கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

Sep 19, 2026,10:53 AM IST

- த. ஜோசப் சாம்ராஜ்


கோவில்பட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் என் மைத்துனரின் மகன் திருமண விழா இனிதே தொடங்கியது. சமீபநாட்களாக மணமகனை விட மணமகளுக்குச் செய்யப்படும் அலங்காரத்தில் தான் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அதிக மாற்றம் தெரிகிறது. இன்று இதே நாளில் அடுத்தடுத்த திருமண விழாக்கள்.


எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, 'இன்னாருக்கு இன்னார்' என்று இணையும் வாழ்வியல் உடன்படிக்கை இது. "வாழ்விலும் மரணம் நம்மைப் பிரிக்கும் வரை இணைந்திருப்போம்" என்று வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தபோது, அடுத்த திருமண மணமகள் பாரதிராஜா படத்து நாயகி போல வெள்ளை நிற உடையில் வந்துவிட்டார். அவரும் இதே போல் வாக்குறுதி கொடுப்பது வழக்கம். மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்துணர்ந்து வாழ வேண்டும். வாழ்க்கைக்கு நடுவில் கைபேசி (Mobile phone) தடையாக இருக்கக்கூடாது என்று மட்டும் எனக்குச் சொல்லத் தோன்றியது. மணமக்கள் ரோஜாக்களைப் போல நறுமணத்துடன் நீடூழி வாழ்க!


திருமண விழாவில் வெற்றிலை கலந்த ஜூஸ் கிடைத்தது. ஆஹா... என்ன சுவை! அட்டகாசமாக இருந்தது. பந்தியில் இடம் பிடிப்பது என்பது திருமண வீட்டில் ஒரு ஒலிம்பிக் வீரன் ஓடுவதைப் போலத்தான் நடக்கிறது. எனக்கு அசைவத்தை விடச் சைவ உணவே மனதிற்கு மிகவும் பிடிக்கும். அங்குதான் அதிகக் கூட்டமும் இருக்காது; நமக்குத் தேவையான காய்கறிகளைக் கேட்டு வாங்கித் திருப்தியாகச் சாப்பிடலாம். அதுவும் பாயாசத்தில் அப்பளத்தைப் பிசைந்து இலையில் வைத்துச் சாப்பிடுவது தனித் தித்திப்பு!




பந்தி பரிமாறிய புளியங்குடியைச் சேர்ந்த பெண்களைப் பாராட்டினேன். சமையலறைக்குச் சென்று, சிறப்பாகச் சமைக்கப்பட்ட சில பதார்த்தங்களுக்காகச் சமையல் கலைஞரை வாழ்த்தி வணங்கினேன். முன்பெல்லாம் திருமண விழா என்றால் மாவு அரைப்பதில் இருந்து தேங்காய் சட்னி அரைப்பது வரை நிறையத் திண்டாட்டம் இருக்கும். இப்போது காலம் மாறிவிட்டது; முதலிலிருந்து கடைசி வரை (A to Z) அனைத்தையும் பார்த்துக்கொள்ள ஆட்கள் வந்துவிட்டார்கள்.


ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மணமக்களைச் சுற்றி நடனமாடி மகிழ்கிறார்கள். திருமண வீடுகளில் நடனம் என்பது இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. மணமக்களே சேர்ந்து நடனமாடும் அளவுக்குச் சூழ்நிலை மாறிவிட்டது. அதற்கேற்றாற்போல் 'டிஜே' (DJ) ஒளி, ஒலி அமைப்புகளைச்மைத்துவிடுகிறார்கள். அதில் நடனமாடுவதற்கேற்ற பாடல்கள் மட்டுமே ஒலிக்கின்றன. பிறகு என்ன... மொத்தக் கூட்டமும் ஆடித் தீர்க்கும் திருவிழா போலத்தான் இருக்கிறது.


அதேபோல இன்னொரு முக்கியமான விஷயமான 'மொய்' எழுதும் முறையும் மாறிவிட்டது. அதற்குக் கணினியில் பதிவு செய்கிறார்கள். நாம் இதுவரை செய்த மொய் கணக்குடன் சேர்த்துப் ரசீதும் (Bill) தருகிறார்கள். உலகம் டிஜிட்டல் ஆனபின் எப்படியெல்லாம் மாற்றங்கள்! ஒரு திருமண விழாவில் கியூஆர் கோடு (QR Code) அட்டை கூட வைத்திருக்கிறார்கள். மாற்றம் நல்ல விஷயம்தான். அதோடு தாம்பூலப்பை ஒன்று தருவார்கள்; அதை "எனக்கு, உனக்கு" என்று போட்டி போட்டுக்கொண்டு தூக்கிச் செல்லும் கூட்டத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.




பொதுவாக மக்கள் 'இலவசம்' என்றால் தங்களின் கண்ணியத்தை மறந்துவிடுகிறார்கள். ஆனால், இரண்டே வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்துப் போட்டாலே 'அட' என மெச்ச வைக்கும் விருந்து அது. இப்போதெல்லாம் திருமண வீட்டின் வெளியே சர்க்கஸ் கூடாரம் போல பாப்கார்ன், ஐஸ்கிரீம், நொறுக்குத்தீனிகள் என ஒரு நீளமான பட்டியலே இருக்கிறது. ஆனால் பாவம், பெண் வீட்டார் கடனாளி ஆகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதெல்லாம் மாற வேண்டும். நாம் மீண்டும் எளிமைக்குத் திரும்ப வேண்டிய நிலையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளோம்.


அழகான, எளிமையான திருமண விழாக்கள் அதிகரிக்க வேண்டும். திருமணம் தவிர்த்து ஆடம்பரமாக செய்யப்படும் செயல்களுக்கான பணத்தை வைத்து, ஏழை எளியவர்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் உணவளித்து அவர்களின் மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கும் சூழலும் வர வேண்டும். ஆடம்பரத் திருமணங்களைப் பார்க்கும்போதெல்லாம் இது ஒன்றுதான் என் பிரார்த்தனையாக இருக்கிறது.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்