்சர்.. அதுக்காக மன்னிச்சுரு.. இனிமேல் அந்தத் தப்பு நடக்காது..  பட், என்னோட ஃபீலிங்ஸ் ஜெனூன்.. அதுல எனக்கு சந்தேகம் இல்லை, உனக்கும் சந்தேகம் வேண்டாம். உனக்கும் மனசுல சரின்னு பட்டா, ரெசி புரகேட் பண்ணு.. இல்லாட்டி பரவாயில்லை.. விட்டுரு..  இதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்"


ராஜ்குமார் சொல்லச் சொல்ல பார்வதிக்கே ஒரு மாதிரியாகி விட்டது..


"இல்லை பரவாயில்லை.. எதுக்கு ஸாரி எல்லாம்.. நான் ரொம்ப ஹர்ட் ஆனேன்ங்கிறது உண்மைதான்.. பரவாயில்லை.. நீங்க உங்க தப்பை உணர்ந்துட்டீங்களே.. அது போதும்..  எனக்குள்ள எப்பவுமே உங்க மேல எந்த ஃபீலிங்கும் வந்ததில்லை.. இதைச் சொல்வதால் உங்க மனசு ஹர்ட் ஆச்சுன்னா ப்ளீஸ் மன்னிச்சுருங்க.. பட், அதுதான் உண்மை. எனக்கு எந்த ஸ்பெஷல் உணர்வும் வரலை.. இதைத்தான் நான் அன்னிக்கே சொன்னேன்.. நீங்கதான் புரிஞ்சுக்கலை.. பட் இப்ப புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன்.. நாம நல்ல பிரண்ட்ஸா இருப்போமே.. நல்ல பிரண்ட்ஷிப் கடைசி வரைக்கும் நிலைக்கும்னு சொல்வாங்க.. உண்மைல, காதலை விட அது ரொம்ப உயர்ந்ததும் கூட.. அப்படிப்பட்ட பிரண்டா எனக்கு இருக்கலாமே நீங்க.. இருப்பீங்களா"


"உண்மைதான்  பாரு.. அப்ப இருந்த மன நிலைல நான் உங்களைப் புரிஞ்சுக்காம கொஞ்சம் அத்து மீறிட்டேன்.. பட் இப்ப புரியுது.. புரிஞ்சுக்கும் மனப்பக்குவம் வந்திருக்கு.. ஏமாற்றமாதான் இருக்கு.. ஆனா உன்னோட உணர்வை நான் மதிக்க விரும்பறேன்.. இப்படியே இந்த விஷயத்தை விட்ரலாம்.. இனி நல்ல பிரண்ட்ஸா இருப்போம்... அதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை".. புன்னகைத்தபடி கூறி கையை நீட்டினான் ராஜ்குமார்.. மனசில் சந்தோஷமும், நிம்மதியும் கலந்து கரைபுரண்டோட, அப்பாடா பெரிய பிரச்சினை தீர்ந்தது என்ற மன அமைதியில், பதிலுக்கு கையை நீட்டி, "தேங்க்ஸ் ராஜ்" என்று கூறி சிரித்தாள் பார்வதி.


"ஆமா.. நவீன் உங்க கிட்ட என்ன சொன்னார்"


"நான் இடையில நாலு நாள் லீவு.. வரலை.. நேத்து காலைலதான் வந்தேன்.. நவீன் பேசணும்னு கூப்பிட்டார்.. கேன்டீனுக்குக் கூட்டிட்டுப் போய் பேசினார்.. அவர் பேசினார் அப்படிங்கிறதை விட நிறையப் புரிய வச்சார்.. என்னமோ தெரியலை.. அவர் சொல்லச் சொல்ல எனக்கு கோபம் வரலை.. அதுக்குப் பதிலா, என்னோட சைட்ல இருந்த அத்தனை தப்புகளும் அப்படியே  கண்முன்னாடி அணிவகுத்துப் போன மாதிரி இருந்தது. தவறுகளை உணர்ந்த பிறகு யாராலுமே அதே தவறுகளை மறுபடியும் செய்ய முடியாது.. ஸோ.. அதன் விளைவுதான்.. இப்போ நான் உன் கிட்ட பேசுனது. வழக்கமாக இது மாதிரி பிரச்சினைகளில், அடிதடிதான் பொதுவா நடக்கும்.. ஆனால் நவீன் இதை அணுகிய விதம் சிம்ப்ளி சூப்பர்ப்.. உங்களுக்கு ரொம்ப நாள் பழக்கமா அவர்"


