"நீங்களும் வந்தா ஒத்தாசையா இருக்கும்".. (கோடாங்கி 10)

Apr 17, 2026,10:39 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


கள்ளிப்பட்டியின் அழகே விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுது தான்....


மல்லிகைத் தோட்டத்தில் இருந்து வீசும் மூக்கைத் துளைக்கும் மல்லிகைப்பூ வாசமும் ...


சேவல் கூவும் வேளையில் பகலவன் உதயம் தரும் முன்னே மாட்டுச்சாணம் கரைத்து வாசல் தெளித்து கோலம் இடும் குமரிப் பெண்களும்... 


தலையில் தலைப்பாகையும் தோளில் மண்வெட்டியுமாய் தோட்டத்திற்குச் செல்லும் உழவர்களும்...


வேப்பங்குச்சியை உடைத்து பல் தேய்த்துக் கொண்டே அரட்டை அடிக்கும் சில சிறுசுகளும் பெருசுகளும்... 


நிரம்பி வழியும் டீக்கடை பெஞ்சுகளும்....


 என அழகான காலைப்பொழுது...


வள்ளி இரண்டு மூன்று நாள்களாக சரியாகத் தூங்கவில்லை....


பேந்த பேந்த விழித்துக் கொண்டும்...


தனியாக பிதற்றிக் கொண்டும்...




யாரையாவது பார்த்தால் பயந்து ஒளிவதும்... என‌ ஆளே மாறிப் போயிருந்தாள் வள்ளி


ராமாயியும் சங்கை யாவும் கோடாங்கியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.


கருப்பையா 

வாய்யா.... கோடாங்கி சொன்ன பொருளெல்லாம் வாங்கிட்டியா ஐயா...

என்ற‌‌ ராமாயியிடம்...


கருப்பையா சில விசயங்களைக் கூறினார்....


ராமாயி என்‌ குடும்பத்துக்கு வந்த சோதனையாயா இது....என்று புலம்ப‌ ஆரம்பித்தாள்...


சங்கையா...

பெரியம்மா நான்‌ ஊருக்குப் போய் அம்மாவையும்,சிய்யானையும் கூட்டிட்டு வார்றேன்...வாத்தியாரும் வந்தா நமக்கு ஒத்தாசையா இருக்கும் பெரியம்மா என்றான்.


ராமாயி தலையசைத்தாள்....


ஏன்ப்பா கோடாங்கியெல்லாம் கூப்பிட்டீங்க...என்ற வாத்தியாரிடம்....எல்லோர் கிட்டயும் விபூதி பிடிச்சுப் போட்டுட்டோம் வாத்தியாரே....


அய்யனார் கோயில் பூசாரி தான் வள்ளியைத் தொட்டது கோடாங்கிக்கு தான் அடங்கும் னு சொல்லிட்டாரு... என்றான் சங்கையா


பிள்ளையக் கவனமாப் பாத்துக்கனும் பா ஆகாரம்லாம் சாப்பிடுதா....என்ற வாத்தியாரிடம் 


மல்லுக்கட்டி பெரியம்மா கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்குது என்ற சங்கையா...


வாத்தியாரே அம்மாவையும் சிய்யானையும் கூட்டிட்டு கெளம்புறேன்....


நீங்களும் வந்தா ஒத்தாசையா இருக்கும்னு சொல்லி வாத்தியாரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்....


கிராமம் முழுவதும் வள்ளியின் பேச்சு தான்


வள்ளி வாம்மா...சின்னம்மா கூப்பிட்டவுடன்.... எங்க கூப்பிடுறீங்க...நான் வரல...நீங்க போங்க ...அந்த ஆளு என்ன அடிப்பான்...என்றாள் வள்ளி....


சின்னம்மா.. சங்கையாவின் அம்மா...


வள்ளி மீது அளவற்ற அன்பு வைத்திருப்பாள்.காரணம்‌ அவளுக்கு பெண் குழந்தை இல்லை....வள்ளியைப் பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்வாள்‌.வள்ளி பெரிய மனுஷி ஆன போது ஒரு மாதம் ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய்..... கறியும் சோறும் ஆக்கிப் போட்டும், விதவிதமா பலகாரம் சுட்டுப் போட்டும் ....கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் ....


வள்ளியின் இந்த நிலைமையைப் பார்த்து அவளின் அழுகையை நிறுத்தவே அரைமணி நேரம் ஆயிற்று...


வள்ளியைக் கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆலமரத்தடிக்கு சென்றனர்....


வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடியிருந்தது... வள்ளியைக் கோடாங்கி முன் உட்கார வைத்தார்கள்....


கண்ணை மூடி குல தெய்வத்தைக் கும்பிட்டு அனைத்து தெய்வங்களையும் வணங்கி கோடாங்கியைக் கையில் எடுத்து நிமிர்ந்து பார்த்தார் கோடாங்கி....


(பேய் வரும்)


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).


முந்தைய அத்தியாயங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்