- முனைவர் தி.தங்கலட்சுமி
விளையாட்டு என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும் அல்லவா! சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டை விரும்பாதவர்களே இல்லை எனலாம்.
அந்த வகையில் விளையாட்டுகளை உள்ளரங்க விளையாட்டு (Indoor Games), வெளியரங்க விளையாட்டு (Outdoor Games) என இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இந்த உள்ளரங்க விளையாட்டிலும் ஓடியாடி விளையாடும் விளையாட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டு என இரண்டாகப் பிரிக்கலாம்.
அமர்ந்து விளையாடும் விளையாட்டில் மூளைக்கு வேலையும் பயிற்சியும் தரும் பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், ஆடுபுலி ஆட்டம், சதுரங்கம், கேரம், பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும்விட ஆர்வத்தைத் தூண்டும்விதமான மூளையைச் சுறுசுறுப்படையச் செய்யும் விளையாட்டுகள் புதிர்கள் என்றால் மிகையாகாது.

ஆம்! அதிலும் வார்த்தைப் புதிர்கள், எண் புதிர்கள் என ஏராளமான புதிர் வடிவங்கள் உள்ளன. இதில் எண் புதிர்களின் சுவாரஸ்யமான ஒரு மாயச்சதுரம் போன்ற வடிவமே ‘சுடோகு’ ஆகும். மாயச்சதுரத்தில் நிரல் நிறையாகவும் குறுக்குவெட்டிலும் எங்கிருந்து எப்படிக் கூட்டினாலும் கூட்டுத்தொகை ஒன்றாக அமையும். அதுபோன்ற ஒரு வடிவமே இந்தச் ‘சுடோகு’ என்பதும்.
‘சுடோகு’ ஒரு எண் புதிர். இது கணிதத்தின் சூத்திரங்கள் எதுவும் பயன்படுத்தப்படத் தேவையற்ற ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். ஓரிலக்க எண்களான 1 முதல் 9 வரையிலான எண்களை மட்டுமே பயன்படுத்தி கட்டங்களைச் சரியாக நிரப்பும் லாஜிக்கல் மற்றும் ரீஸனிங் (Logical Reasoning) முறையில் விளையாடும் விளையாட்டு. இந்த விளையாட்டின் விதிமுறைகள் மிகவும் எளிமையானதே. வாருங்கள் பார்க்கலாம்!
9 × 9 சம அளவிலான கட்டங்கள் கொண்டது. இதில் 3 × 3 அளவில் மூன்று மூன்று கட்டங்கள் கொண்டு அமைந்திருக்கும். இதில் சில சில கட்டங்களில் மட்டும் எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். மற்ற காலியான கட்டங்களைச் சரியான எண்கள் இட்டு நிரப்ப வேண்டும். 1-9 வரையான ஓரிலக்க எண்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அப்படி நிரப்பும்போது மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மற்றும் மூன்றுக்கு மூன்று கட்டத்திலும் வந்த எண்ணே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே இதன் விதிமுறை!
நவீன சுடோகு (Sudoku) புதிர் விளையாட்டு 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு புதிர்கள் இதழில் வெளியிடப்பட்டது. பின்னர் 1986 காலகட்டங்களில் ஜப்பானில் பிரபலமடைந்து உலக அளவில் பரவியது. 2005 ஆம் ஆண்டுவாக்கில் தொடங்கி அமெரிக்காவில் மிகப் பரவலாக விளையாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் இவ்விளையாட்டு நாளிதழ்களின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தது.

தற்போது இந்த சுடோகு விளையாட்டை புத்தகம், கணினி, திறன்பேசிகள் மற்றும் வலைத்தளம் என பல வடிவங்களிலும் விளையாட முடிகின்றன.
மக்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களில் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் சிறந்த புதிர் விளையாட்டு இந்த சுடோகு புதிர்கள் எனலாம்.
வாருங்கள்... நாமும் ஒரு சுடோகு புதிரை இங்கு விடுவித்து இன்றைய செப்டம்பர் 9 சர்வதேச சுடோகு தினத்தைச் சிறப்பிக்கலாமா?!
(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
மணிமகுடம் சூட்டவா? மலர்க் கொடியே அருகில் வா!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
{{comments.comment}}