"அய்யோ.. ஒரே ஒருமுறைதான் பேசிருக்கோம்.. நீங்க பேசிட்டுப் போனதுக்குப் பிறகு நான் அழுததைப் பார்த்து அவராக வந்து பேசினார், என்னன்னு கேட்டார். நீங்க யார் என்ன விவரம்னு கேட்டுட்டுப் போனார், அவ்வளவுதான்.. பட், இத்தனை மெனக்கெட்டு அவர் பேசியிருக்கிறார்னு நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு.. இனிமே அவரும் நம்மளோட பெஸ்ட் தோஸ்த்துதான்.. இருங்க நான் இந்த செமினாரை முடிச்சுட்டு வந்து பார்க்கறேன்.. நாம எல்லோரும் சேர்ந்து ஈவ்னிங் ஏதாவது ரெஸ்டாரென்ட் போலாம்.. என்னோட ட்ரீட்.. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் இப்போ".. உற்சாகமாக பேசிய பார்வதியைப் பார்த்து கலகலவென சிரித்தான் ராஜ்குமார்.. அவனும் இப்போது ரொம்ப தெளிவாக இருந்தான்.


அந்த புள்ளியிலிருந்துதான் நவீன் பக்கம் திரும்ப ஆரம்பித்தாள் பார்வதி. அடிக்கடி நவீனைப் பார்க்க ஆரம்பித்தாள், அவனுடன் பேச விரும்பினாள்.. அவனிடம் பேசாவிட்டால் அந்த நாள் முழுக்க பைத்தியம் பிடித்து விடும்போல இருக்கும்.. விழுந்து விழுந்து பேசினாள். நவீனும் அவள் பேசுவதையெல்லாம் பொறுமையாக கேட்பான்.. இப்படியாக இவர்களுக்குள் நல்ல நட்பு போய்க் கொண்டிருந்த சமயத்தில்தான், நவீன் மனதில் வந்து விழுந்தாள் கெளதமி. எத்தனையோ பேரிடம் பேசிப் பழகியிருந்தும் கூட அசையாத நவீனின் மனசு, முதல் முறையாக கெளதமியிடம் சஞ்சலப்பட்டது. ஆனாலும் அதை உடனடியாக வெளிப்படுத்தவில்லை நவீன்.. கெளதமியிடமும் அதே உணர்வு இருப்பதைப் புரிந்து கொண்ட பிறகுதான், அவளிடம் தன்னை வெளிப்படுத்த ஆரம்பித்தான்.


கெளதமியை நவீன்  நெருங்கிய போதுதான், அவனை நோக்கி பார்வதி நெருங்கி வந்தாள்.. தனது காதலை அவள் சொன்னபோது நவீனுக்குள் ஆச்சரியம்..!


"பாரு.. என்னாச்சு.. நல்லாத்தானே போய்ட்டிருக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு"


"இல்லை.. இது திடீர் முடிவில்லை.. உங்க கிட்ட பழக ஆரம்பிச்சப்பவே எனக்குள்ள வந்து விட்ட உணர்வு இது. உடனே சொல்லத் தயக்கமா இருந்தது. கொஞ்சம் பழகிட்டு சொல்லலாம்னுதான் வெயிட் பண்ணேன்.. பட் இப்போ என்னால இதை தொடர்ந்து அடக்கி வச்சுக்க முடியலை.. ஏன்.. என்னைப் பிடிக்கலையா"


"சேச்சே.. உன்னைப் பிடிக்காம இருக்குமா யாருக்காச்சும்.. உன்னைப் பிடிச்சதாலதானே.. ராஜ்குமாரே புரபோஸ் பண்ணான்.. அப்படியெல்லாம் இல்லை. பட், எனக்கு அந்த மாதிரி தாட் இல்லை. உன் கிட்ட வரலை.. வேற ஒரு மனசிடம் நான் என்னை கொடுத்துட்டேன்"


காலுக்குக் கீழே பெரிய பள்ளம் விழுந்து, அப்படியே அது தன்னை இழுத்துக் கொள்வதைப் போல உணர்ந்தாள் பார்வதி.




