- கலைவாணி கோபால்
இன்றைய புதுக்கோட்டை, திருவாரூர், கும்பகோணம் போன்ற பகுதிகள் அக்காலத்தில் மிழலை நாடு என்று அழைக்கப்பட்டன. 'வீழி' என்றும் 'விழுதி' என்றும் அழைக்கப்படும் ஒருவகை மரம் அக்காலத்தில் மிழலை நாட்டில் அதிகம் இருந்ததால், 'வீழி மிழலை' என்று அழைக்கப்பட்டது. தேவாரத் தலங்களில் ஒன்றான திருவீழிமிழலை நாட்டின் ஒரு பகுதியாக 'பெருமிழலை' என்னும் ஊரில் பிறந்தவர் 'குறும்ப நாயனார்'.
'குறும்பர்' என்றால் ஆடு மேய்ப்பவர்களில் ஒருவகை இனத்தவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், சக மனிதர்களிடம் எல்லாம் சிவனைப் பற்றியே பேசுவார். அதுபோல, சிவனைப் பற்றி யார் கூறினாலும் அங்கும் இவர் இருப்பார். அதை மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருப்பார்.
சிவனடியார்களைக் கண்டால், அவர்கள் காலில் விழுந்து வணங்குவதும், வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரால் முடிந்த அளவு உபசரிப்பதும், அவர்களிடம் சிவன் பெருமைகளையும் திருவிளையாடல்களையும் கேட்பதுமாக அவரின் சிந்தனையை சிவன் மேல் செலுத்தி வந்தார்.
அப்போதுதான் சிவஅடியாரான சுந்தரர் (ஆரூரான் பெருமானின்) பாடல்களையும், அவருக்குப் பெருமான் மூலம் நடந்த நிகழ்வுகளையும் கேட்டு, குறும்ப நாயனாருக்கு ஆரூரர் மீது பார்க்காமலே அதீத பற்று தோன்றியது.

அப்பற்று போகப்போக, அவரை மனதுக்குள் குருவாகவே எண்ண ஆரம்பித்தார். அவரைப் பார்க்கவில்லை; அவருடன் பேசியதில்லை. ஆனால், அவர் எங்கு செல்கிறார், எந்தத் தலங்களில் என்னென்ன பாடல்கள் பாடுகிறார் என்பது இவருக்கு மனதளவில் அனைத்து நிகழ்வுகளும் கண்ணுக்கு எதிரே நடப்பது போல மனதுக்குள் தோன்றியது.
இது எவ்வாறு சாத்தியம்? நம்பியாரூரரை இவர் பார்க்கவில்லை; பேசவில்லை. இவர் யார் என்பது அவருக்கும் தெரியாது. ஆனால், அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இவரால் எப்படி மனதுக்குள் உணர முடிந்தது?
காரணம்... இவர் மனதால் ஆரூராரைக் குருவாக மானசீகமாக ஏற்றுக்கொண்டார். அங்கு, குறும்ப நாயனாரைப் பார்க்காத சுந்தரர்க்கும் மனதளவில் தெரியும். இரவும் பகலும் தன்னையே குருவாக ஏற்றுத் தன்னைப் பற்றிய சிந்தனைகளை மட்டுமே முழுக்கச் செலுத்தி வந்த ஒரு சிஷ்யனின் அன்பு சுந்தரருக்கும் அங்கு வெளிப்படத் தொடங்கியது.
அதனால் அவர் அஷ்டமா சித்திகள் எனப்படும் சித்திகளைப் படிக்காத, கோயில் பக்கம் செல்லாத, ஆடுகளை மேய்க்கும் ஒரு சாதாரண மனிதனுக்குத் தன்னை மானசீகமாகக் குருவாக ஏற்றுக்கொண்ட அவரின் உண்மையான குரு பக்திக்கு அவர் தந்த பரிசாகக் குறும்ப நாயனாருக்கு அருளினார்.
அப்பர் பெருமானை அப்பூதி அடிகள் பார்க்காமலேயே அவரின் அனைத்துச் செயல்களுக்கும் நாவுக்கரசர் என்ற பெயரை வழங்கிக் குருவாக ஏற்றது போல, இங்கு ஆரூரான் பெருமானைத் தனது மானசீகக் குருவாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துகொண்டே உள்ளத்தில் நிறுத்தினார் குறும்ப நாயனார். இது ஆரூரான் பெருமானுக்கும் நன்றாகவே தெரியும். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்ததில்லை, பேசியதில்லை, பழகியதில்லை.
ஆனாலும், அவர்களின் குரு - சிஷ்யன் அன்பானது மனதுக்குள் பரிமாறிக்கொண்ட பெரும் பந்தமாகும்.
இவருக்கு எப்போதெல்லாம் ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் முழுமூச்சாகச் சிவனையும் நம்பியாரூரான் பெருமானையும் மட்டுமே நினைத்து வழிபாடு செய்தார்.
'தியானம்' என்னும் உண்மைத் தன்மையை அறிந்து அதில் தன்னை நிலைநிறுத்தினார். இதன் மூலம் தனது மானசீகக் குருவான சுந்தரரிடமிருந்து அஷ்டமா சித்திகளைப் பெற்றார். அந்தச் சக்தி மூலம் அவர் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, எல்லாவற்றையும் உற்றுநோக்கும் திறன் கொண்டார்.
