"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

Sep 09, 2026,04:10 PM IST

- சுதா திருநாராயணன், திருச்சி


பாட்டிகள் பற்றிய கட்டுரையை படித்த பிறகு எனக்கும் என் தாய் வழி தந்தை வழி பாட்டி மற்றும் பாட்டனார்களைப்  பற்றிய நினைவு வந்தது. என் தாய் வழி பாட்டி தந்தை வழி பாட்டி இருவருக்கும் ஒரே பெயர். ஒருவர் பெயர் ராஜம்மாள் மற்றொருவர் பெயர் ராஜலட்சுமி. ஆனால் இருவரையும் ராஜம் பாட்டி என்றுதான் குறிப்பிடுவோம். ஆனால் அடையாளத்திற்காக தாய் வழிபாட்டியை மெட்ராஸ் பாட்டி என்றும் தந்தை வழி பாட்டியை திருத்துறைப்பூண்டி பாட்டி என்றும் சொல்வோம்.


முதலில் நான் என் பாட்டனார்களைப்  பற்றி கூற விரும்புகிறேன்.


முதலில் என் தாய் வழி  தாத்தாவை பற்றி எழுதுகிறேன். என்னுடைய  தாத்தா, பி ஆர் ஸ்ரீனிவாசன், PRS என்று மிகவும் பிரபலமாக இருந்தார். சுதேசமித்திரன் தினசரி  பத்திரிகையில் ரிப்போர்ட்டராக பணியில் இருந்தார். தி மெயில் தினசரியிலும் சில காலம் பணி புரிந்தார். ராஜாஜி காமராஜ் போன்ற அரசியல் பிரபலங்களுடன் அவருக்கு நெருக்கமான சினேகம் இருந்தது.  பள்ளிக்கூடத்தில் படித்ததில்லை. ஆனால் அற்புதமான ஆங்கிலத்தில் எழுதுவார். 


அந்தக் காலத்தில் வீட்டில் பேச்சுத் தமிழில் தான் பேசுவோம் . ஆனால் பிஆர் ஸ்ரீனிவாசன் தாத்தா எழுத்துத் தமிழில் நிறைய பேசுவார். நாம் 'அப்புறம்' என்று சொல்வதற்கெல்லாம் அவர் 'பிறகு' என்று தான் சொல்வார். 'அவர் வந்த பிறகு' 'அதற்குப் பிறகு' என்று அவர் பேசுவது உண்மையிலேயே அழகாக இருக்கும்.




தினமும் டைரி எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவருடைய குறிப்புகள் அடங்கிய  டைரிகள் எங்கே போயின என்று தான் தெரியவில்லை. நாங்கள் நாக்பூரிலும் பூனாவிலும் வசித்த பொழுது எங்களுடன் வந்து தங்கி இருக்கிறார். நீளமான தாடி வைத்திருப்பார். அதனால் அவருக்கு தாடி என்ற  பெயரும் உண்டு. அரசியல் பிரமுகர்கள் அவரை தாடி என்று அழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார். 


வெற்றிலை சீவல் போடுவது அவருக்கு மிகவும் பிரியமானது ஒன்று. வாயில் வெற்றிலையை அடக்கியபடியே தான் பேசுவார். நிறைய அரசியல் விஷயங்கள் பேசுவார். அவர் ஒருமுறை நாக்பூர் வந்திருந்த போது அடுப்புக்கரி வாங்கி வருகிறேன் என்று சொல்லி கரி மண்டிக்கு  சென்றார். கரிக்கு கொய்லா  என்று ஹிந்தியில் சொல்வோம். கட்டைக்கரி கல்லு கரி என்று இருவகை உண்டு. கட்டை கரிக்கு லக்டி கொய்லா என்றும் கல்லு கரிக்கு பத்தர் கொய்லா  என்றும் பெயர்.  


தாத்தா  மண்டிக்குச் சென்று லட்க்கி கொய்லா என்று சொல்ல கடைக்காரன்  சிரித்திருக்கிறான். ஏனென்றால் லடுக்கி என்றால் பெண் என்று அர்த்தம். அதேபோல் ஒரு முறை அவர் பூனா வந்திருந்த போது நாங்கள் வசித்த இடத்திற்கு எதிரில் ஒரு மலைக்கோவில் உண்டு. ராம்டேக் என்ற ராமர் கோவில். மலையேறி போக வேண்டும். தாத்தா அங்கு சென்று விட்டு வழியில் சற்று இளைப்பாறி  இருக்கிறார். 


