வள்ளுவனின் "பெரியாரைத் துணைக் கோடல்" அதிகாரத்தில் வரும் ஒரு குறள்..
"அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்"
இதன் பொருள்.. பெரியோரைப் போற்றி தமக்கு சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள், எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்பதாகும். எவ்வளவு அருமையான விஷயத்தைச் சொல்லியுள்ளார் பாருங்கள் வள்ளுவர் பெருமான்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார், வயதான காலத்தில் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவளிக்க திருஞான சபையை வயலூரில் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் மிகவும் நேர்த்தியாக வள்ளலாரின் அருளால் நடந்து வருகிறது.
எத்தனையோ நல்ல எண்ணம் கொண்டவர்கள் முதியவர்கள் மேல் தனி அன்பும் கருணையும் கொண்டு ஆதரவளித்துக் கொண்டு இருக்கிறார்கள், முதியோர் இல்லங்கள் சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டிஸ் என்ற பெயரில். ஆனால் அவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குள்ளே ஒரு சிந்தனையும் ஏக்கமும் தோன்றும். இந்த முதியவர்கள் தமது சொந்த இடம், ஊர், தமது மக்களை பிரிந்து உண்மையில் உண்மையிலேயே இங்கு மனநிறைவோடு இருக்கிறார்களா என்று.
இந்த ஏக்கத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளிதான், நான் கண்டு வியந்த இந்த செய்தி. வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற பெருமைக்குரிய நம் இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்தில் மஹசேனா மாவட்டத்தில் பேஜராஜு தாலுகாவில் இருக்கும் சந்தங்கி (Chandanki) கிராமம். இந்த கிராமம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தங்களது பலமாய் கொண்டு, சேர்ந்து உணவு சமைத்து, ஒன்றாய் உண்டு களித்து பலருக்கும் முன் உதாரணமாய் வாழ்கிறது.

இப்படிப்பட்ட சூழல் உருவாக காரணம் என்ன.. உங்கள் கேள்விக்கு பதில்.. இதோ. இங்கு வசிக்கும் பெரும்பாலான இளைஞர்கள் தமது வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் சென்று விட்டார்கள். அதனால் இங்கு நிறைய முதியவர்கள் தனிமையில் வாழ வேண்டிய சூழ்நிலை. இதை போக்குவதற்கான அருமருந்து தான் இந்த யோசனை. இங்கு இருப்பவர்கள் யாரும் தனியே சமைப்பதில்லை. அனைவருக்கும் சேர்த்து பொதுவான இடத்தில் உணவு சமைத்து, சூரிய வெப்பத்தில் இயங்கும் குளுகுளு அறை வசதி கொண்ட அறையில் உணவு பரிமாறப்படுகிறது. பகுத்துண்டு வாழ்வதில்தான் எத்தனை இன்பம்.
இவர்களுக்காக தனியாக பொழுதுபோக்கு இடமும் இருக்கிறது. அங்கே தமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதை வாசிக்குபோதே நமது மனம் குதூகலிக்கிறது அல்லவா.. வயதானவர்களுக்கு பேச ஆள் கிடைத்தால் அவர்கள் மன மகிழ்விற்கு எல்லையே இல்லை. அமெரிக்காவில் 20 ஆண்டுகள் பணியாற்றி விட்டு தனது அகமதாபாத் நகரில் இருக்கும் வீட்டை விட்டு சந்தங்கி கிராமத்திற்கு இடம் பெயர்ந்து விட்டார் அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த பூனம்பாய் படேல். இவர்தான் இந்தக் கிராமத்தின் தலைவராக தற்போது இருக்கிறார்.
இங்கு வந்து வசிப்பது குறித்து அவர் கூறும்போது, "எனக்கு இந்தக் கிராமத்தின் மீது அலாதிப் பிரியம் உண்டு. அகமதாபாத்தில் எனக்கு வீடு உள்ளது. ஆனால் அங்கு வசிப்பதை விட இங்கு வசிப்பதே திருப்தியாக இருக்கிறது. எனவேதான் இங்கேயே வந்து விட்டேன். அமெரிக்காவில் இருந்தபோதே கூட எனது மனமெல்லாம் இந்தக் கிராமத்தின் மீதுதான் இருக்கும்" என்றார். மனதார வாழ்த்துவோம் அவரது செயலுக்கு.
இந்தக் கிராமத்தில் மொத்த மக்கள் எண்ணிக்கை 1100 பேராகும். அதில் 300 பேர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் காந்திநகர், அகமதாபாத் உள்பட பல்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்களாம். ரத்திலால் சோம்நாத் படேல் என்பவர்தான் இந்த கூட்டு சமையலை 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர். அதுதான் இன்று மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்று சொல்கிறார் பூனம்பாய் படேல்.
தமது வசதியை பெருக்கிக் கொள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பொருள் ஈட்டி அங்கிருக்கும் வசதிகளில் தன்னை பறி கொடுத்து அங்கேயே நிரந்தரமாய் தங்கி வரும் இன்றைய மக்களுக்கு மத்தியில் தனது பெற்றோர்கள் நலம் காக்கும் நல் உள்ளம் கொண்ட அவர்கள் மற்றும் அந்த சமூகத்திற்கு நன்றி கூறி இச்செய்தி பல திசைகளுக்கும் சென்றடைய பலருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து இதுபோன்ற நற்செயல்கள் இந்தியா முழுவதும் நடக்க வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது.
வாழ்வின் இறுதிக் கட்டத்தில் முதிய குடிமக்களுக்கு மிகப் பெரிய தேவைகள் எப்போதுமே இருப்பதில்லை.. பேச ஆள் வேண்டும்.. சற்று பரிவும், அக்கறையும் காட்ட நல்ல உள்ளங்கள் இருந்தால் போதும்.. நிம்மதியுடன் வாழ்ந்து முடிப்பார்கள்.. அதற்கு இந்த சந்தங்கி கிராமம் அழகான வழி காட்டுகிறது.. மொத்த உலகுக்கும்!
கட்டுரை: ஜெயலட்சுமி, மஸ்கட்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}