இது எல்லோருக்கும் கிடைக்க சாத்தியமில்லை. யோகிகள், மகான்கள், ரிஷிகளுக்கு மட்டுமே இந்த அஷ்டமா சித்திகள் அவர்களின் தவத்தின் மூலம் கிடைக்கப்பெறும். தன்னலம் விரும்புபவர்களுக்கு இது கிடைப்பது கிடையாது. காலம் காலமாகத் தவமும் யாகமும் வழிபாடும் செய்யாமல் இச்சித்திகள் எளிதில் கிட்டாது. ஆனால் குறும்பனாருக்கு இது எளிதில் கிடைத்தற்குக் காரணம் ஆரூரான் பெருமான்.
அப்படி இந்தச் சித்தியின் மூலம் சுந்தரர் (நம்பியாரூரர்) செய்யும் ஒவ்வொரு செயலும், அவர் பாடும் பாடல்களும் இவருக்குத் தெரிந்துகொண்டே இருந்தன. சொல்லப்போனால், உடல் மட்டுமே இங்கு இருந்தது; உயிரும் ஆன்மாவும் சுந்தரரோடு கலந்து இருந்தன.
இந்தநிலையில்தான், சுந்தரர் சேரநாட்டின் கொடுங்கோளூருக்குச் சென்று சேரமான் 'கழற்றிற்றறிவார்' அரண்மனையில் தங்கியிருந்து சிவபெருமானைப் பேசுகின்றார்; பதிகங்கள் பாடுகின்றார். இதைக் குறும்பர் மனதாரக் கண்டுகொண்டே இருந்த நேரம், சுந்தரருக்கு யானை வரும் விஷயமும் இவருக்கு முன்பே தெரிந்துவிடுகின்றது. இதனால், சுந்தரர் (நம்பியாரூரர்) பூலோக வாழ்வை முடித்து கைலாயம் ஏகுவது அடியாருக்குத் தெரிந்ததும் அலறினார்; துடித்தார். குரு இல்லாத பூமியில் தானும் வாழ்வது சாத்தியமில்லை என மனதுக்குள் கலங்கினார்.
எனவே, சுந்தரரின் (ஆரூரர்) வாழ்வு முடியும் முன்னரே தன் வாழ்வினை முடிக்க எண்ணினார். இவருக்கு அஷ்டமா சித்திகள் தெரிந்திருந்ததால், இவர் மூச்சு ஆற்றலின் மூலம் தனது மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவந்து (அதாவது இடகலை மற்றும் பிங்கலை நாசிகள் வழியாக ஓடும் மூச்சுகளைத் தனது மூச்சுப்பயிற்சி மூலம் ஒரு நிலையில் கொண்டுவந்து) கழுத்தில் நிறுத்தினார். பிரம்மரந்திரம் எனும் வழியை உடைத்து உயிர் நீத்தார். 'சகஸ்ராரம்' எனும் முக்கிய சக்கரம் அங்குதான் உள்ளது. அவரின் உடல் சரிந்தது; ஆனால், ஆன்மா சுந்தரரை (ஆரூரர்) வரவேற்க எதிர்கொண்டு காத்து நின்றது.
மறுநாளே, சுந்தரர் (நம்பியாரூரர்) பெருமான் வெள்ளையானையின் மீது கைலாயத்தில் வந்து இறங்கியபோது, அவரை எதிர்கொண்டு அழைத்து கைலாயம் ஏகினார் குறும்ப நாயனார்.
ஒரு சாதாரண ஆடு மேய்க்கும் குலத்தில் பிறந்து, சுந்தரரை (ஆரூர் பெருமான்) நேரில் பார்த்ததில்லை; பல்லாண்டு காலங்கள் தவங்கள் செய்ததில்லை. ஆனால், சிவனைச் சிந்தித்து... அவரின் மூலம் அவர் அடியாரான சுந்தரர் பெருமானைத் தன் மானசீகக் குருவாக ஏற்று... அன்பு என்னும் கயிற்றினால் அஷ்டமா சித்திகளைக் தன் குருவிடமிருந்து பெற்று கைலாயம் ஏகும் பாக்கியம் பெற்றார் குறும்ப நாயனார்.
குறும்ப நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும். இவரின் குருநாதரான சுந்தரர் கைலாயம் ஏகும் நாளறிந்து அதற்கு முன்னதாகப் பூதவுடலை நீத்தார். இதனால், இவரின் குருபூஜை சுந்தரரின் பூஜை நாளாகிய ஆடிச் சுவாதிக்கு முந்தைய நாள் சிறப்பிக்கப்படும்.
இவரின் குருபூஜை எல்லா ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டாலும், இவர் பிறந்த ஊரான பெருமிழலையில் (திருவீழிமிழலை வீழிநாதஸ்வரர் கோவிலில்) மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு இன்றளவும் சிறப்பாக இவரின் குருபூஜை நடந்தேறி வருகிறது.
"பெருமிழலை குறும்ப நாயனார் திருவடிகள் போற்றி போற்றி"
திருச்சிற்றம்பலம்
வாழ வைக்கும் வல்லாரைக்கு ஜே.. நினைவாற்றலைப் பெருக்கும் சூப்பர் கீரை!
பெருமிழலை குறும்ப நாயனார் திருவடிகள் போற்றி போற்றி!
சங்குப் பூவின் மகிமை தெரியுமா உங்களுக்கு.. தாய்லாந்தில் வேற லெவல் மகிமை இது!
நீதி ஆட்சியில்!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!
சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
{{comments.comment}}