"நவீன்.. நான் நினைக்கிறது தப்பா.. நினைக்கக் கூடாதா.. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.. உங்க கூட என்னோட எதிர்காலம் இருந்தா சந்தோஷமா இருக்கும், இருப்பேன்னு நினைக்கிறேன்"


"எல்லாம் சரிதான் பார்வதி.. பட், என்னோட மனசு ப்ரீயா இருந்தா அதை நிச்சயம் உன்னிடம் கொடுத்திருப்பேன்.. ஆனால் அது காலியா இல்லை.. அங்க ஒருத்தி வந்துட்டா.. என்னால அவளை தூக்கி எறிய முடியாது.. நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்"


பெரும் ஏமாற்றம் மனசைப் பிசைய, அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தாள் பார்வதி.. இதைப் பார்த்த நவீனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. 


பார்வதியிடம் நெருங்கி, அவளது இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, "லுக் பார்வதி.. நீ சின்னக் குழந்தை இல்லை.. மெச்சூரிட்டி உள்ள பெண். நான் இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறேன்.. இந்த சமயத்தில் எப்படி உன்னோட விருப்பத்தை ஏற்க முடியும்.. பிராக்டிகலாக இதற்கு சாத்தியமே இல்லை. இது உனக்குப் புரியும்தானே.. பிறகு ஏன் உடைஞ்சு போற.. உன்னோட விருப்பம் சரியானதுதான்.. எல்லோருக்கும் வரும் இயல்பான உணர்வுதான்.. ராஜ்குமாருக்கு வந்தது, நீ ரிஜக்ட் பண்ணே.. அவனும் புரிஞ்சுக்கிட்ட இப்போ உன்னோட நல்ல நண்பனா இருக்கான்.. அதுபோல நாமும் நல்ல பிரண்ட்ஸா இருப்போம்.. அவ்வளவுதானே.. நான் உன்னை விட்டு எங்கேயும் போகப் போறதில்லை.. ஒரு நண்பனா.. கடைசி வரைக்கும் இருப்பேன்.. எதார்த்தத்தைப் புரிஞ்சுக்கோ, புரிஞ்சுப்பேன்னு நம்பறேன்"


நிறுத்தி நிதானமாக அவன் பேசப் பேச பார்வதிக்கு கொஞ்சம் தெளிவு பிறந்தது.. ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு கண்களைத் துடைத்தபடி, "ஸாரி நவீன்.. உங்களை ஹர்ட் பண்ணிருந்தா மன்னிச்சிருங்க" என்றபடி அங்கிருந்து கிளம்பினாள்.. சிறிது தூரம் சென்ற அவள், மீண்டும் நவீனைப் பார்த்துத் திரும்பி, "உங்க மனசுல இருக்கிறது யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா.. ஒரு கியூரியாசிட்டிதான்.. அந்த லக்கி பொண்ணு  யார்னு தெரிஞ்சுக்க ஒரு ஆசை.. தப்பா நினைக்காட்டி சொல்லலாம்"


"ஹாஹாஹா.. சொன்னா நம்ப மாட்டே"


"ஏன்"


"மேடம் உங்க கூடயேதான் இருக்காங்க.." 


"என்னோட பிரண்டா.. யாரு அது.. மேகலாவா, இல்லை சுகந்தியா.. ஸ்வேதாவா.. கெளதமியா"


"கடைசில சொன்ன பொண்ணு"


"யாரு கெளதமியா!!".. ஷாக்கானாள் பார்வதி.. முகமே கறுத்துப் போய் விட்டது.. அவளால் நம்பவே முடியவில்லை.. கெளதமி எப்படி நவீனை.. கொஞ்சம் கூட ஏற்க முடியாத பெரிய ஏமாற்றம் இப்போது பார்வதியை சுழற்றியடிக்க, நவீனைப் பார்த்து செயற்கையாக சிரித்தபடி, செயற்கையாக வாழ்த்தியபடி.. அந்த இடத்தை விட்டு மெல்ல அகன்றாள்.. அவளது முகத்தில் தெரித்தது ஏமாற்றம்  என்றால் மனம் முழுக்க கோபம் குமுறியெழ ஆரம்பித்தது.


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்