சண்டிகர்: ஹரியானா மாநிலம் நு நகரில் சமீபத்தில்தான் பெரும் கலவரம் வெடித்து தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் பேரணி நடத்த சர்வ் ஜாதிய இந்து மகாபஞ்சாயத் என்ற இந்து அமைப்பு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பதட்ட நிலை காரணமாக அங்கு பள்ளிகள், வங்கிகள் மூடப்பட்டு விட்டன.
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நு நகரில் ஜூலை 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியவை பேரணி நடத்தின. அது பின்னர் பெரும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறியது. முஸ்லீம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். ஒரு மசூதி தீவைத்து எரிக்கப்பட்டது. பலர் உயிரிழந்தனர். பல சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. டெல்லி அருகே வரை கலவரம் பரவி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து அங்கு பேரணிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஷோபா யாத்திரா என்ற பெயரில் ஒரு பேரணியை நடத்த இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி தரவில்லை. ஆனால் அனுமதியை மீறி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் நு நகரம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். கிட்டத்தட்ட 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 கம்பெனி பாராமிலிட்டரி படைகளும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கிகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைகளும் மூடப்பட்டுள்ளன. பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் இன்டர்நெட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் வாகன தணிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
{{comments.comment}}