தாடியுடன் இவரை பார்த்தவுடன் யாரோ சாமியார் என்று நினைத்து பலர்  பணம் காசு கொடுத்து விட்டு சென்றார்களாம். எல்லாவற்றையும் கோயில் உண்டியலில் சேர்த்து விட்டு வந்தார். தாத்தாவிற்கு ஹிந்தி தெரியாததால் அவரால் எதுவும் விளக்கி சொல்ல முடியவில்லை. வீட்டிற்கு வந்து சொல்லி சிரித்தார்.


எப்பொழுதும் ஈசி சேரில் சாய்ந்து கொண்டு ராமஜபம் செய்து கொண்டே இருப்பார். சீரகமும் கொத்துமல்லி விதையும் போட்டு கொதிக்க வைத்த வெந்நீர் தான் அருந்துவார். 1972ல் அவர் மறைந்த பொழுது தமிழ்நாடு மாநில செய்திகளில் அவருடைய மறைவை பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டது.


என் தந்தை வழி பாட்டனார் சாரங்கபாணி ஐயங்கார். 


திருத்துறைப்பூண்டியில் ரைஸ் மில்லில்  பணிபுரிந்து கொண்டிருந்தார். வீட்டிற்கு அரிசி  மூட்டை வந்து விடுமாம். வீட்டில் எப்பொழுதும் உறவினர்களின் கூட்டம் இருக்குமாம்.  என் தாய் கூறி இருக்கிறாள்.  தாத்தா சாரங்கபாணி  தன் மூன்று மகன் மற்றும் மூன்று மகள்களை படிக்க வைத்து நல்ல முறையில்  திருமணம் செய்து கொடுத்தார். என் தந்தை மூத்த மகன் என்பதால் எங்களுடன் நாக்பூரில் அதிக வருடங்கள் இருந்தார். என்னையும் என் சகோதரனையும் காலையில் எழுப்பும் பொழுது “ஏந்திருடா, ஏந்திருடீ” என்று திருடா திருடியில் அழுத்தம் கொடுத்து எழுப்புவார்.


அந்நாட்களில் நாக்பூரில் மின்வெட்டு அதிகம். எங்கள் வீட்டில் ஹாலில் மட்டும்தான் ஃபேன். கரண்ட் போய்விட்டால்,  “பேன் இல்லாட்டா என்னடா விளக்கைப் போடேன்” என்பார்.  சிறுமியான நானும் ஸ்விட்ச் போடுவதற்கு ஓடுவேன்.  சாரங்கபாணி தாத்தா நான்  என் சகோதரன் மூவரும் நிறைய சீட்டு விளையாடுவோம். 304, 108 போன்ற விளையாட்டுகளை தாத்தா தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.  நானும் அண்ணாவும் நிறைய சீட்டிங் (ஏமாற்றி) செய்து விளையாடுவோம். அண்ணாவிற்கு அதனால் ஃப்ராடு மாஸ்டர் என்று தாத்தா பெயர் வைத்திருந்தார். 


சாரங்கபாணி தாத்தா ஒரு முறை நாக்பூரில் பார்பர் கடைக்கு போய்விட்டு வீட்டிற்கு வரும் வழி தெரியாமல் வேறு எங்கோ போய்விட்டார். அப்பொழுதெல்லாம் போன் கிடையாது. காலை 7 மணிக்கு போனவர் 11 மணி வரை வரவில்லை என்றவுடன், (வெயில் காலம் வேறு நாக்பூரில் வெயில் பயங்கரமாக கொளுத்தும்) அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து அம்மா தேடத்  துவங்கி விட்டாள். ஒரே தெருவை அவரும் பல முறை சுற்றி வந்திருக்கிறார். ஆனால் தெரிந்தவர்கள் கண்ணில் முதலில் படவில்லை.


ஒருவாறு  எப்படியோ ஒரு மணி சுமாருக்கு யாரோ கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர். ஒருவேளை அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கலாம். அதற்கான விழிப்புணர்வு அந்தக் காலகட்டத்தில் இல்லை.


மற்ற மகன்களின் ஊருக்குச் செல்லும் பொழுது எங்களிடம்  “நீங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கலைனா லெட்டர்ல்லையே அடிப்பேன்.” என்பார்.  “லெட்டர்ல உங்க பேரை எழுதிவிட்டு அதை அடிச்சா உங்கள அடிச்ச மாதிரி தானே?”  என்று சொல்லி சிரிப்பார்.


எனக்கு 11 வயதாக இருக்கும்போது சாரங்கபாணி தாத்தா மறைந்தார். இரண்டு தாத்தாக்களும் இன்னமும் என் நினைவுகளில்  வாழ்கின்றனர்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

news

மகளே நிறைவேற்றுவாயா?

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்